நான் பணிபுரியும் பள்ளியில் அனைவருமே என்னிடம் தூய தமிழில் பேச முயல்வர் ; ஒழுங்காகப் பேச வரவில்லை என்றாலும் முயன்று பேசுவர். சமீபத்தில் மராட்டியத்திலிருந்து எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவி ஒருநாள் Everybody is calling you “Ayya.” May I also call you “Ayya” Sir ? I gladly granted her wish. Immediately she practised the word and called me “Ayya” Then she asked whether her pronunciation was correct ? Atonce I appreciated her. Now she is continuing it. இந்தி ஆசிரியை என்னை ஐயா என்று அழைத்தாலும், ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். “ஐயா” என்று உங்களை அழைப்பது ஏதோ பிச்சைக் காரர்கள் “ஐயா” என்று அழைத்துப் பிச்சை கேட்பது போல் உள்ளது என்றார். நான் அவர்களுக்கு ஐயா என்னும் சொல் குறித்து சிறிய வகுப்பே நடதிவிட்டேன்.
உண்மையில் “ஐயா” எனும் சொல்லின் பொருள்தான் என்ன ?, இச்சொல் இழிவுப் பொருளைத் தருவதா ? மதிப்புக்குரியவர்களை நாம், ஐயா என்று அழைப்பது சரியா ? கவிஞர் காசியானந்தன் கூறுவது போல “கண்டவனை எல்லாம் சார்” என்று நாம் அழைத்துப் பழகிவிட்டதால் மேற்கண்டதுபோல வினாக்கள் எழுவது இயல்பு. குமரி மாவட்டத்தில் தந்தையை ‘ஐயா’ என்று அழைக்கும் பழக்கம் மிகச்சமீபகாலம் வரையில் இருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் தாத்தாவை ஐயா என்று அழைக்கும் வழக்கம் உண்டு. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை ‘ஐயா’ என்று அழைப்பதை நான் கேட்டிருக்கிறேன்.
இலங்கையிலும் தந்தையை ஐயா என்று அழைக்கும் பழக்கம் உண்டு. இதனை அ . முத்துலிங்கத்தின் கீழ்க் கண்ட வரிகள் உறுதிப் படுத்துகின்றது “அம்மா பெரியவர்களுக்கு கோப்பி தயாரிக்கும்போது சிறிது ---------- கலந்து கொடுப்பார். தடிமன் காய்ச்சலை அது உடனேய சாய்த்து விழுத்திவிடும் என்று ஐயா அடிக்கடி சொல்லுவார். மருந்து என்பதால் அதற்கு வீட்டிலே தடையில்லை. சரியாக ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் ஐயாவுக்குத் தடிமன் காய்ச்சல் வந்துவிடும். அம்மா, முட்டைக் கோப்பி தயாரிக்கும் சத்தம் எங்களை எழுப்பும். ஐயா, ஆறு கால்கள் வைத்த மரக்கதிரையில் உட்கார்ந்து, கோப்பியை நார் இறைச்சியைச் சாப்பிடுவதுபோலச் சப்புக்கொட்டி சுவைத்துக் குடிப்பார்.” இவ் வரிகளில் ஐயா என்னும் சொல் தந்தையைக் குறிக்கக் காணலாம். மேலும் இங்கே அம்மாவின் தந்தையை அம்மையா என்றும் அப்பாவின் தந்தையை அப்பையா என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு. சிங்கள மொழியில் ஐயா எனும் சொல் சகோதரனைக் குறிக்கிறது. மேலும், சிங்களர்கள் வயதில் மூத்தோரை ஐயா என்று அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
“ஐ” என்னும் வேர்ச் சொல்லிலிருந்து தான் ஐயா என்னும் சொல் உருவாகிறது. “ஐ” என்றால் தலைவன் என்று பொருள்.இச் சொல்லிலிருந்து ஐயை, ஐயனார், ஐயன் போன்ற தமிழ்ச் சொற்கள் உருவாகின்றன. குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தன் காதலனை தலைவி என் ஐ என்று குறிப்பிடுகிறாள். சிலப்பதிகாரத்தில் பெருமைமிகு துறவியான கௌந்தியடிகளை இளங்கோ, கௌந்தி ஐயை என்று குறிப்பிடுகிறார். குன்றக் குரவையாடும் மகளிர் கொற்றவையை (காளி ) ஐயை என விளித்துப் பரவுகின்றனர். திருவள்ளுவரை நாம் ‘ஐயன் திருவள்ளுவன்’ என்று விளித்துப் பெருமை கொள்கிறோம். கொங்கு மண்டல மக்கள் தந்தையை “ ஐயன் ” என்று அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர் . எனவே “ஐயா” என்பது தலைவனையோ அல்லது தந்தையையோ அல்லது மேன்மை பொருந்திய ஒருவனையோ அல்லது மூத்தோரையோ குறிக்கும் சொல்லாகவே தமிழ் மொழியில் தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறது . எனவே நாம் அனைவரும் தயக்கம் இல்லாமல் அனைவரையும் ‘ஐயா’ என்று அழைப்போம்