வலி
இயேசுவின் பெயர் தாங்கிய பள்ளி
இலக்குமியின் பெயர் தாங்கிய ஆசிரியை
இராமனின் பெயர் தாங்கிய நான்
மூன்று கடவுளர் ;
ஐந்தாம் வகுப்பில் நான் !
ஏக்கத்தோடுப் பார்த்தேன்
இக் கடவுளர்களை ?
அருகிலிருக்கும் நண்பனைப் பார்த்தேன் !
அவனும் என்னைப் பார்த்தான் !
சிரித்துக் கொண்டோம் .
அவன் சொன்னான்
“எங்க வீட்டுல இண்ணைக்குப் பொங்கல்”.
நானும் சொன்னேன் !
எங்க வீட்டுல ................................ ? பேசத் துவங்கியதும்
முறைத்து பார்த்தாள் இலக்குமியின் பெயர் தாங்கிய ஆசிரியை
கேட்டாள், “ஆர் யு ஸ்பீக்கிங் இன் தமிழ்”
சுனாமியின் வேகத்தில் விரைந்தாள் ஆசிரியை
எங்களை நோக்கி !
எங்கள் கைவிரல்களுக்குள்
பென்சில்கள் செருகப்பட்டன
எங்கள் கைகள் நசுக்கப்பட்டன
வலியும் அழுகையும்
எங்களைச் சூழ்ந்தது .
ஆசிரியையின் பெரியகைகள்
எங்கள் பிஞ்சுக் கைகளை ! ஐயோ !
முடிந்த மட்டும் அழுதோம் !
ஆசிரியையின் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை.
முடிந்த மட்டும் அழுதோம்!
ஐயோ ! அம்மா ?
“மம்மி” என்றச் சொல் மறைந்தது
எங்கள் உள்ளங்களைவிட்டு.
கண்களில் நிறைந்திருந்த கண்ணீரோடு
ஆசிரியையைப் பார்த்தேன்
கோபத்தால் சிவந்திருந்தது அவள் முகம்.
கண்ணீரால் நிறைந்திருந்தது எங்கள் முகம்.
“சிற்டவுன் டாங்கீஸ்” ?
ஆசிரியையின் கத்தல் எங்கள் வலியையும் விஞ்சியது.
கழுதையானோம் நாங்கள் .
கண்ணீர்த் தோய்ந்த விழிகளினூடே
கண்ணீரால் நனைந்திருந்த என்
நண்பன் மங்கலாகத் தெரிந்தான்.
அதே கண்களால் பலகணி(சன்னல்) வழியே எட்டிப் பார்த்தேன்
மூன்று கடவுளர்களும் என்
கண்களில் பட்டனர் ?
இயேசு, இராமன், இலக்குமி !
அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்
அவர்கள் தாய்மொழியில்.
கலங்கிய கண்களோடு
நாங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக