“அன்னப்பால் இல்லாத ஏழைகட்கு
நல்ல ஆவின் பால் எங்கே கிடைக்கும் அம்மா ?
நல்ல ஆவின் பால் எங்கே கிடைக்கும் அம்மா ? ”
நான் சிறுவனாக இருந்தபோது எனது அம்மா பாடும் பாடல் ஒன்றில் வரும் வரிகள் இவை. “அன்னப்பால்” இது சோறு வடித்த தண்ணீர். இது அன்னப்பால் என்ற பெயரைப் பெற்று மக்களோடு புழங்கிய ஒரு நீர் உணவு .நம்மில் பெரும்பான்மையினர் கஞ்சித்தண்ணி என்று இதனை பலமுறை குடித்திருப் போம். மட்டுமல்ல, பழைய கஞ்சியும் மோரும் கலந்த உணவு பல வேளைகளில் உடலை குளிர்வித்த ஒரு முக்கியமான உணவு .வெப்பமண்டல வாசிகளான நமக்கு இது ஒன்றும் புதுமையில்லை. குக்கர் வந்த பிறகு இதனை நாம் இழந்துவிட்டோம் . குக்கர் வேலை செய்யாத ஒருநாள் சோறு வடித்த கஞ்சித்தண்ணியை ஒரு கப்பில் எடுத்து சிறிது உப்பும் போட்டு சிறிது நல்லமிளகுத் தூளும் கலந்து , கலக்கி ரைஸ் ஜூஸ் என்று பெயரும் வைத்து எனது குழந்தைகளுக்குத் தந்தேன் . நல்ல சப்புக் கொட்டிக் குடித்ததோடு நல்லாருக்கு நல்லாருக்கு என்று குடித்தனர்.
நீர் மோர் |
பானகம் |
திருப்பூர் மாவட்டத்தில் அனல் பறக்கும் வெயில் காலத்தில் அடிக்கடி வரும் நீர் வேட்கையில் எனக்குத் தாகம் தணிக்கும் குடிநீர் “பானகம்” ஆகும். இது பானாகம், பானைய்க்கம் என்று வேறு பெயர்களையும் பெறுகிறது . இதனை நாம் வெகு எளிதாக உருவாக்கவும் முடியும் . ஒரு எலுமிச்சம் பழம் சாறு பிழிந்து எடுத்துக்கொண்டு, தேவையான அளவு தண்ணீர்,சாறு இரண்டையும் கலக்க வேண்டும். இதனோடு சிறிது உப்பு , கரும்புவெல்லம்,சிறிது புளிக்கரைசல், சிறிது இஞ்சிஆகியன கலந்து நன்கு கலக்கினால் பானகம் தயார். குளிர்வித்து பருகினால் நாள் முழுதும் வெயிலில் அலைந்தாலும் பருகிய நொடியில் களைப்பு ஓடிவிடும். வீட்டில் இதனைச் செய்தால் குழந்தைகள் ஆர்வமுடன் பார்ப்பதோடு பானகம் செய்து முடித்தவுடன் அதனைக் குடிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். நமது மண்ணின் மற்றுமொரு கொடை நீர்மோர் ஆகும் . கட்டித் தயிரை மூன்று மடங்கு தண்ணீர் விட்டு நன்கு கடைந்து வெண்ணை நீக்கி உப்பும் சிறிது மிளகும் கறிவேப்பிலையும் கலந்து குளிர்வித்து பருக, உடல் கொஞ்சம் குளிர்வதை நாம்மால் உணர முடியும் .
நான் சிறுவனாக இருந்தபோது என்னைக் கவர்ந்த மற்றுமொரு உணவு, கைச்சுத்து முறுக்கும் கருப்பட்டிக் காப்பியும் ஆகும். பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடனே எங்களை இது வரவேற்கும் . முறுக்கைக் கருப்பட்டிக் காப்பியில் பொடித்துப் போட்டு ஊறவைத்து முறுக்குடன் காப்பியையும் குடிப்போம் . இன்று கைச்சுத்து முறுக்கும் இல்லை, கருப்பட்டியும் இல்லை, கருப்பட்டிக் காப்பியும் இல்லை . இந்த முறுக்கை பக்குவமாக செய்தால் மூன்று மாதங்கள் வரை கெடாமல் முறுமுறுப்பு மாறாமல் இருக்குமாம் .இவற்றை எல்லாம் விடுத்து நாம் தற்போது பீஸாக் கார்னர் பின்பும் , கொக்க கோலா பின்பும், பெப்சி பின்பும் ஓடிக்கொண்டிருக்கின்றோம் . அமெரிக்க அதிபரின் மனைவி தமது மாளிகையில் இற்கை வேளாண் தோட்டம் அமைத்திருக்கிறாராம் . அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பங்கினர் உடல் பருமன் நோயினால் அவதியுறுகின்றனராம். ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகளில் இயற்கை உணவை சமைத்து உண்பது குறித்து சொல்லித் தருகிறார்களாம் . நமது குழந்தைகள் பிஸ்கட்பின்பும் , கேக் பின்பும் போகலாம ? கொஞ்சம் சிந்திப்போம் . நாம் இழந்த நமது மரபு உணவுகளை முடிந்த அளவு மீட்போம் ; பரப்புவோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக