தமிழ் நாளிதழ் ஞாயிறன்று வெளியிடும் வார இதழ் ஒன்றில் வாசகர் ஒருவர் “ ஆந்திரம் , கேரளம் என்று இல்லாமல் நமது மாநிலத்திற்கு மட்டும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதே இது என்ன தனி நாடா ?” என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார் அதற்கு அவ்வார இதழில் முகத்தை பொம்மைபோல் வைத்துக் கொண்டு பதில் கூறிவரும் இதழாசிரியர் “இது திராவிட கழகத்தார் செய்த வேலை. அண்ணாத்துரை இவ்வாறு பெயர் சூட்டினார் என்பர். தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னர் இம்மாநிலம் மெட்ராஸ் ஸ்டேட் என்று ஆங்கிலத்திலும் மதறாஸ் ராஜதானி என்று இந்தியிலும் அழைக்கப்பட்டு வந்தது” . என்று, பொருந்தாத ஒரு பெயரை தமிழ் மண்ணுக்கு வைத்துவிட்டது போன்று பதில் சொல்லியிருந்தார் அந்தத் தமிழ்வளர்க்கும் இதழாளர் . இவருக்குத் தமிழ்நாடு என்ற சொல்லின் வரலாறு தெரியாது என்று நினைக்க வேண்டாம். தெரிந்தே தமிழ் அடையாளங்களை இளம் தலைமுறைகளிடமிருந்து அழிக்கும் முயற்சியிது .
தமிழ்நாடு என்ற இப்பெயர்ச்சொல் மிகநீண்ட வரலாறு கொண்டது . தமிழ் நிலப்பரப்பில் இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களாலும் புலவர்களாலும் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வந்ததொரு உயிரோட்டம் கொண்டதொருசொல், இச்சொல். .
“வடவேங்கடம் தென்குமரி
ஆஇடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து”
தமிழ்மொழி வழங்கும் நிலப்பரப்பை தமிழ்கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பிய பாயிரச் செய்யுளில் பனம்பாரனார் குறிப்பிடுகின்றார் .
சங்ககாலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் சேரன் சேரநாட்டை ஆண்டான் , பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டான் , சோழன் சோழநாட்டை ஆண்டான் .அதன்பின்னர் பல்வேறு ஆட்சி மாற்றங்கள் இறுதியாக குடியாட்சி என்று தமிழகம் அரசியல் மாற்றங்களைப் பெற்றுத் திகழ்கிறது. இப்பெரும் வரலாற்று மாற்றங்களுக்கு இடையே வரலாறாக அமைந்த சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகள்தாம் தமிழ்மொழி வழங்கும் இப்பெருநிலப்பரப்பை முதல்முதலாக ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடுகிறார்.தமிழ்நிலம் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் காரணமாகவே இளங்கோவடிகள் தமிழ்நாடு என்று குறிப்பிடுகிறார் .
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
இதுநீ கருதினை யாயின்”
என்பது இளங்கோவின் தொடர் . மூவேந்தரைப் பற்றிக் கூறும்போது ‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்’ என்று கூறி மகிழ்கிறார் . மதுரையை , ‘தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை’ என்று குறிப்பிடுகிறார் . சேரன் செங்குட்டுவன் இமைய மலையில் தமிழரின் வீரச் சின்னத்தைப் பொறிக்க வேண்டும் என்று கூறும்போது
“வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்
தென்தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி
மண்தலை ஏற்ற வரைக”
என்கிறார் . சிலப்பதிகாராம் பல்வேறு செய்திகளைப் பதிவு செய்துள்ளது எனினும் அவற்றுள் தலையாயது தமிழரின் ஒன்றுபட்ட தமிழ்நாடே .
என்று முளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’ என்று புகழ்ந்த கம்பன் , தென் தமிழ் நாட்டகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்றீரேல்’ என்று தமிழ் முனிவனின் இருப்பிடத்தைச் சுட்டுமிடத்து தென்தமிழ்நாட்டுப் பொதிகை மலைத் திருமுனிவன் என்று குறிப்பிடுகிறான் .11 - ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர் இளம்பூரணர், செப்பும் வினாவும் வழுவாது வருவதற்கு “நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்”. என்ற தொடரைப் பயன் படுத்துகிறார் . இளம்பூரணரது வரிகள் தமிழ் மொழி வழங்கும் நிலப்பரப்பை தமிழ் நாடு என்று வழங்கியமை வெளிப்படை .
பாரதியாரோ தன் கவிதைமூச்சு முழுதும் தமிழ் மொழி வழங்கும் நிலப்பரப்பைத் தமிழ்நாடு என்று புகழ்கிறான்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
-------------------------------------------------------------------------------
வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
காதல் புரியும் அரம்பையர் போலிளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
என்று செந்தமிழ் நாடு என்ற கவிதையில் தமிழ்நாட்டைப் புகழ்ந்து பாடுகிறான்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே !
வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே !
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே!
--------------------------------------------------------------------------------
என்ற தமிழ்மொழி வாழ்த்து கவிதையிலும் பாரதி தமிழ்மொழி வழங்கும் நிலப்பரப்பை தமிழ்நாடு என்று புகழ்கிறான் .
தமிழ்நாட்டைத் தமிழ்நாடு என்று பெயரிட்டுப் புகழ்ந்து பாடிய இளங்கோவும் கம்பனும் பாரதியும் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்களா என்பதை மேற்கண்ட இதழாளர் தெளிவு படுத்த வேண்டும் .
இந்தியாவின் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டபோது தமிழ்மொழி மட்டும் பேசும் சென்னை மாநிலம் உருவானது. இக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக்கப் படவேண்டும் என்றும் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின . குறிப்பாக சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1953 ஆம் ஆண்டு திச 20 ஆம் நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சிமொழி மாநாட்டை சென்னையில் நடத்தியது . தொடர்ந்து இவ்வமைப்பின் சார்பில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் தமிழ் ஆட்சிமொழி மாநாடு நடத்தப்பட்டது . 1954 ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற மாநாட்டில் சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் , இம் மாநிலத்தில் தமிழே ஆட்சிமொழியாக வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறான பல்வேறு இயக்கங்கள் இதே கோரிக்கைக்காக போராடின .இதனால் தமிழக சட்டமன்றத்தில் 27 – 12 – 1956 அன்று தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப் பட்டது இச்சட்டம் நிறைவேற்றப் பட்டபோது தி.மு.க வோ தி.க வோ சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்க வில்லை; நல்லவேளை இது திராவிடக் கழகத்தாரின் வேலை இல்லை.
தமிழ் அங்கீகாரதிற்கான தொடர் போராட்டம் தொடர் தியாகம் 1967 தேர்தலில் வெளிபட்டது திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது 1967 ஏப்ரல் 14 அறிஞர் அண்ணாவின் அமைச்சரவை தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘தமிழ்நாடு’ கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என்ற பெயரைப் பெற்றது .தமிழ்நாடு என்றச் சொல் மிக நீண்ட வரலாற்றின் விளைவு ;பெரும் தியாகதின் பயன் , எனவே மேற்கண்ட இதழாசிரியர் தனது கருத்தை மாற்றிக் கொள்வாராக .