கிருஷ்ணகிரி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய எறும்புத் தின்னி காவேரிப் பட்டினம் அருகே உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்தது . ஊர்மக்கள் தகவல் தந்ததை அடுத்து வனத்துறையினர் அவ் எறும்புத் தின்னியை மீட்டு நோலகிரி வனப்பகுதியில் விட்டனர் . இச்செய்தியை நான் தொலைக் காட்சியில் பார்த்தபோது தமிழன் இழந்து வரும் பலவற்றுள் இதற்கும் ஏதோ பங்கு இருப்பதாக எனக்குத் தோன்றியது .
இந்த “எறும்புத் தின்னி” எனும் பெயர்ச்சொல் தமிழ்ச் சொல்லா ? என்று கேள்வி கேட்டால் பெரும்பாலும் எல்லோரும் ஆம் என்பர் . ஆனால் , இச்சொல் ஆங்கிலத்தில் வழங்கிவரும் ANTEATER என்னும் சொல்லின் மொழிபெயர்ப்பு ஆகும் . இங்கே மற்றுமோர் கேள்வி, தமிழ் நிலப்பரப்புக்குள் வாழும் ஒரு விலங்கிற்கு தமிழில் பெயர் இல்லையா ? ஆங்கில மொழிச் சொல்லை மொழி பெயர்துத்தான் நாம் பயன்படுத்த வேண்டுமா ? என்றால் இல்லை. நம்மிடம் “எறும்புத் தின்னி” க்கு உரித்தான தமிழ்ப் பெயர் “அழுங்கு” என்பதாகும். பின்னர் ஏன் நமது செய்தி ஊடகங்கள் மற்றும் மக்கள் உட்பட அனைவரும் “அழுங்கு” என்றச் சொல்லைப் பயன்படுத்தாமல் “எறும்புத் தின்னி” என்று கூறவேண்டும் ? நமது வாழ்வுக்கு ஆங்கிலம் மட்டுமே போதும் ; ஆங்கிலம் நமது வாழ்வை வளமாக்கும் என்ற குருட்டு நம்பிக்கையின் விளைவு இது .இதனால் நாம் இழந்து வருபவை கணக்கிட முடியாதவை .
“அழுங்கு” குறித்து எழுத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டு வாழ்ந்த மா . கிருஷ்ணன், 1954 – இல் “கலைமகள்” என்ற இதளில் எழுதிய கட்டுரையை இங்கே சுருக்கமாகத் தருகிறேன் .
“அழுங்கு தாடையில் பல்லில்லாத ஒரு மிருக வகையைச் சார்ந்தது . இவ்வர்க்கத்தில் வேறு தேச எறும்புத் தின்னிகளும் பல உண்டு .இவை பல்லில்லாததால் கடினமான பதார்த்தங்களை உட்கொள்வதில்லை. எறும்பு , கறையான் முதலிய மிருதுவுடல் பிராணிகளைப் பிசின் போல் எச்சிற் பற்றுள்ள நீண்ட நாக்கால் இது நக்கித் தின்னும் .
அழுங்கு சுமார் 2.5 அடி நீளம் இருக்கும் . இதில் பாதி வால் நீளம் . மேலேங்கும் நாட்டோடு கொண்ட கூரை போல் இதன் மயிர் சிவந்த ஓடுகளாய் மாறி ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கியிருக்கும் . இது தன் உடலை வளைத்தால் ஓடுகள் பிரிந்து எழும்பித் தங்கள் கூரிய விளிம்புகள் புறப்பட நிற்கும் . எதிரிகளைக் கண்டால் அழுங்கு தன் தலையை வயிற்றோடு ஒட்டி மடக்கி ,வாலைச் சுருட்டிக் கூரிய ஓடுகள் போர்த்தப் பந்தாக மாறிவிடும் எதிரிகளால் இதை லேசில் கொல்ல முடியாது . அழுங்கு நன்றாக மரமேறும் . மரங்களினின்று கீழே விழுந்தாலும் பந்துபோல் சுருண்டு தன் கடினமான ஓடுப்போர்வையின் பாதுகாப்பால் காயம் படாது தப்பிக்கொள்ளுமாம் .
அழுங்கு தன் நீண்ட வாலைத் துடுப்பாக உபயோகித்து நீந்தும் . இந்த வால் கிளைகளைச் சுற்றிப் பிடித்து மரமேறும்போது ஐந்தாவது காலாகவும் உதவும் . பகற்பொழுதில் ஆழமான வளைகளில் அழுங்கு படுத்திருக்கும் .இரவில்தான் அது சாதாரணமாக வெளிவரும் . அழுங்கின் முன்கால்கள் மரமேறுவதற்கும் பூமியில் தோண்டுவதற்கும் மிகப் பொருத்தமுடையவை . முன்கால் நகங்கள் நீண்டு வலிமை கொண்டிருக்கும் . அழுங்கு தன் முன்கால்கள் விரல்களை மடக்கி முட்டிமீது நடப்பதால் நகங்கள் தேய்வடைவதில்லை .கறையான் புற்றைக் கண்டதும் தன் பெரு நகங்களால் புற்றைத் தகர்த்து , வெளிவரும் சிதல்களை நக்கித் தின்னும்” .
நன்றி : மழைக்காலமும் குயிலோசையும் - மா கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் (தொகுப்பாசிரியர் சு . தியடோர் பாஸ்கரன்) காலச்சுவடு பதிப்பகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக