சனி, 4 ஏப்ரல், 2020


                       இசைநிறை வீடு
நாவல் மரமேறி
அணிலைத் துரத்தி தோற்ற
நல்லப்பாம்பு கீழிறங்கிச் செல்கிறது .
சாம்பல் குருவியை குறிவைத்து
தோற்றுப் போனது பூனை .
நாட்டவரைப் பூ மீதும்
சுண்டைப் பூ மீதும் அமர்ந்து நகர்ந்து
பறக்கிறது வண்டு .
புங்கு , மருது , முருங்கை  என ,
இவற்றோடு பெயர் தெரியாத சில மரங்கள்
குளிர் காற்றில் அசைகின்றன .
புதர் போன்று வளர்ந்துள்ளன
முல்லை , பிச்சி , ரோஜா  செடிகள் ;
அதற்குள் ஒரு தேன்கூடு , ஒரு தேனீக் குடும்பம்
சில எலுமிச்சைச் செடிகள் அவற்றில்
நட்சத்திரங்களாய் சில பழங்கள் .
சுண்டைக் காய்களை உண்டு பசியாறும் கருங்குயில்கள் ;   
இவற்றிடையே நறுமணம் பரப்புகிறது எங்கள் வீடு .
தேன் சிட்டு மரகதப் புறா நெல்லுச் சிட்டு என
இவற்றோடு இணைந்து இசைக்கிறது எங்கள் வீடு .
                                              தமிழாசிரியன்

ஞாயிறு, 26 நவம்பர், 2017

                                                           ஓசை 
             பாத்திரங்களை உருட்டிய குட்டி யானை
             ஊர்ந்து திரிந்த ஆமை 
             வீடுமுழுவதும் கனைத்த குதிரை
             அகவித் திரிந்த மயில்
             முழங்கிய சிங்கம்
             மியாவ் ! மியாவ் ! பூனை
             துள்ளியோடிய புள்ளி மான்
             அனைவரும் ஒடுங்கி இருந்தனர் வீட்டு மூலையில்
             ஆம் எனது மகள் எல் கே ஜி யில் சேர்ந்துவிட்டாள் .

                உரையாடல்

              பூனை , மியாவ் ! என்றது .
              சிறுமியோ
              என்ன பசிக்குதா ? என்றாள் .
              பூனை , மியாவ் மியாவ் ! என்றது
              அப்பா மதியம் சாப்பாடு தரலியா ? என்றாள் சிறுமி .
              பூனை மியாவ் மியாவ் ! என்றது .
              இரு ! இந்தா அதிரசம் சாப்பிடு ;
              டோன்ட் டாக் கட்டளைக்கு
              பகல் முழுவதும் பள்ளியில் கட்டுப்பட்ட சிறுமி
              பூனையோடு உரையாடிக் கொண்டிருந்தாள் .