வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளிவந்தபோது ‘ஐயா வாரணம் என்றால் என்ன ஐயா’ ? என்று விடையைத் தெரிந்து வைத்துக் கொண்டே என்னைப் பல மாணவர்கள் கேட்டனர். திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற அரசின் திட்டத்தில் விளைந்த சிறு நன்மைகளுள் இதுவும் ஓன்று மாணவர்கள் ஒரு பழந்தமிழ்ச் சொல்லை கற்றுக்கொண்டார்கள்.
யானையைக் குறிக்க ஆங்கிலத்தில் எத்தனைச் சொற்கள் உள்ளன ? என்று நான் மாணவர்களிடம் கேட்டேன் மாணவர்கள் யானையைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களைத் தேட ஆரம்பித்தனர். Elephant , Tusker , Pachyderm என்று முயன்று தேடி மூன்று சொற்களைச் சொன்னார்கள் . அவர்கள் இன்னும் தேடினாலும் இந்த மூன்று சொற்கள் மட்டும்தான் மீண்டும் கிடைக்கும் . காரணம் யானையைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்கள் இந்த மூன்று சொற்கள் மட்டுமே .
யானை என்பது நமது சூழலியல் சொத்து . நமது மண்உருவாக்கிய மதிப்புறு செல்வமது. இவ்வுலகின் மிகப் பழைய காட்டுயிர் களில் யானையும் ஓன்று யானைகளில் இரண்டுவகைகள் உண்டு ஆப்பிரிக்க வகை மற்றொன்று ஆசியவகை. ஆசியவகை அழிவின் விளிம்பில் உள்ளது காரணம் மொத்தம் 50,000 ஆசியயானைகள் மட்டுமே தற்போது உள்ளன . ஆப்பிரிக்க யானைகளைப் பொறுத்தவரை 3,00000 யானைகள் உள்ளன.ஆசியவகை யானைகளில் 60 % யானைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் விரிந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில்தான் வாழ்கின்றன எனவே யானை நமது மக்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல் நமது படைப்புகள் முழுவதும் தன்னுடைய இடத்தையும் தக்கவைத்துக் கொண்டது . இதனால் யானை தமிழ்மொழி முழுவதும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு பெருமை பெறுகிறது. ஆனால் நமது இளந் தலைமுறை மாணவர்கள் யானையே இல்லாத ஒரு நாட்டின் மொழியில் யானையை இனம் காண்கிறார்கள். இது நாமாகத் தேடிக்கொண்ட அடிமை அடையாளமிது .
தமிழ்மொழி யானைக்குத் தந்திருக்கும் பெயர்களைப் பார்ப்போம்
யானை, அத்தி, வேழம், அத்தினி, களிறு, பிடி, கரி, கலபம், மாதங்கம், கைமா, வாரணம், அஞ்சனம், அல்லியன், ஆம்பல், ஆனை, குஞ்சரம், தும்பு, வல்விலங்கு.
போன்ற பல்வேறு பெயர்ச் சொற்களால் யானை சுட்டப்படுகிறது. அல்லியன் என்பது 60 வயதைக் கடந்த யானை அல்லது தன் குழுவை விட்டுப் பிரிந்த யானை . களிறு என்பது ஆண்யானை. பிடி என்பது பெண்யானை. இன்றும் கேரள மக்கள் பிடி ஆன என்று பெண் யானையையும், கொம்பன் ஆன என்று ஆண்யானையையும் குறிப்பிடுகின்றனர் . எனவே நமது சூழலியல் சொத்தின் பெயர்களைப் பரப்புவோம் காட்டுயிர்களைப் பாதுகாப்போம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக