சனி, 29 அக்டோபர், 2011

மலைகளை உடைத்து எறியும் அறியாமை ?

            வேரல் வேலி வேர் கோட் பலவின்
            சாரல் நாட செவ்வியை ஆகுமதி
            யார் அஃது அறிந்திசினோரே சாரல்
            சிறு கோட்டுப்பெரும் பழம் தூக்கியாங்கு, இவள்
            உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே -குறுந்தொகை
வேர்ப் பலாக்களுக்கு மூங்கில் வேலியிட்ட மலை நாட்டின் தலைவனே ! சிறிய கிளையில் தொங்கும் பெரிய பலாப்பழம் போல அவள் காதல் பெரிது  ஆனால் உயிர் மிகச் சிறியது . இதை அறிந்தவர் யார்.                                                    மேற்கண்ட பாடலும் விளக்கமும் தலைவியின் காதலை தலைவனுக்கு, தோழி உணர்த்துவதாக அமைந்த பாடலாகும். இப் பாடலில்  குறிஞ்சி நிலத்தின் அழகு எவ்வளவு ( மலையும் மலை சார்ந்த பகுதியும் ) அழகாக, இயல்பாக குறிப்பிடப்பட்டுள்ளது பாருங்கள். இவை நாம் வேகமாக இழந்து வரும் காட்சிகள். இப் பாடலில் ‘வேரல் வேலி’ என்ற சொல் என்னை  கொஞ்சம் சிந்திக்கச் செய்கிறது. வேரல் என்றால் மூங்கில் என்பது பொருள். எனவே வேரல் வேலி என்பது மூங்கிலால் செய்யப்பட்ட வேலி   என்பது பொருள். எனவே நமது முந்தயச் சமூகம் வீட்டிற்கோ அல்லது தோட்டத்திற்கோ வேலி அமைக்காமல் இல்லை. வேலி அமைத்து  பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள்ளேயே வாழ்ந்திருக்கிறார்கள்.ஆனால் நமது முந்தையச் சமூகம் அமைத்திருந்த வேலி எந்த வகையிலும் இயற்கையை மாசுபடுத்தாது, இயற்கையை அழிக்காது .                                              நவீன உலகம் நாகரிகம், நவீனம் என்ற பெயரில் இயற்கையை வேகமாக அழித்து வருகிறது. இவ் அழிப்பில் தோட்டங்களுக்கு அல்லது வீட்டிற்கு வேலி அமைப்பதும்  முக்கிய இடம் பெறுகிறது. நவீன உலகம் சுற்றுச்சுவர் அமைக்க பெரும்பாலும் சிமிட்டி செங்கலையே பயன்படுத்துகிறது. இச் செங்கல் எவ்வாறு செயப்படுகிறது? பெரும் மலைகளை உடைத்து கருங்கற்களாக்கி; பின்னர், அதனை கிறசற் எனப்படும் அரவை இயந்திரத்தில் அக்கருங்கற்களைப் போட்டு உடைத்துப் பொடியாக்கி சிப்ஸ் என்கிற நிலைக்கு அம்மலைகளை உருமாற்றி; மணலும் சிமிட்டியும் கலந்து சிமிட்டி செங்கல் செய்யப்படுகிறது. இச்செங்கல் கொண்டே நவீன உலகம் சுற்றுச்சுவர் அமைக்கிறது; வேலி அமைகிறது.இச் செங்கற்கள் கொண்டிருக்கும் மூலப் பொருட்கள்  என்ன ? கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை உருவாக்கிய மலை, இயற்கையின்  விளைவான ஆறுகளைச் சுரண்டி எடுக்கப்படும் மணல், இயற்கையைச் சுரண்டி உருவாகப் படும் காறைசிமிட்டி. மேற்கண்ட மூலப் பொருள்களில் ஒரு சிறு துண்டை நம்மால் உருவாக்க முடியுமா ? என்றால், அதற்குப் பதில்கூற முடியாது.  நவீன நகர்கள் விளைநிலங்களை அழித்து உருவாக்கப் படுகிறது; ஒழியட்டும்.ஒரு கிரவுண்டு அரை கிரவுண்டு என்று பாடம் பிரிக்கப்பட்டு நூறு, நூற்றைம்பது  வீட்டு மனைகள் உருவாக்கப் படுகின்றன . நூறு, நூற்றம்பது வீடுகளும் புதிதாக கட்டப்படுகின்றன அனைவரும் தனித்தனியாகச் சுற்றுச் சுவர் கட்டுவதுதான் இங்கே இயற்கைக்கு எதிரான பெரும் வன்முறை. அனைவரும் தனித்தனியாக சுற்றுச் சுவர் கட்டவேண்டும் என்று பரப்பியவன் எவன்,  அனைவரும் சேர்ந்து ஒரே ஒரு  சுற்றுச் சுவர்  கட்டினால் என்ன? நாம் செய்வது தவறு என்பது தெரியாமல் தவறைச்  சரியாகச்  செய்து வருகிறோம்; இயற்கையை அழித்து வருகிறோம்.                                            பனையோலை வேலி, பனை கருக்கு மட்டை வேலி, புதர் வேலி, தென்னையோலை வேலி, காட்டாமணக்கு வேலி, கள்ளிச் செடி வேலி, மண் வேலி,அதிகம் வறட்சியைத் தாங்கும் அரளிப்பூச் செடி கொண்டும் வேலி அமைக்கலாமே.  எனவே  பாரம்பரிய முறைகளை நகரங்களில் பரப்புவோம்; இயற்கையையை எதிர் வரும் தலைமுறைக்குத் தருவோம்.                                                                                        
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக