நான் திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எனது சொந்த ஊருக்கு வருவதற்கும் போவதற்கும் தொடர்வண்டியைப் பயன்படுத்துவது வழக்கம்.மாலை வேளையில் சிற்றுண்டிக்காக திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தின் வலதுஓரத்தில் இருக்கும் இந்தியன் காப்பி இல்லதிற்குச் (Indian Coffee House) செல்வதுண்டு . கம்பிச்சுருள்போல வெளிப்புறப்பூச்சு இல்லாமல் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும் அந்தக் கட்டடம் என்னைக் கவர்ந்த ஒன்றாகும் . கம்பிச்சுருள்போல இருக்கும் அந்தக் கட்டடத்தின் நடுப்பகுதியில் வட்டவடிவாக இருக்கும் அறைகள் உணவுப் பொருள்கள் சமைப்பதற்கும், சமைத்த உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தேவைப்படும் பாத்திரங்கள் வைக்கவும் இன்னும் பலவற்றிற்கும் பயன்படுத்துவர் . சுற்றிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ண நீண்ட இருக்கைகள் அமைக்கப் பட்டிருக்கும் இந்த இருக்கைகள் அனைத்தும் செங்கல்லாலும் சிமிட்டியாலும் அமைக்கப் பட்டிருக்கும்.
இயல்பாக நாம் ஒரு சப்பாத்தில் நடந்து செல்வதுபோல நடந்தே நாம் மேல்மாடி வரைசென்று எந்த நெருக்கடியும் இல்லாமால் உணவு உண்டு திரும்ப முடியும். அப்போது, இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், அந்த கட்டடத்தின் வடிவம் மட்டும் என் மனதில் நிலைத்து விட்டது . பின்னர் இக் கட்டிடத்தின் வடிவமைப்பாளர் திரு . லாரி பேக்கர் பற்றி நான் தெரிந்து கொண்டபோது ஒரு கட்டிடத்திற்குள் இவ்வளவு நுட்பங்களா என்று எண்ணி வியந்தேன் .
ஒரு கட்டடம் என்பது நிலத்தோடும் பருவச் சூழலோடும் பொருந்த அமைந்தால் மட்டுமே நாம் அதனுள் இயல்பாகப் புழங்கவும், கலவரம் இல்லாமால் வாழவும் முடியும். இயற்கையை, நாம் பாதுகாக்கவும் முடியுமென்பதை அறிந்து வியந்தேன். அந்த வகையில் திரு . லாரி பேக்கர் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு ஆளுமையாவார்.
கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் உதிவியோடு இங்கே திரு. லாரி பேக்கரை அறிமுகம் செய்கிறேன்
லாரி பேக்கர் (Laurence Wilfred "Laurie" Baker) ஒரு புகழ் ஈட்டிய இந்தியக் கட்டிடச் சிற்பி (கட்டடக் கலைஞர்). இந்தியாவில் கட்டிட வடிவமைப்பாளாராக பணியாற்றினார். உள்ளூர் பொருட்களைக் கொண்டு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான வீடுகளைக் கட்டும் முறையை உருவாக்கினார். இவ்வீடுகளின் உள்வெளியையும் இடத்தையும் தனித்தன்மையுடன் திறம்பட வகுத்துப் பயன்படுத்தினார். அது பேக்கர் பாணி வீடு என்று சொல்லபப்டுகிறது.
லாரன்ஸ் வில்ப்ரட் பேக்கர் [Laurence Wilfred Baker] 1917ல் பிரிட்டனில் பிறந்தார். சிறுவயதிலேயே அவரது ஆர்வம் ஓவியங்களில் குறிப்பாக கோட்டோவியங்களில் இருந்தது. ஆரம்பத்தில் அவர் வாழ்ந்த லண்டனின் கட்டிடங்களை கோட்டோவியங்களாக வரைந்திருக்கிறார். அவரது குடும்பம் கிறித்தவ மெதடிஸ்ட் பிரிவைச் சார்ந்தது.
பிரிமிங்ஹாம் ஓவிய மற்றும் வரைகலைக் கல்லூரியில் Birmingham Institute of Art and Design கட்டிட வரைகலையைப் படித்தார் பேக்கர். இளமையிலேயே அவருக்கு கிறித்தவ மதத்தின் இறுக்கமான நம்பிக்கைசார்ந்த வழிபாட்டுமுறைகள் அலுப்பூட்டின. அக்காலத்தில் முன்னோக்கு கருத்துடைய குவாக்கர்கள் (Quakers) என்ற மத அமைப்பில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு சுதந்திரமான கிறித்தவ சபையினர். நண்பர்களின் சமயக் குமுகாயம் (Religious Society of Friends) என்று அவர்களின் அமைப்புக்குப் பெயர். மாதம் ஒருமுறைகூடி பொது வழிபாடுகளையும் சொற்பொழிவுகளையும் நிகழ்த்துவார்கள்.
பட்டம்பெற்றபின்னர் பேக்கர் குவார்க்கர் அமைப்புடன் இணைந்து மருத்துவசேவைகளில் ஈடுபட்டார். அந்நாட்களில் ஐரோப்பாவில் உலகப்போருக்கான தொடக்கங்கள் நிகழ்ந்தன. லாரி பேக்கர் ராணுவத்தில் சீனாவிலும் பர்மாவிலும் மருத்துவக் களப்பணியாற்றினார். போர் அவருக்கு ஐரோப்பிய தொழில் மயமாக்கல்மேலும் அறிவியலை வழிபட்ட நவீனத்துவத்துவம் மேலும் ஆழமான அவநம்பிக்கையை உருவாக்கியது. ஐரோப்பாவில் வாழக்கூடாது என்று முடிவெடுத்தார்.1944ல் பர்மாவில் இருந்து லண்டனுக்குச் செல்ல கப்பலுக்காக கல்கத்தாவில் காத்திருக்கும்போது அவர் அங்கிருந்த குவாக்கர்களின் சந்திப்புக்குச் சென்றார். அப்போதுதான் அவருக்கு காந்தியைப் பற்றிய தகவல் கிடைத்தது. காந்தி அப்போது கல்கத்தாவில் இருந்தார்.சிரித்தபடி பேக்கர் சொன்னார் ”காந்தியின் காது விபரீதமாக இருக்கும் என்றார்கள். எனக்குச் சொன்ன நண்பர் ‘கெட்டில்பிடிக்காதுள்ள மனிதர்’ என்று சொல்லி கேலிச்சித்திரம் வரைவதற்கென்றே உருவாக்கப்பட்டவை அவை என்றார். அதுதான் என்னை அவரிடம் செல்லவைத்தது…”
பேக்கருக்கு கேலிச்சித்திரங்கள் ஒரு பொழுதுபோக்கு. அவை நூலாக வந்துள்ளன. கேலிச்சித்திரம் வரைவதற்காக அவர் காந்தியைப் பார்க்கச்சென்றார். காந்தியைச் சந்திக்கும்வரை அது ஒரு முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்ற ஐயமே அவருக்கு இருக்கவில்லை. பேக்கரிடம் காந்தி அவரது துறையைப் பற்றிக் கேட்டார். பேக்கர் அவர் எளிமையான வீடுகளை உருவாகக் விரும்புவதாகச் சொன்னார்.காந்தி சொன்ன இரு விஷயங்கள் பேக்கரை பின்னர் ஐம்பது வருடம் பின் தொடர்ந்து வந்தன. ஒன்று, உணவு உடை வீடு ஆகிய மூன்றுமே மனிதனுக்கு எளிமையாகக் கிடைக்கவேண்டும். அவற்றுக்காக அவன் வாழ்நாள்முழுக்க போராடக்கூடாது. இரண்டு, நவீன வீடுகளின் மிகப்பெரிய சிக்கல் அவற்றில் பெரும்பகுதிச் செலவு போக்குவரத்துக்கு ஆகிறது என்பதே.
லண்டன் திரும்பிய பேக்கர் காந்தியின் வரிகளில் இருந்து மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டே இருந்தார். காந்தி சொன்னதன்படி ‘இந்தியாவின் கிராமங்களை தரிசிக்க’ அவர் கிளம்பி இந்தியா வந்தார். அது அவரது வாழ்க்கையின் திருப்புமுனை. 1945ல் உலக தொழுநோய் பணிக்கழகம் [World Leprosy Mission] என்ற அமைப்புக்காக கட்டிட வரைகலையாளராக பேக்கர் இந்தியாவுக்கு வந்தார். ஆனால் மீண்டும் அவர் கந்தியைச் சந்திக்கவில்லை.
வீட்டின் கட்டுமானப் பொருட்களின் விலையில் அறுபதுசதவீதம் வரை அந்தபொருட்களை கொண்டுவந்து சேர்க்கும் செலவாக இருக்கிறது. ‘ஒருபிராந்தியத்தில் கிடைக்கும் பொருட்களையும் திறமையையும் மட்டுமே பயன்படுத்தி அங்கே வீடுகளைக் கட்டுவது’ — ஒற்றை வரியில் இதுதான் லாரி பேக்கரின் கட்டுமானக் கொள்கை. கேரளம் உயர்தரமான களிமண் கிடைக்கும் இடம். நல்ல கிளிஞ்சல்சுண்ணாம்பும் கிடைக்கிறது. மரம் தேவைக்கு உள்ளது. இவையே தரமான கட்டுமானத்துக்குப் போதும். சிமெண்ட், இரும்பு ஆகியவை கேரளத்துக்கு வெளியே இருந்து வருகின்றன. அவற்றை கூடுமானவரை தவிர்க்கலாம்.
இதற்காக பேக்கர் உருவாக்கிய கட்டிட மாதிரி சுவருக்குச் செங்கற்களை நடுவே கொஞ்சம் சிமிண்ட் சேர்த்த காரை [சுண்ணாம்பு மணல் கலவை] வைத்து கட்டி மேலே சிமிண்ட் பூச்சு இல்லாமல் அப்படியே விட்டுவிடுவதாகும். கூரைப்பரப்பை கொஞ்சமாக கம்பி வைத்து அவற்றின் மீது ஓடுகளை பரப்பி அவற்றுக்கு மேலே கொஞ்சம் சிமிண்ட் சேர்த்த காரை பூசி உருவாக்குவார்கள். செங்கல்லால் சாத்தியமான எல்லா இடங்களிலும் வளைவுகளை அமைத்தால் அவை கூரையின் எடையை அற்புதமாக தாங்கும். ஆகவே அதிகமான இரும்பின் உபயோகம் இல்லை.
மரபார்ந்த வீடுகளில் இருந்து உத்திகளைக் கற்றுக்கொள்வது பேக்கர் வீடுகளின் பாணி. உதாரணமாக கேரளம் அதிக மழையுள்ள பகுதி. ஆகவே கூரைகளை மிகச்சரிவாக அமைப்பது அங்குள்ள வழக்கம். பேக்கர் கூரைகளில் நிறைய கூம்புகளை பயன்படுத்தினார். வெக்கை கொண்ட கேரளச் சூழலுக்கு அதிக காற்று வரும்படி திறந்த பகுதிகள் அமைந்த வீடுகளை அவர் வடிவமைத்தார். பேக்கரின் கொள்கைப்படி வீட்டுக்கு பகலில் எந்தவிதமான ஆற்றலும் தேவையாகக் கூடாது. காற்றும் ஒளியும் இயல்பாகவே இருக்க வேண்டும்.
பேக்கர் வீடுகளின் மிக முக்கியமான சிறப்பம்சம் அவை உட்கார்வதற்கான பலவகையான திண்ணைகளைக் கொண்டவை என்பதே. பேக்கரைப் பொறுத்தவரை இந்தியச் சூழலில் அமர்வதற்கு திண்ணைகளே மிகவும் ஏற்றவை. குளிர்நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட சோ·பாக்கள் இங்கே மிக மிக வசதிக்குறைவானவை. சில்லென்ற திண்ணைகள் பல கோணங்களில் அமைந்த பேக்கர் வீடுகள் சட்டென்று பிரபலம் அடைந்தன.
இந்தியா சுதந்திரம்பெற்றபின் பேக்கர் கேரள அரசியல்வாதியான டாக்டர் பி.ஜெ.சாண்டியின் ஆதரவுடன் கேரளா வந்தார். 1948ல் சாண்டியின் சகோதரியான மருத்துவர் எலிஸபெத் ஜேக்கப்பை மணம் புரிந்துகொண்டார். அவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தில் உள்ள பிதோராகர் என்ற ஊருக்குச் சென்று குடியேறினார்கள். பதினாறு ஆண்டுகள் அங்கே வாழ்ந்த பேக்கர் அப்பகுதியில் தன் செலவுகுறைவான சுதேசி வீடுகளை பலவகையிலும் பரிசோதனை செய்து பார்த்தார். குறிப்பாக சிமிண்ட் கூரைப்பரப்பை [டெரஸ்] போடுவதற்கு இரும்புக்கம்பிகளுக்குப் பதில் மூங்கில்களை பயன்படுத்த முடியும் என்று அவர் கண்டுபிடித்தார்.
1966இல் பேக்கர் பீர்மேட்டுக்கு வந்து தங்கி அங்கே பழங்குடிகளுக்கான வீடுகளை வடிவமைத்தார். 1970 இல் அவர் திருவனந்தபுரத்தில் குடியேறினார். பேக்கரின் வீடுகள் மேல் மக்களுக்கு ஓர் ஐயம் இருந்துகொண்டே இருந்தது, அவை உறுதியானவைதானா என்று. அதைப்போக்கும் வகையில் பேக்கர் பெரிய கட்டிடங்களை உருவாக்க ஆரம்பித்தார். 1971ல் அவர் திருவனந்தபுரத்தில் அமைத்த வளர்ச்சி ஆய்வுகளுக்கான மையம் [ Central for Development Studies ] அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது. திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் காபி ஹவுஸ் பேக்கர் பாணி கட்டிடத்துக்குச் சிறந்த உதாரணமாகும்.
லாரி பேக்கரின் கட்டிடங்கள் சடென்று பலவகையிலும் புகழ்பெற்றன. ஒன்று அவை மாறுபட்ட காட்சியழகை உருவாக்கின. தேவன் போன்ற ஓவியக்கலைஞர்கள் அவரிடம் பயிற்சி பெற்றபின் உயர்தர விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவநிலையங்கள் போன்றவை அவரது பாணியில் கட்டிடங்களை அமைக்க ஆரம்பித்தன. குறிப்பாக மருத்துவர்கள் அவரது கட்டிடங்கள் நோயாளிகளுக்கு ஆறுதலானவையாக இருப்பதாக உணர்ந்தார்கள். லாரி பேக்கரின் கட்டிடங்கள் மரங்கள் அடர்ந்த கேரளசூழலுடன் இணைந்து கண்ணுக்குத் தெரிபவை. ஆடம்பரம் இல்லாமல் அழகுடன் திகழ்பவை.
பேக்கர் கட்டிடக்கலையின் பல சிறப்பம்சங்களை சொல்லலாம். அவற்றில் ஒன்று கட்டிடங்களுக்காக தரையை சமப்படுத்தாமல் இருப்பது. தரை எப்படி இருக்கிறதோ அதற்கேற்ப கட்டிடத்தை வடிவமைத்துக்கொள்வது. பெரிய மரங்களை வெட்டாமல் அவற்றையும் தக்கவைத்துக்கொண்டு கட்டிடங்களை உருவாக்குவது. குளிரூட்டும் வசதிக்காக பேக்கர் உருவாக்கிய உத்தியும் புகழ்பெற்றது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்குவதுதான் அது. அதனருகே நீரில் தொட்டுக்கொண்டு சுட்டசெங்கல்லால் ஆன சுவர் இருக்கும். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியைச் செய்யும்!
பேக்கருக்கு களிமண்- சுண்ணாம்பு- கருங்கல் மேல் அபாரமான பிரேமை இருந்தது. அவர் திரும்பத் திரும்ப அதைப்பற்றிப் பேசினார். அவை சுற்றுச்சூழலுக்கு சாதகமானவை. ஒருபோதும் அவை பூமியை மாசுபடுத்தும் குப்பையாக ஆவதில்லை. ஒரு வீட்டை இடிக்க நேர்ந்தால் அவற்றை நாம் திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம். அவை நம் மண்ணில் இருந்து உருவாகின்றவை ஆதலால் நம் சூழலுடனும் நம் உடலுடனும் மிக மிக ஒத்துப்போகின்றவை. ஒருபோதும் தீங்கு செய்யாதவை.
இத்தனை தரமான களிமண் கிடைக்கும் ஒரு தேசம் அதை மிகக்குறைவாகவே பயன்படுத்துவது ஒரு பெரும் பொருளியல் குற்றம் என்றார் பேக்கர். சிமென்ட் மேலைநாடுகளில்கூட குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்தியா மிக அதிகமாக சிமெண்டை பயன்படுத்துகிறது. அதன்மூலம் இயற்கை வளங்களை, ஆற்றலை, உழைப்பை அது வீணடிக்கிறது. சரியான வகையில் வடிவமைக்கப்பட்ட செங்கல் கட்டிடம் சிமிண்ட் கட்டிடங்களை விட பலமானது. சொல்லப்போனால் சிமெண்ட் இந்தியாவின் வெப்பநிலையில் நீடிக்கக்கூடிய தொழில்நுட்பம் அல்ல என்று அவர் எண்ணினார். கடற்கரைப் பகுதிகளில் சிமெண்ட் மேலும் அழியக்கூடியதாக உள்ளது.
உற்பத்தி நுகர்வு இரண்டும் ஒரே இடத்தில் நிகழ வேண்டும் என்பதே காந்தியின் பொருளியல் கோட்பாட்டின் அடிப்படை. அவற்றுக்கு இடையே தூரம் அதிகமாகும்தோறும் செலவு அதிகரிக்கும். அதைவிட நுகர்வின் தேவைகள் உற்பத்தியை கட்டுப்படுத்தாமல் ஆகும். அடிப்படையில் காந்திய தரிசனம் என்பது ‘மையப்படுத்தலுக்கு நேர் எதிரானது’ எனலாம். அனைத்தையும் அது பரவலாக்க விழைகிறது. அதிகாரம், நிர்வாகம், உற்பத்தி எல்லாவற்றையும் . பேக்கரின் கட்டிடக்கலை அந்த சாராம்சத்தை ஏற்றுக்கொண்டது. அவரது வீடு என்பது ஒரு பிராந்திய மக்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப அங்கே கிடைக்கும் பொருட்களால் அவர்களே உருவாக்கிக் கொள்வது மட்டுமே.
1990ல் அவரது சேவைகளுக்காக இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை அளித்துக் கௌரவித்தது. பேக்கர் தன் 90 ஆவது வயதில் 2007 ஏப்ரல் மாதம் உயிர்துறந்தார். பேக்கரின் வாழ்க்கையை கௌதம் பாட்டியா ஒரு குறிப்பிடத்தக்க நூலாக எழுதியிருக்கிறார். [Laurie Baker - Life, Works & Writings . Gautam Bhatia]
லாரிபேக்கரின் வாழ்க்கை ஒரு ஆன்மீகத்தேடல் என்று சொல்லலாம். அவரது தியானம் களிமண்ணிலும் கல்லிலும் சுண்ணாம்பிலும் அமைந்திருந்தது. ஒவ்வொரு மனிதனும் சமூகத்துக்கு தான் அளிக்கும் பங்களிப்பின் மூலம் தன்னைக் கண்டடையவும் முழுமை செய்துகொள்ளவும் முடியும் என்ற காந்திய தரிசனம் அவரை கடைசிவரை வழிநடத்திச் சென்றது.
கலையும் பல்கலைக் கழக கல்விச் சூழலும்
எனது முதுகலைப் பட்டப் படிப்பு திருவனந்த புரத்தில் நிறைவடைந்த பிறகு ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புக்காக திருநெல்வேலியில் இயங்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். இப்பல்கலைக் கழகம் வெப்பம் மிகுந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது . பல்கலைக் கழகத்திற்குப் போகும்போது பேருந்தில் இருந்து இறங்கி பல்கலைக் கழக தலைமை நுழைவு வாயிலை அடைய தோராயமாக ஒரு கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டியிருக்கும். வருத்தும் வெயிலில் வெக்கையை உணர்ந்தவாறே நடந்து பல்கலைக் கழகத்தை அடைந்தால் ஒருவித குளிர்ச்சியை பல்கலைக் கழகத்திற்குள் உணர முடியும் இப்பல்கலைக் கட்டிடமும் வெளிப்புறப் பூச்சு இல்லாத செங்கல்லால் கட்டப்பட்ட கட்டடமாகும். மட்டுமல்ல கட்டடத்தின் அமைப்பு மற்றும் வடிவம் குளிர்ச்சியைத் தக்கவைக்கிறது என்பதை உணர்ந்து பூரிப்படைந்தேன். இப்பல்கலைக் கழக கட்டிடம் நூறு விழுக்காடு அந்த நிலப்பரப்பின் பருவச் சூழலுக்கு பொருந்துகிறது . அக் கட்டிடத்திற்குள் புழங்குபவர்களை மகிழ்விக்கிறது. நமது மனம் போன்றே கட்டடத்திற்கும் மனம் உண்டு. நாம் வடிவமைக்கும், கட்டும் கட்டடம் ஆன்மாவுக்கும் உடலுக்கும் பருவச் சூழலும் பொருந்தும் ஒன்றாக இருக்க வேண்டும் . நாம் கட்டும் கட்டடம் இயற்கையைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். பெருந்தச்சன் – ARCHI TECT
தூய உலகை உருவாக்குவோம்
பதிலளிநீக்குungal muyarchikalukku nangal kaikoduppom.vasaharhal peruha valthukkal.ungal arasiyal karuthukkalayum veliedungal.
பதிலளிநீக்குசிறப்பு எனது ஊரில் லாரி பேக்கர் முறையில் வீடு கட்டி உள்ளேன் 11 சதுரத்தில்
பதிலளிநீக்கு