ஒரு நாள் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது கூடலூர் பனியர் இன மக்கள் கொண்டாடும் ‘பூ புத்தரி’ விழா. என்கிற செய்தியையும்; திருவனந்த புரம் ‘புத்தரி கண்டம்’ மைதானத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். என்கிற செய்தியையும் பாடித்தேன். இச்செய்திகளில் உள்ள ‘புத்தரி’ என்கிற சொல் என்னைச் சற்று சிந்திக்கவும் எழுதவும் தூண்டியது.
கூடலூர் பனியரின பழங்குடி மக்கள் இந்த ‘பூ புத்தரி’ என்ற அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். அறுவடைத் திருவிழா என்பதால் இது வேளாண்மையோடு தொடர்புடையது என்பது வெளிப்படை. நெல் வயல் அறுவடைக்கு ஆயத்தமானவுடன்; அறுவடை தொடங்கும்முன், ஐப்பசி மாதத்தில் இவ் விழாவைக் கொண்டாடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட நெல் வயலில் அவர்களின் பாரம்பரிய இசை முழங்க குலதெய்வத்தை வழிபட்டு கொஞ்சம் நெற்கதிரை அறுவடை செய்கின்றனர். அறுத்த நெற்கதிர்களை ஒருவர் சுமந்துவர அவர்களது பாரம்பரிய நடனத்தோடும் இசைக் கருவிகளின் முழக்கத்தோடும் ஊர் மன்றத்திற்கு கொண்டுவந்து பூசைகள் செய்து அதனை நான்கு பாகங்களாக பிரித்து அவ்வூரிலுள்ள கோயில்களுக்குக் கொண்டுபோய் மாலைவரை பூசைகள் செய்கின்றனர். பின்னர் நெற்கதிர்கள் விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப் படுகிறது. அவ்வாறு வழங்கப் பட்ட நெற் கதிர்களை பனியரின மக்கள் தங்கள் வீடுகளுக்குக் கொண்டுசென்று வழிபட்டு தங்கள் தங்கள் வீடுகளில் அக் கதிர்களை பத்திரப் படுத்தி வைத்துக் கொள்கின்றனர். பழமையும் இயற்கையும் சிதையாத இவ்விழா புகழ்ச்சிக்குரியது
அது என்ன திருவனந்தபுரத்தில் ஒரு புத்தரி கண்டம் ? புத்தரி என்றால் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல் ; கண்டம் என்பது வயல். இவ் வயலிலிருந்து திருவனந்தபுரம் பத்மநாப சுவாமிக்கும் தென் திருவிதாங்கூர் மனர்களின் அரண்மனையாகிய கௌடியார் அரண்மனைக்கும் தேவையான நெல்லைப் பயிரிட்டு பயன்படுத்தி இருகின்றனர்.இடைக் காலத்தில் இந்த வயல் நகர்மயமாதலால் மைதானமாக்கப் பட்டது தற்போது ஒரு சிறு பகுதியை மீண்டும் வயலாக மாற்றியிருக்கிறார்கள். அனந்தபுர திருத்தலத்திலும் ‘இல்லம் நிறை’ என்ற ‘பூ புத்தரி’ விழா தற்போது வரை கொண்டாடப் பட்டு வருகிறது இவ் விழாவிற்கான நெற்கதிர் இந்த புத்தரிக் கண்டத்திலிருந்தே எடுத்துவரப் படுகிறது. சபரி மலையிலும் நிறை புத்தரிசி என்று இவ் விழா கொண்டாடப் படுகிறது. இங்கே பிரசாதமாக நெற்கதிர் தரப் படுகிறது. இந்த நெற்கதிரை மக்கள் தங்கள் வீடுகளில் கட்டி வைத்துக் கொள்கின்றனர். இதனால் செல்வம் கொழிக்கும் என்கிற நம்பிக்கை.
இதைப் போன்றதொரு விழா குருவாயூரிலும் கொண்டாடப் படுகிறது. கன்னியாக் குமரி மாவட்த்திலும் ‘வீடு நிறைத்தல்’ என்கிற இவ்விழா மக்களால் கொண்டாடப் பட்டுத் தற்போது, வழக்கிறந்துள்ளது. இன்நிகழ்வில் மக்கள் தங்கள் வயலிலிருந்து கைப்பிடி அளவு நெற் கதிரை அறுத்துவந்து தங்கள் வீடுகளில் கட்டி வைப்பர் இதனைத் தொடர்ந்து அறுவடைக்குப் பின்னர் ஒரு நன்னாளில் புதரிசிச்சாப்பாடு என்னும் புதிய அரிசியைக் கொண்டு சமைத்து உண்ணும் நிகிழ்வும் சிறப்பு வாய்ந்தது. புத்தரிசிச் சாப்பாடு அன்று வகை வகையான உணவு வகைகள் இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அன்று மற்றுமோர் சிறப்பு, அன்று பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம். அன்று முழுதும் சாப்பாடும் கொண்டாட்டமும்தான்.
தமிழ் தேசியத் திருவிழாவான பொங்கலில் புத்தரிசி கொண்டு பொங்குதல் என்பது சிறப்புவாய்ந்தது.ஆனால் கால மாற்றம் காரணமாக புத்தரிசி என்பது கடையிலிருந்து வாங்கும் ஏதோ ஒரு அரிசியாகிவிட்டது “ என்ன அவசரம்? ஏன் அவ்வளவு அவசரம்? சென்று சென்று பார்க்கிறாயே, பால் பொங்கிற்றா என்று! அன்னை அறிவார்களே, எத்துணை நேரம் தழலிடை இருந்தால் பொங்கிப் பதமாகும், புத்தரிசி என்பதனை! உனக்கேன் அந்தத் தொல்லை; ஓராயிரம் தடவை சென்று கேட்கிறாயே - ஓஹோ! உன்னை உற்றாரும் நண்பர்களும் கேட்கிறார்களா - பால் பொங்கிற்றா என்று! "ஆம்' எனப் பதிலும் கூறவேண்டுமா” என்ற அறிஞர் அண்ணாவின் பொங்கல் குறித்த வரிகள் புத்தரிசி என்பதனை குறிப்பிடக் காணலாம்
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் மிக முக்கியமான உணவுப் பொருள் நெல். தமிழகத்தின் தேசியத் திருவிழாவான பொங்கல் திருவிழாவும் புத்தரிசியை மையமிட்டதே. உழவுத் தொழிலே மக்கள் அனைவரையும் தாங்கும் தொழில் எனவேதான் வள்ளுவர் “உழுவார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணி” என்கிறார். நவீன உலகத்தில் உழுபவனும் அவனது நிலமும் மதிப்புறு பொருளாக இல்லை. இந்நிலையில் மரபான விழாக்கள்சில உழுபவனையும் அவனது நிலத்தையும் கொஞ்சம் தாங்குகிறது. மேற்கண்ட விழா தொல்பழங்கால தமிழர் விழாவாக இருந்திருத்தல் வேண்டும். பூ புத்தரி, இல்லம் நிறை, புத்தரி, நிறை புத்தரிசி. போன்ற இவ்விழா குறித்த அனைத்துச் சொற்களும் தூயதமிழ்ச் சொற்களாக இருப்பது மேற்குறித்த கருத்திற்கு வலு சேர்க்கின்றன. புடவியை மாசு படுத்தி; உடலையும் மாசு படுத்தும் வணிக மயமாக்கப்பட்ட தீபாவளி வாழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக