வெள்ளி, 1 ஜூன், 2012

தமிழன் கண்ட வாழ்க்கை மற்றும் மெய்யியல்



            மனிதன் தனது இயல்பான வாழ்வில் தன்னால் எதிர் கொள்ள முடியாத பெரும் சிக்கல்கள் வரும்போது கடவுளைத் தேடத் துவங்குகிறான் . இவ்வாறு கடவுளைத் தேடிச்செல்லும் மனிதனை மதங்களும் மதம் சார்ந்த அரசியலும் தனதாக்கி பெரும் அரசியல் சக்திகளாகமாறி சமூகத்தையும் மக்களையும் தனது அடிமைகளாக உருமாற்றிவிடுகிறது. சமீபகாலமாக தனிமனிதர்கள் சாமியார் வேடமணிந்து கோடிகளைக் குவித்து கொட்டமடிப்பதுவும் இதன் தொடர்ச்சியான நிகழ்வு.
            தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை தமிழன் மதங்களுக்கு அடிமையாகி இழந்தவை அளவிடமுடியாதது. சமீபத்தில் நான் பார்த்த ஒரு திருமண அழைப்பிதழ் இப்பத்தியை எழுதத்தூண்டியது . அவ் அழைப்பிதழில் மணஇடம் என்ற பகுதியில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் என்று குறிக்கப் பட்டிருந்தது . சாதாரணத்  தமிழனிடமிருந்து “முருகன்” என்ற தமிழ்க் கடவுளை பிரித்தமை மதஅரசியலின் வெற்றியாகும்; தமிழன் வீழ்ந்தஇடம் இதுவாகும்.     
            பண்டைத் தமிழரின் அக,புற இலக்கியங்கள் அவர்களின் அன்றைய வாழ்வின் விளக்கமாக அமைந்துள்ளன. புறம் சார்ந்த நூல்கள் நேரிடையாகவும் அகம் சார்ந்த நூல்கள் இலக்கியப் படைப்பின் வாயிலாகவும் அன்றைய வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றன . இந்த வாழ்வை நாம் ஆழ்ந்து பார்த்துக்கொண்டே வருவோமானால் ஒரு சீரான மெய்யியல் புலத்தின் அடிப்படையில் தமது வாழ்வை தமிழன்  நடத்திவந்திருப்பதைக் காணமுடியும் .சங்க இலக்கியம் என அழைக்கப்படும் எட்டுத்தொகை , பத்துப்பாட்டு ஆகிய நூல்களைப் பார்க்கப் போனால் அவை கடவுள் சார்புடையனவாக இல்லை. ஆனால் கடவுள் உணர்வு அவர்களிடம் இருந்திருக்கின்றது. ஐந்திணை நிலங்களுக்கும் அவர்கள் ஐந்து தெய்வங்களைக் கொண்டிருந்தனர் சிவன் திருமால் போன்ற கடவுளர் பற்றிய தொன்மக் கதைகளையும் மேற்கூறிய நூல்களில் ஆங்காங்கே காண்கிறோம் திணைநில மக்களால் தெய்வ வழிபாடு ஒரு சடங்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் தமிழர் கடவுளை முழுதும் நம்பியோ , சார்ந்தோ கடவுளிடம் தங்களை முழுதுமாக ஒப்படைத்துக் கொண்டோ வாழ்வை நடத்தியதில்லை. அறிவாலும் அன்பாலும் மாந்தன் அடையத்தக்க மேம்பாட்டினைக் கடவுளின் உதவியின்றி அடைய முடியும் என்ற கோட்பாடே அந்நாள் தமிழரின் வாழ்கையை ஊடுருவியிருந்திருக்கிறது.
“ஓரில் நெய்தல் கறங்க , ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புனர்ந்தோர் பூவணி அணியப் , பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்;
இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரோ!”
என்பது புறநாநூற்றின் பக்குடுக்கை நன்கணியார் பாடல். இது ஒரு வீட்டில் சாவுப்பறை முழங்குகிறது மற்றொரு வீட்டில் திருமணத்திற்கான முழவின் இன்னிசை ததும்பி நிறைய மணம் முடித்த காதலனைக் கூடிய இளம்பெண் பூக்கள்சூடி மகிழ்ந்திருக்கிறாள் . ஆனால் அதேநேரத்தில் கணவனை இழந்த பெண்ணோ , துன்பம் மிகுதியால் கண்ணீருடன் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள் . இப்படி இருவேறுபட்ட நிலையில் இவ்வுலகத்தை ஒருவன் படைத்திருப்பானாயின் அவனைப் போன்ற பண்பற்றவன் வேறொருவன் இருக்க முடியுமா ? அதனால் துன்பமே இவ்வுலகத்தின் இயற்கையாகும் . ஆயினும் துன்பங்கள் கண்டு துவண்டுவிடாது அதனூடே இன்பத்தைக் காண முயல்வார்களாக !. நம் வாழ்வைச் சரிசெய்து கொள்வது நம் கையிலேயே இருக்கிறது . வாழ்வின் முரண்பாடுகளைத் தெளிவாக புரிந்து கொண்டவன் துன்பத்தின் நடுவிலும் இன்பம் காண்பான்  என்கிறது.

 கணியன் பூங்குன்றநாரும் தமது பாடலில்  தீதும் நன்றும் பிறர்தரவார ; அது வாழ்வின் இயல்பு என்பதை உணர்ந்தால்  வாழ்வில் துன்பம் இல்லை என்பதை வலியுறுத்திக் கூறுகிறார் . திருவள்ளுவரும்
“இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்”  
இன்பத்தை விரும்பாதவன், துன்பத்தை இயல்பானது  என்று கருதுபவன், துன்பத்தைக் கண்டு வருந்தமாட்டான். என்று, துன்பம் என்பது வாழ்வில் இயல்பானது என்று கூறுகிறார் . மேற்கண்ட தமிழன் கண்டு கூறிய மெய்யியல் கருத்துக்கள் முழுவதும் தமிழனைத்  தனித்த ஆளுமை பெற்ற இனமாக வாழச்செய்தது . இக் கருத்துக்களை விடுத்து தமிழன் வைதீகக் கோட்பாடுகளை நாடிச் செல்லத் தொடங்கியபோது அவன் தான் ஏதுமற்றவன் என்ற உணர்வோடு அடிமை உணர்வுடையனவாக வாழ்ந்து வருகிறான் . தற்போதய நமது  தேவை தமிழ்ப் பனுவல்கள் கொண்டிருக்கும்  வாழ்வியல் கோட்பாடுகளை மீட்டு, நாம் இழந்த ஆளுமையை மீண்டும்  பெறுவதாகும்.
நன்றி:ம.இலே.தங்கப்பா,க.நெடுஞ்செழியன்