வெள்ளி, 21 அக்டோபர், 2011

பனைமரம் என்ற உணவு



 
                       தொல்காப்பியத்தின் உயிர் மயங்கியல் நூற்பா ஓன்று ‘பனை முன் கொடிவரின்’ என்று பனைக் கொடிக்கு விதி கூறுகிறது இங்ஙனம் பனைக்கொடியை தனியே எடுத்துக் கொண்டு ஆசிரியர் விதி கூறுதலிநின்று பனை இலச்சினை பொறிக்கப் பட்ட கொடி அதிகஅளவில் மக்களோடு புழங்கியது என்று கொள்ளலாம். பனைக்கொடி கண்ணனின் அண்ணன் பலராமனின் கொடியாகும் . மூவேந்தருள் சேரர் பனம்பூ மலையை தமது அடையாள மாலையாகக் கொண்டிருந்தனர் . தமிழ்நாட்டு அரசின் அடையாள மரம் பனைமரமாகும் . இவ்வாறு பனைமரமானது வரலாறு தொடங்கிய காலம் தொட்டு தமிழக இறை, இயற்கை, அரசியல் , இலக்கியம் ,பண்பாடு, மக்கள் என பல்வேறு தளங்களில்  பயணம் செய்து இன்றளவும் உயர்ந்து நிற்கிறது.
               காலமாற்றத்தில் சமூக பண்பாட்டுக் கலப்பும்  தவிர்க்க முடியாததுதான். இக்கலப்புகள் தமிழக மக்களிடையே பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டன  ; இம்மாற்றம், காலம்காலமாகத்  தம்மோடு இரண்டறக் கலந்து வாழ்ந்த பனைமரம், அது உருவாக்கிய உணவு , புழங்கு பொருட்கள் சமூகம்,பொருளாதாரம் என அனைத்தும் இந்த மண்ணிலிருந்து   தேடினாலும் கிடைக்காத அளவிற்கு அப்புறப்படுதிவிட்டது
                 பனைமரம் தரும் உணவு நூறு விழுக்காடு  இயற்கையானது காரணம் பனைமரத்தை யாரும் உரம்போட்டு மருந்து தெளித்து வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாக வளர்ந்து இயற்கையான உணவைத் தருகிறது. ஆனால் நவீன உலகம் கவர்ச்சியானை விளம்பரங்களால்   பொட்ட லப் படுத்தப்பட்ட உணவின் பின்னே சென்றுகொண்டிருக்கிறது. எனவே பனை தரும் உணவு பதிவுசெய்யப்பட்டு  வருங்கால தலைமுறைக்கு காட்சிப் பொ ருளாகவாவது தரவேண்டியது நமது கடமை .
                   பனைமரம் நேரடியாக நமக்குத் தரும் உணவு நுங்கும் பதநீரும் ஆகும் . அப்பதநீரை அக்கானி என்றும் அழைப்பர் . நுங்கையும் பதநீரையும் சேர்த்து கலந்து சுவைப்பது தனி அனுபவம் . பதநீரை அதற்கான சட்டியில் இட்டு குறிப்பிட்ட வெப்பநிலை வரும்வரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற பனை வெல்லத்தினைப் பெறமுடியும் . பனை வெல்லம் கொண்டு பல்வேறு இனிப்புப் பண்டங்கள் செய்யமுடியும் . கருப்பட்டிக் காப்பியும் செய்து பருகமுடியும் . கருப்பட்டிக் காப்பியில் கைச்சுத்து முறுக்கைப் பொடித்துப் போட்டு காப்பி குடிப்பது தனிசுகம் . எங்கள் குமரி மாவட்டத்தில்  கருப்பட்டி கலந்து செய்யப்படும் பணியாரம் தனித்தன்மை வாய்ந்தது .
               பதநீரை காய்ச்சும்போது அது கருப்பட்டியாக உருவவதற்குமுன் பாகு (கூழ் ) போன்ற நிலையை அடையும் . அப்போது மரவள்ளிக் கிழங்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அப்பாகுடன் கலந்து கிளறி அது கருப்பட்டியாக இறுகும் நிலையில் இறக்கி வைத்துவிட வேண்டும்; அப்போது கிழங்கு நன்கு வெந்துவிடும். சிறிது நேரம்கழித்து சூடு ஆறியவுடன் கருப்பட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் கிழங்கை   எடுத்துச்சுவைத்தால்  சுவையுடையதாக இருக்கும் . இச்சுவை இறையனுபவம் போன்றது .
                   பனை தரும் உணவு வரிசையில் பனங்கிழங்கு, பனம்பழம் போன்ற வற்றிர்க்கும் முக்கிய இடம் உண்டு பனங்கிழங்கு  ஊட்டச்சத்து மிகுந்த ஒரு கிழங்காகும். பனம்பழத்தை தீக்கனலில் நன்கு சுட்டு பின்னர் மேல் தோலினை நீக்கி கொட்டைமீது ஒட்டிக்கொண்டிருக்கும் சக்கையை அருவாள் கொண்டு கொத்தி தனியே பிரித்தெடுத்து ஒரு பானையில் போட்டு பனங்கருப்பட்டி சேர்த்து சிறிது வேகவிட்டு எடுத்து சுவைக்க, இவ் இயற்கைப் பக்கணத்தின் சுவைக்கு நிகரான வேறு எதுவும் இல்லை. கோக்கும், பிஸ்கெட்டும் கேக்கும் ,நூடுல்சும் ஆட்சி செலுத்தும் இடத்தில் பனைஉணவை எங்கு தேடுவது.  
           நன்றி : Softview Media College , Tamil Heritage Foundation       
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக