வெள்ளி, 27 ஜூலை, 2012

உணவு மருந்தாகட்டும்



           “அன்னப்பால் இல்லாத ஏழைகட்கு
            நல்ல ஆவின் பால் எங்கே கிடைக்கும் அம்மா ?
            நல்ல ஆவின் பால் எங்கே கிடைக்கும் அம்மா ? ”    
நான் சிறுவனாக இருந்தபோது  எனது அம்மா பாடும் பாடல் ஒன்றில் வரும்  வரிகள் இவை. “அன்னப்பால்” இது சோறு வடித்த தண்ணீர். இது  அன்னப்பால் என்ற பெயரைப் பெற்று மக்களோடு புழங்கிய  ஒரு நீர் உணவு  .நம்மில் பெரும்பான்மையினர்  கஞ்சித்தண்ணி என்று இதனை பலமுறை குடித்திருப் போம். மட்டுமல்ல,  பழைய கஞ்சியும் மோரும் கலந்த உணவு பல வேளைகளில் உடலை குளிர்வித்த ஒரு முக்கியமான உணவு .வெப்பமண்டல வாசிகளான நமக்கு இது ஒன்றும் புதுமையில்லை. குக்கர் வந்த பிறகு இதனை நாம் இழந்துவிட்டோம் . குக்கர் வேலை செய்யாத ஒருநாள் சோறு வடித்த  கஞ்சித்தண்ணியை ஒரு கப்பில் எடுத்து சிறிது உப்பும் போட்டு சிறிது நல்லமிளகுத் தூளும் கலந்து ,  கலக்கி ரைஸ் ஜூஸ் என்று பெயரும் வைத்து  எனது குழந்தைகளுக்குத் தந்தேன் . நல்ல சப்புக்  கொட்டிக்  குடித்ததோடு நல்லாருக்கு நல்லாருக்கு என்று குடித்தனர்.
நீர் மோர்
பானகம்
            திருப்பூர் மாவட்டத்தில் அனல் பறக்கும் வெயில் காலத்தில் அடிக்கடி வரும் நீர் வேட்கையில் எனக்குத்  தாகம்  தணிக்கும் குடிநீர் “பானகம்” ஆகும். இது பானாகம், பானைய்க்கம் என்று வேறு பெயர்களையும் பெறுகிறது . இதனை நாம் வெகு எளிதாக உருவாக்கவும் முடியும் . ஒரு எலுமிச்சம் பழம் சாறு பிழிந்து எடுத்துக்கொண்டு,   தேவையான அளவு  தண்ணீர்,சாறு  இரண்டையும் கலக்க வேண்டும். இதனோடு சிறிது உப்பு , கரும்புவெல்லம்,சிறிது புளிக்கரைசல், சிறிது இஞ்சிஆகியன கலந்து நன்கு கலக்கினால் பானகம் தயார். குளிர்வித்து பருகினால் நாள் முழுதும் வெயிலில் அலைந்தாலும் பருகிய நொடியில் களைப்பு ஓடிவிடும். வீட்டில் இதனைச் செய்தால் குழந்தைகள் ஆர்வமுடன் பார்ப்பதோடு பானகம் செய்து முடித்தவுடன் அதனைக் குடிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். நமது மண்ணின் மற்றுமொரு கொடை நீர்மோர் ஆகும் . கட்டித் தயிரை மூன்று மடங்கு தண்ணீர் விட்டு நன்கு கடைந்து வெண்ணை நீக்கி உப்பும் சிறிது மிளகும் கறிவேப்பிலையும்  கலந்து குளிர்வித்து பருக, உடல்  கொஞ்சம் குளிர்வதை நாம்மால்  உணர முடியும் .
            நான் சிறுவனாக இருந்தபோது என்னைக் கவர்ந்த மற்றுமொரு உணவு, கைச்சுத்து  முறுக்கும் கருப்பட்டிக் காப்பியும் ஆகும். பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடனே எங்களை இது வரவேற்கும் . முறுக்கைக்  கருப்பட்டிக் காப்பியில் பொடித்துப் போட்டு ஊறவைத்து முறுக்குடன் காப்பியையும் குடிப்போம் . இன்று  கைச்சுத்து முறுக்கும் இல்லை, கருப்பட்டியும் இல்லை, கருப்பட்டிக் காப்பியும் இல்லை   . இந்த முறுக்கை  பக்குவமாக செய்தால் மூன்று மாதங்கள் வரை கெடாமல் முறுமுறுப்பு மாறாமல் இருக்குமாம் .இவற்றை எல்லாம் விடுத்து நாம் தற்போது பீஸாக் கார்னர் பின்பும் , கொக்க கோலா பின்பும், பெப்சி பின்பும் ஓடிக்கொண்டிருக்கின்றோம் . அமெரிக்க அதிபரின் மனைவி தமது மாளிகையில் இற்கை வேளாண் தோட்டம் அமைத்திருக்கிறாராம் . அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பங்கினர் உடல் பருமன் நோயினால் அவதியுறுகின்றனராம். ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகளில் இயற்கை உணவை சமைத்து உண்பது குறித்து சொல்லித் தருகிறார்களாம் . நமது குழந்தைகள் பிஸ்கட்பின்பும்  , கேக் பின்பும் போகலாம ? கொஞ்சம் சிந்திப்போம் . நாம் இழந்த நமது மரபு உணவுகளை முடிந்த அளவு மீட்போம் ; பரப்புவோம் .

திங்கள், 2 ஜூலை, 2012

பண்பாடு பலியாகிறது என்றால் , நாமே பலியாகிறோம் என்று பொருள்



 
தமிழ்வினாத்தாள் உருவாக்கும் பொழுது பொருள் உணர்ந்து விடைதருக என்ற பகுதிக்காக  நான் பயன்படுத்திய பத்திகளை இங்கே தருகிறேன்.                   
                                         பத்தி  1             
                ஆங்கிலத்தில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன வடமொழியிலும் தமிழ் , பிராகிருதம் , பாலிமொழிச் சொற்கள் கலந்துள்ளன இதேப்போல் தமிழிலும் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன . பிறமொழிச் சொற்களை நீக்கிவிட்டால் பலமொழிகள் இயங்காது ஆனால் பிறமொழிச் சொற்களை நீக்கிவிட்டாலும் தமிழ்மொழி இயங்கும் . மிகுதியான வேர்ச்சொற்களைக் கொண்டது  தமிழ்மொழியாகும் அதனால் புதிய கலைச் சொற்களை தமிழ் மொழியில் உருவாக்கிக் கொள்ள முடியும் .
           கன்னடம் , தெலுங்கு , மலையாளம் , துளு போன்ற திராவிட மொழிகளுக்கு மட்டுமல்லாமல் பிராகுயி போன்ற வடநாட்டு  மொழிகளுக்கும் தமிழ்மொழி தாயாக விளங்குகிறது . ஆயிரத்து எண்நூறு மொழிகளுக்கு வேர்ச்சொற் களையும்  நூற்றுஎண்பது மொழிகளுக்கு உறவுப் பெயர்களையும் தந்து, உலக மொழிகுளுக்கு எல்லாம் தாயாகத் திகழ்கிறது தமிழ் மொழி .உலக இலக்கியங்களில் முதன்மைபெற்ற சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் 26,350 . இந்த அளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் , உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை என்பது உலக இலக்கியங்களை ஆராய்ந்த செக் நாட்டு மொழியியல் அறிஞர் கமில்சுவலபிலின் கருத்தாகும் .

                                         பத்தி 2

              மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியின் மீது நடத்தப்படுகின்ற அழித்தொழிப்புப் பணியில் தற்போது வரை தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால், அது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அணிப்படுத்திக் கொண்ட சங்க  இலக்கியங்களும், காப்பியங்களுமே  காரணமாகும். எத்தனையோ வடிவங்களில் நடைபெற்ற, எவ்வளவோ அழிவுச் செயல்பாடுகளுக்கு இடையிலும் தமிழ் மொழியின் தலைநிமிர்ந்த நன்னடை, பெருமைக்குரியதாக இருக்கிறது. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இன்று கணினியில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் தமிழ்மொழியின் வரலாற்று வழித்தடம், அண்மைக் காலம் வரை கரடுமுரடாய்த்தான் இருந்திருக்கிறது. இப்போதும் அது போன்ற தடத்திலேதான் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
       சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ்ச்சமூகம், பரந்து பட்ட அளவில் கல்வியறிவு பெற்றிருந்ததை, மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிப்பட்டி புள்ளிமான் கோம்பையில் கிடைத்த நடுகற்கள் சான்றாய் நிற்கின்றன . கோவையில் கிடைத்த சூலூர் மண் தட்டில் காணப்படும் குறியீடுகளும், சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளும் ஒத்ததாய் அமைந்திருப்பது, தமிழ்ப்பண்பாட்டின் நாகரிகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை உரக்கத் தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு மேலும் பல வரலாற்றுத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று அறிவுச் செருக்கோடு உலகத்திற்கே வாழ்வியல் உண்மையினை    வழங்கிய தமிழ் மொழி, இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது.
                                  பத்தி 3
              இந்திய அளவில் செயல்பட்ட தலித் சமூகத் தலைவர்களுள் முதன்மையானவர் எம் . சி ராஜா . சுதேசிகளுக்கு ( இந்தியர்களுக்கு ) ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்ட 1919 லேயே தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக  சட்டமன்ற உறுப்பினரானவர் . பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டவர் தீண்டப்படாதவர்களுக்கு ( தலித் ) அரசியல் அதிகாரம் தேவை என்னும் கருத்தினை அரசியல் வடிவில் வேரூன்றச் செய்த இவர் தலைமையில் 537 பொதுக் கூட்டங்களும் 137 மாநாடுகளும் நடைபெற்றன . இவர் தமிழகம் மட்டுமல்லாமல் பஞ்சாப் , உத்தரப்பிரதேசம் , மகாராஷ்டிரம் வரை செயல்பட்டார்
         ராயப்பேட்டை வெஸ்லி மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும் தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்றார் . திரு.வி.க இவரது கல்லூரித் தோழர் . கல்லூரியில் இவர் புகழ்பெற்ற கிரிக்கட்வீரர் . பின்னர் தாம் பயின்ற கல்லூரியிலேயே சிலகாலம்  ஆசிரியராகப்  பணிபுரிந்தார் . ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர் . கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறித்திய இவர் ,ஆதிதிராவிட மாணவர்களைத் திரட்டி கல்வி கற்கச் செய்வதில் ஆர்வம் காட்டினார் . இரவுப் பள்ளிகளும் இலவசப் பள்ளிகளும் உருவாகக் காரணமானவர் .
                                  பத்தி 4
              நாகரிகம் எனற பெயரில் , நாம் சந்திக்கின்ற இழப்பு  இன்னும் நமக்கு உறைக்கவே இல்லை. கறுப்பு நிறம் என்பது நமது நிலப்பரப்பின் சூழலியல் சொத்து .சுட்டெரிக்கும் வெப்ப மண்டலவாசிகளுக்கு தோல் கருப்பாகத்தான் இருக்கும் . அப்படி இருந்தால்தான் அது ஆரோக்கியம் . ஆனால் இளைய தலைமுறை தங்கள் வருமானத்தில் பெருமளவு பணத்தை தோலை வெள்ளையாக்கச் செலவழிப்பது , அவர்கள் நமது பண்பாட்டைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது . நமது கடவுளர்கள்கூட கறுப்பர்கள்தான்.
       கறுப்பும் சிவப்பும் வெறும் நிறமாக இருந்தால்தான் சமூகத்துக்கு நல்லது  . கறுத்த தோல் உடையவன் கீழ்ச்சாதிக்காரன் , நாகரிகம்அற்றவன் , படிக்கத் தகுதியறறவன் , அழகறறவன் , படிக்கத்தகுதியறவன் , அழகறறவன்வன் என்ற கருத்தை உருவாக்கினால்தான் அரிசியைவிட அழகு கிரீம்களை அதிக விலை வைத்து விற்க முடியும் என்கிற வணிக துர்புத்திக்கு நம்பண்பாடு பலியாகிப் போனது. பண்பாடு பலியாகிறது என்றால் , நாமே பலியாகிறோம் என்று பொருள்
               தமிழ்நாடு நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்பமண்டலப்பகுதி . இங்கே வாழும் மனிதர்களுக்கு நீர்தான் முக்கியமான ஆதாரம் . வெப்பம்போக்கிக் குளிர்விப்பதனால் நீரைத் தண்ணீர் என்று அழைத்தனர் நம் முன்னோர் . தண்ணீர் பாலை விட அதிக விலைக்கு விற்கப்படும் அவலம் நமது பண்பாட்டுச் சிதைவின் அடையாளம்
                                  பத்தி 5
தமிழ்மொழி எண்ணிலடங்கா கலைகளைக் கொண்டது. அவற்றுள் இசைக் கலையும் ஓன்று. தமிழிசைக்குப்  பல்லாயிரம் ஆண்டுகள் வயது உண்டு; இவ் இசைத்தமிழை ஓரளவிற்குச்  சமயங்களே வளர்த்தன. இதற்குச்  சைவ,வைணவ  சமயங்களின்  பக்தி இலக்கியங்களும்  கிறித்தவ  தேவாலயங்களில்  பாடப்படும் கீர்த்தனைகளும் சான்றுகளாகும். இச்சான்றுகள் ஓரளவிற்குத்  தமிழ்ச் சமூகதிற்கு அறிமுகமாகி விட்டன . ஆனால் தமிழ்ப் பாடல்களைப்பாடி தமிழிசை பரப்பி  வரும் ‘பக்கிரிஸ’ என்ற இசுலாமிய இசைப் பாணர்கள் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் அறிமுகமாகாமலேயே உள்ளனர் . இவர்கள் , தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக தமிழகதில் தமிழிசையால் இறைவனையும் இறைத்தூதரையும் பரவிப்பாடி வருகின்றனர் . “ஒல்லியான உருவம் ; முழங்காலுக்குக் கீழே தொங்கும் வெள்ளை சுப்பா ; வேட்டிக்குப் பதிலாக கைலி எனப்படும் சாரம் ; முக்கோண வடிவில் மடித்து இரண்டு தோளிலும் தொங்கும் துண்டு ; தலையில் தலைப்பாகை ; கழுத்தில் மணிகள் கோத்த குறுமத்தங்காய் மாலை” இதுதான் பக்கிரிசாக்களின் தோற்றம் “ பகிரிசாக்கள் பாடும் பாட்டு பெரும்பாலும் குணங்குடி மஸ்தான் படல்களாகவோ தக்கலை பீர்முஹமது வாப்பா பாடல்களாகவோ இருக்கின்றன . அவர்கள் பாடும் கதைப் பாடல்களின் பகுதிகள் ‘சைத்தூன் கிஸ்ஸா’ எனப்படும் கதைப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை என்று தெரிகிறது . இசுலாமியத் தமிழ் சிற்றிலக்கியங்களில்  ‘கிஸ்சா’ க்களும் [கதைகள்] ‘முனஜாத்’ க்களும் [வாழ்கை வரலாற்றுப் பாடல்கள் ] நிறைய இருக்கின்றன” .
                     மத அடிப்படை வாதமும் மதம்சார்ந்த அரசியலும் பெருகிவரும் இன்நாளில் கடவுளும் ஆன்மீகமும் தேடி அடையாளம் காட்டவேண்டிய நிலையில் உள்ளனர். அழிந்து வரும் நிலையில் உள்ள இத் தமிழிசைப்பாணர் மரபினர்  தமிழுக்கும் தமிழிசைக்கும் செய்யும் தொண்டால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பரப்பப்பட வேண்டியவர்கள் நன்றி : இவ் வரிகளை எழுதிய  தமிழ் உறவுகளுக்கு   

வெள்ளி, 1 ஜூன், 2012

தமிழன் கண்ட வாழ்க்கை மற்றும் மெய்யியல்



            மனிதன் தனது இயல்பான வாழ்வில் தன்னால் எதிர் கொள்ள முடியாத பெரும் சிக்கல்கள் வரும்போது கடவுளைத் தேடத் துவங்குகிறான் . இவ்வாறு கடவுளைத் தேடிச்செல்லும் மனிதனை மதங்களும் மதம் சார்ந்த அரசியலும் தனதாக்கி பெரும் அரசியல் சக்திகளாகமாறி சமூகத்தையும் மக்களையும் தனது அடிமைகளாக உருமாற்றிவிடுகிறது. சமீபகாலமாக தனிமனிதர்கள் சாமியார் வேடமணிந்து கோடிகளைக் குவித்து கொட்டமடிப்பதுவும் இதன் தொடர்ச்சியான நிகழ்வு.
            தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை தமிழன் மதங்களுக்கு அடிமையாகி இழந்தவை அளவிடமுடியாதது. சமீபத்தில் நான் பார்த்த ஒரு திருமண அழைப்பிதழ் இப்பத்தியை எழுதத்தூண்டியது . அவ் அழைப்பிதழில் மணஇடம் என்ற பகுதியில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் என்று குறிக்கப் பட்டிருந்தது . சாதாரணத்  தமிழனிடமிருந்து “முருகன்” என்ற தமிழ்க் கடவுளை பிரித்தமை மதஅரசியலின் வெற்றியாகும்; தமிழன் வீழ்ந்தஇடம் இதுவாகும்.     
            பண்டைத் தமிழரின் அக,புற இலக்கியங்கள் அவர்களின் அன்றைய வாழ்வின் விளக்கமாக அமைந்துள்ளன. புறம் சார்ந்த நூல்கள் நேரிடையாகவும் அகம் சார்ந்த நூல்கள் இலக்கியப் படைப்பின் வாயிலாகவும் அன்றைய வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றன . இந்த வாழ்வை நாம் ஆழ்ந்து பார்த்துக்கொண்டே வருவோமானால் ஒரு சீரான மெய்யியல் புலத்தின் அடிப்படையில் தமது வாழ்வை தமிழன்  நடத்திவந்திருப்பதைக் காணமுடியும் .சங்க இலக்கியம் என அழைக்கப்படும் எட்டுத்தொகை , பத்துப்பாட்டு ஆகிய நூல்களைப் பார்க்கப் போனால் அவை கடவுள் சார்புடையனவாக இல்லை. ஆனால் கடவுள் உணர்வு அவர்களிடம் இருந்திருக்கின்றது. ஐந்திணை நிலங்களுக்கும் அவர்கள் ஐந்து தெய்வங்களைக் கொண்டிருந்தனர் சிவன் திருமால் போன்ற கடவுளர் பற்றிய தொன்மக் கதைகளையும் மேற்கூறிய நூல்களில் ஆங்காங்கே காண்கிறோம் திணைநில மக்களால் தெய்வ வழிபாடு ஒரு சடங்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் தமிழர் கடவுளை முழுதும் நம்பியோ , சார்ந்தோ கடவுளிடம் தங்களை முழுதுமாக ஒப்படைத்துக் கொண்டோ வாழ்வை நடத்தியதில்லை. அறிவாலும் அன்பாலும் மாந்தன் அடையத்தக்க மேம்பாட்டினைக் கடவுளின் உதவியின்றி அடைய முடியும் என்ற கோட்பாடே அந்நாள் தமிழரின் வாழ்கையை ஊடுருவியிருந்திருக்கிறது.
“ஓரில் நெய்தல் கறங்க , ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புனர்ந்தோர் பூவணி அணியப் , பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்;
இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரோ!”
என்பது புறநாநூற்றின் பக்குடுக்கை நன்கணியார் பாடல். இது ஒரு வீட்டில் சாவுப்பறை முழங்குகிறது மற்றொரு வீட்டில் திருமணத்திற்கான முழவின் இன்னிசை ததும்பி நிறைய மணம் முடித்த காதலனைக் கூடிய இளம்பெண் பூக்கள்சூடி மகிழ்ந்திருக்கிறாள் . ஆனால் அதேநேரத்தில் கணவனை இழந்த பெண்ணோ , துன்பம் மிகுதியால் கண்ணீருடன் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள் . இப்படி இருவேறுபட்ட நிலையில் இவ்வுலகத்தை ஒருவன் படைத்திருப்பானாயின் அவனைப் போன்ற பண்பற்றவன் வேறொருவன் இருக்க முடியுமா ? அதனால் துன்பமே இவ்வுலகத்தின் இயற்கையாகும் . ஆயினும் துன்பங்கள் கண்டு துவண்டுவிடாது அதனூடே இன்பத்தைக் காண முயல்வார்களாக !. நம் வாழ்வைச் சரிசெய்து கொள்வது நம் கையிலேயே இருக்கிறது . வாழ்வின் முரண்பாடுகளைத் தெளிவாக புரிந்து கொண்டவன் துன்பத்தின் நடுவிலும் இன்பம் காண்பான்  என்கிறது.

 கணியன் பூங்குன்றநாரும் தமது பாடலில்  தீதும் நன்றும் பிறர்தரவார ; அது வாழ்வின் இயல்பு என்பதை உணர்ந்தால்  வாழ்வில் துன்பம் இல்லை என்பதை வலியுறுத்திக் கூறுகிறார் . திருவள்ளுவரும்
“இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்”  
இன்பத்தை விரும்பாதவன், துன்பத்தை இயல்பானது  என்று கருதுபவன், துன்பத்தைக் கண்டு வருந்தமாட்டான். என்று, துன்பம் என்பது வாழ்வில் இயல்பானது என்று கூறுகிறார் . மேற்கண்ட தமிழன் கண்டு கூறிய மெய்யியல் கருத்துக்கள் முழுவதும் தமிழனைத்  தனித்த ஆளுமை பெற்ற இனமாக வாழச்செய்தது . இக் கருத்துக்களை விடுத்து தமிழன் வைதீகக் கோட்பாடுகளை நாடிச் செல்லத் தொடங்கியபோது அவன் தான் ஏதுமற்றவன் என்ற உணர்வோடு அடிமை உணர்வுடையனவாக வாழ்ந்து வருகிறான் . தற்போதய நமது  தேவை தமிழ்ப் பனுவல்கள் கொண்டிருக்கும்  வாழ்வியல் கோட்பாடுகளை மீட்டு, நாம் இழந்த ஆளுமையை மீண்டும்  பெறுவதாகும்.
நன்றி:ம.இலே.தங்கப்பா,க.நெடுஞ்செழியன்