சனி, 28 ஜனவரி, 2012

வரகரிசிக் கஞ்சி , வரகரிசிப் பாயாசம்



 
“வட்ட வட்டப்  பறையிலே
      வரகிரிசி தீட்டயிலே
ஆருதந்த சோமன் சேலை
ஆலவட்டம் போடுதடி”
தொடக்கக் காலத்தில் பாறைகளில் தானியங்களைக் குவித்து வைத்து உலக்கையால் குற்றியிருக்கிறார்கள் . பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் மலைப் பகுதிக் கிராமங்களிலும் இப்படிப்பட்ட பாறைக் குழிகளையும் இவ்வழ  க்கத்தினையும்கூட இன்னும் காணலாம். என்ற பேரா. தொ. பரமசிவனின்   குறிப்பைப் பார்த்தால் , வரகரிசியை மக்கள் தீட்டிய நிகழ்வும் ,சிற்றூர் மக்கள் வரகை தங்கள் வாழ்வின் அங்கமாகப் பயன்படுத்தியுள்ளமையும் வெளிப்படையாக புலப்படும்
 மிகப் பழங்காலந்தொட்டே தமிழக வரலாற்றில் பதிவு பெற்றுள்ள வரகு சங்க இலக்கியங்களிலும் பல்வேறு இடங்களில் பேசப்படுவதைக் காணலாம்   
“மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப
மாமலை புலம்பக் கார்கலித்து அலைப்பப்” - ஐங்குறுநூறு 496, பேயனார்

“பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே”.- குறுந்தொகை 220 முல்லை திணை, ஒக்கூர் மாசாத்தியார்
பழைய மழையில் பூத்த புது வரகின் நுனியை ஆண்மான்கள் மேய பக்கத்தில் காட்டுப் பூனை சிரித்தார்ப்  போல அரும்புகள் மலர்ந்த முல்லை மலர்களை வண்டு மொய்க்கும் மாலைக் காலம் ஆகியும் சம்பாதிக்கச் சென்றவர் வரவில்லை பார்த்தாயா தோழி .   

“விதையர் கொன்ற முதையல் பூழி
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை
அரலை அம் காட்டு இரலையடு வதியும்” - நற்றிணை 121

  
“கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்” புறநானூறு 215  கோப்பெருஞ் சோழன் கவர்த்த கதிரயுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும்  
“எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி,
வரகுடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே”. - புறநானூறு 327

இவ்வாறு மக்கள் இலக்கியங்களிலும் செவ்வியல் இலக்கியங்களிலும் பதிவுபெற்று மக்களோடு புழங்கிய வரகு, மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து  அகன்றது நம் தமிழ் மக்களின் அறியாமையும், நமது பாரம்பரிய மரபுக் கூறுகளுக்கு நாம் தரும் தரம்தாழ்ந்த தரமும்,   வேற்றுப் பண்பாட்டு மோகமும் மட்டுமே காரணமாக இருக்க முடியும் .

சப்பாத்தி தயாரிக்கப் பயன்படும் கோதுமையில் 3 சதவீதம் நார்ச்சத்துதான் உள்ளது.​ 76 சதவீதம் சர்க்கரை சத்து உண்டு.​ அரிசியில் சர்க்கரைச் சத்து 78 சதவீதம் உள்ளது.​ அதாவது 2 சதவீதம் மட்டுமே கோதுமையைவிட அரிசியில் சர்க்கரைச் சத்து கூடுதலாக உள்ளது.​ ​ஆனால்,​​ குறுந்தானியமான வரகு அரசியில் 65 சதவீதம்தான் சர்க்கரை சத்து உள்ளது.​ 13 சதவீதம் அரிசியை விட மிகக் குறைந்த அளவு சர்க்கரை சத்து வரகு அரிசியில் உள்ளது.​ ஆனால்,​​ நம் பக்கத்தில் விளையும் வரகு அரிசிக்கு நாம் தகுந்த முக்கியத்துவம் தருவதில்லை என்பதுதான் கவலை தரும் செய்தியாகும் .இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட வரகை நானும் சுவைக்க விரும்பினேன். வரக ரிசிவாங்கிய கடைக்காரரிடம் வரகு குறித்து ஏராளம் செய்திகளை திரட்டிக் கொண்டேன் . அவர் கூறியதில் முக்கியமானது, வரகரிசி முப்பது நாட்கள் முதல் நாற்பத்தைந்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ஆனால் ஐந்து அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை எடுத்து  வெயிலில் நன்கு உலர்த்திப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

வரகைக் கொண்டு என்னென்ன   உணவு வகைகளைச்  செய்யலாம் ? வரகரிசிச் சோறு , வரகரிசி முறுக்கு , வரகரிசிக் கஞ்சி , வரகரிசிப் பாயாசம் போன்றவற்றை நாம் செய்ய முடியும். முதலில் நான் வரகுக்கஞ்சி செய்ய முயற்சித்து வெற்றியும் பெற்றேன். இதனை மிக எளிதாக நாம் தயாரிக்க முடியும். ஒரு குவளை வரகை எடுத்துக் கொள்ள வேண்டும் பாதி குவளை உளுந்து அல்லது சிறுபயறு எடுத்துக்கொள்ள வேண்டும் இரண்டனையும் சுத்தப்படுத்திக் கொண்டு முதலில் உளுந்து அல்லது சிறுபயறை சிறிது வேகவிட வேண்டும் பின்னர் வரகரிசியினை அதனோடு கலந்து வேகவிட வேண்டும் பின்னர்சிறிது  பூண்டு இளம் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வேகவிடவேண்டும் வெந்தபின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை சிறியஅளவில் எரியவிட்டு மற்றொரு அடுப்பில் வானலி  யில் சிறிது தேங்காய் எண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் சிறிது கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், சின்னவெங்காயம் போன்றவற்றை நன்கு வதக்கி வரகுக் கஞ்சியுடன் கலந்து சிறிது நேரம் மூடி வைத்துவிட வேண்டும் . தற்போது நாம் சுவைக்க நல்ல சத்தான வரகுக்கஞ்சி ஆயத்தம். தொட்டுக் கொள்ள கொள்ளுத் துவையல் சிறப்பானதாக இருக்கும்.
வரகுப் பாயாசமும் எளிதாகச் செய்யலாம். வரகு அரிசியையும் ​​ பாசிப்பருப்பையும்  லேசாக   வறுக்கவும்.தண்ணீரைக்  கொதிக்க வைத்து,​​ வறுத்த பாசிப்பருப்பை முதலில் போடவும்.பின்னர்,​​ வரகு அரிசியை போட்டு குழைய வேகவிடவும்.வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு,​​ வடிகட்டிய பாகை அரிசி கலவையில் விட்டு,​​ நன்கு கிளறி கொதிக்க விடவும்.பின் அதில் வறுத்த முந்திரி,​​ திராட்சை ,​​ ஏலக்காய் பொடி,​​ தேங்காய்,நெய்,​​ சிறிது பால் கலந்து   நன்கு கிளறி இறக்கவும்.சுவையான வரகரிசி சர்க்கரைப்  பாயாசம்  ஆயத்தம் . வரகரிசியைப் பயன்படுத்தி, வரகு உற்பத்தியைப் பெருக்கி எதிர்காலத்  தலைமுறைக்கு ஒரு சத்தான இயற்கை உணவைத் தருவோம். இயற்கை வேளாண்மை பெருகட்டும் .

1 கருத்து: