செவ்வாய், 19 ஏப்ரல், 2011

யார் பொறுப்பு ?



                            
        “கால ஓட்டத்தில் நிகழும் மாற்றங்களை உள்வாங்கிச் செரித்து , சுயமுகத்தை இழக்காமல் எந்த ஒரு சமூகம் தன்னைப் புத்துருவாக்கம் செய்துகொள்கிறதோ அதுவே உலகை வழிநடத்தக் கூடிய நிலைக்கு உயர்கிறது”
                        தமிழ் மண்ணே வணக்கம்! விகடன் பிரசுரம்  
             பருவ காலங்கள் எத்தனை வகைப் பாடும் ? ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் நான் கேட்ட கேள்வி இது . ஒரு மாணவன் நான்கு என்று உடனே பதில் கூறினான் . நான் பதிலைக் கேட்டு சற்று அதிர்ந்தாலும் , அந்த நான்கு பருவங்கள் எவை ? என்று அந்த மாணவனைக் கேட்டேன் . மாணவனும் மிகத் தெளிவாக summer , winter , autumn , spring ,என்றான். மற்ற மாணவர்கள் , இது தமிழ் வகுப்பு தமிழில் கூறு என்றனர் . உடனே பதில் கூறிய மாணவன் தமிழில் கூற முயற்சித்து தோற்றாலும் தனது மொழி பெயர்பில் ஓரளவு வெற்றியும்  பெற்றான். summer , winter என்ற இரண்டனுக்கு  கோடைக்காலம் , குளிர்காலம் என்று  மொழி பெயர்த்துச்  சொல்லிவிட்டான் .ஆனால் autumn , spring ஆகிய இரு சொற்களையும் அவனால் மொழிபெயர்க்க முடியவில்லை .  காரணம் மேற்கண்ட இலையுதிர்க்  காலம், வசந்த காலம் ஆகிய   இரண்டு பருவங்களும் அவன் வாழும் நிலப்பரப்பில் இல்லை. எனவே அவனால் மொழிபெயர்க்க முடியவில்லை போலும் . மேற்கண்ட மாணவனின் பதிலுக்கு யார் பொறுப்பு ?
                       மிகத்தொன்மையான மதிப்புறு  பண்பாட்டை உடையவர்கள் நாம் . இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக நாம் வாழ்ந்த வாழ்க்கை ஆவணங்கள் நமக்கு மிகத் தெளிவாக  கிடைக்கின்றன . இவ் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பல மதிப்புறு கூறுகளை உலகிற்கு நாம் தரவேண்டியுள்ளது . இவ்வாறான மதிப்புறு கூறுகளை உலகிற்கு நாம் வழங்காது போனால் அது உலகிற்கும் நமக்கும் பேரிழப்பாகும் .  மேற்கண்ட வினாவும் அதற்கான விடையும் தமிழனின் தொன்மையான  மதிப்புகளின் அடையாளமாகும் .
                             பருவகாலங்களை ஆங்கிலேயர் அவர்களது சூழலுக்கு ஏற்ப நான்காகப் பிரித்துக் கொண்டனர் . இது அவர்களது சூழலுக்கு ஏற்ப அவர்கள் பிரித்துக் கொண்டதாகும் . நாம் வாழும் இந்த மிதவெப்பமண்டலப் பரப்புக்கு autumn , spring போன்ற பருவ காலங்கள் இல்லை . அனால் ஆங்கிலவழிக் கல்வியால் நமது சூழலில் இல்லாத ஒன்றை ; நம் நிலத்துக்குப் பொருத்தம் இல்லாத ஒன்றை குருட்டுத்தனமாக பயின்று வருகிறோம் . இதில் நகைப்புக்கு உரிய ஓன்று ஆங்கில வழிக்  கல்விக்கான பாடநூல்களையும்  நாம்தான் உருவாக்குகிறோம் .
                          தமிழர் ஓர் ஆண்டின் பருவ காலங்களை  ஆறாகப் பகுத்திருந்தனர் அவை  இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி ,பின்பனி ஆகியனவாகும் . ஒவ்வொரு பருவமும் தலா இரண்டு மதங்கள் காலஅளவு கொண்டது . இதனைத்  தமிழர் பெரும்பொழுது என பெயரிட்டு அழைத்தனர் .         
பருவகாலங்கள்
        உரிய மாதங்கள்
இளவேனில்
சித்திரை – வைகாசி
முதுவேனில்
ஆனி – ஆடி
கார்
ஆவணி – புரட்டாசி
கூதிர்
ஐப்பசி – கார்த்திகை
முன்பனி
மார்கழி  - தை
பின்பனி
மாசி – பங்குனி
          இதைப் போன்று ஒரு நாளையும் தமிழர் ஆறு கூறுகளாகப் பிரித்து வழங்கி வந்தனர்  .  அவை வைகறை , காலை , நண்பகல் , எற்பாடு , மாலை , யாமம் ஆகியனவாகும் . இவற்றை சிறுபொழுது என்று பெயரிட்டு அழைத்தனர் 
     சிறுபொழுது
       காலம்
     மணிநேரம்
வைகறை
இரவுப் பொழுதின் இறுதிப்பகுதி   
02 - 06
காலை
பகற்பொழுதின் முற்பகுதி
06 - 10
நண்பகல்
பகற்பொழுதின் நடுப்பகுதி
10 - 14
எற்பாடு
பகற்பொழுதின் இறுதிப்பகுதி
14 - 18
மாலை
இரவுப் பொழுதின் முற்பகுதி
18 - 22
யாமம்
இரவுப் பொழுதின் நடுப்பகுதி
22 - 02



              இவ்வாறு நம்தமிழர் பருவகாலங்கள் குறித்து மிகத் தெளிந்த அறிவைக் கொண்டிருந்தனர் . ஆனால் ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்கள் மேற்குறித்த செய்திகளில் இருந்து அந்நியப்படுத்தப் பட்டுள்ளனர்   நாம் தெரிந்துகொள்ள வேண்டிய , தெரிந்துகொண்டு உலகிற்குச் சொல்ல வேண்டிய நமது மதிப்புறு பண்பாட்டின் சிறு துளி இது மேலும்பல பண்பாட்டுக் கூறுகளை தெரிந்துகொள்வோம்; பரப்புவோம்; வையத்தலைமை கொள்ள முயலுவோம்; வெற்றி நமதாகட்டும் . 



























ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

இசுலாம் தந்த தமிழ்


           தமிழ்மொழி எண்ணிலடங்கா கலைகளைக் கொண்டது. அவற்றுள் இசைக் கலையும் ஓன்று. தமிழிசைக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் வயது உண்டு; இவ் இசைத்தமிழை ஓரளவிற்குச் சமயங்களே வளர்த்தன. இதற்குச் சைவ,வைணவ சமயங்களின் பக்தி இலக்கியங்களும் கிறித்தவ தேவாலயங்களில் பாடப்படும் கீர்த்தனைகளும் சான்றுகளாகும். இச்சான்றுகள் ஓரளவிற்குத் தமிழ்ச் சமூகதிற்கு அறிமுகமாகி விட்டன . ஆனால் தமிழ்ப் பாடல்களைப்பாடி தமிழிசை பரப்பி வரும் ‘பக்கிரிஸ’ என்ற இசுலாமிய இசைப் பாணர்கள் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் அறிமுகமாகாமலேயே உள்ளனர் . இவர்கள் , தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக தமிழகதில் தமிழிசையால் இறைவனையும் இறைத்தூதரையும் பரவிப்பாடி வருகின்றனர் . “ஒல்லியான உருவம் ; முழங்காலுக்குக் கீழே தொங்கும் வெள்ளை சுப்பா ; வேட்டிக்குப் பதிலாக கைலி எனப்படும் சாரம் ; முக்கோண வடிவில் மடித்து இரண்டு தோளிலும் தொங்கும் துண்டு ; தலையில் தலைப்பாகை ; கழுத்தில் மணிகள் கோத்த குறுமத்தங்காய் மாலை” இதுதான் பக்கிரிசாக்களின் தோற்றம் “ பகிரிசாக்கள் பாடும் பாட்டு பெரும்பாலும் குணங்குடி மஸ்தான் படல்களாகவோ தக்கலை பீர்முஹமது வாப்பா பாடல்களாகவோ இருக்கின்றன . அவர்கள் பாடும் கதைப் பாடல்களின் பகுதிகள் ‘சைத்தூன் கிஸ்ஸா’ எனப்படும் கதைப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை என்று தெரிகிறது . இசுலாமியத் தமிழ் சிற்றிலக்கியங்களில் ‘கிஸ்சா’ க்களும் [கதைகள்] ‘முனஜாத்’ க்களும் [வாழ்கை வரலாற்றுப் பாடல்கள் ] நிறைய இருக்கின்றன” .
மத அடிப்படை வாதமும் மதம்சார்ந்த அரசியலும் பெருகிவரும் இன்நாளில் கடவுளும் ஆன்மீகமும் தேடி அடையாளம் காட்டவேண்டிய நிலையில் உள்ளனர். அழிந்து வரும் நிலையில் உள்ள இத் தமிழிசைப்பாணர் மரபினர் தமிழுக்கும் தமிழிசைக்கும் செய்யும் தொண்டால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பரப்பப்பட வேண்டியவர்கள்
குறிப்பு : இக்கட்டுரை பேரா . தொ. பரமசிவன் எழுதிய ‘இசுலாமியப் பாணர்’ என்ற கட்டுரையின் உதவியால் உருவானது
இவர்களது பாடல் இதோ 



உலகத் தமிழ் மாணவர்களுக்கு வணக்கம்


தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது இது பழமையோடு ; பல்லாயிரக்கணக்கான போற்றிப் பாதுகாக்கத்தக்க சிறப்பு மரபுகளையும் உள்ளடக்கியது . ஆனால் , இதன் சிறப்புகளை தமிழர்களே முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை நல்வாய்ப்பு இன்மையால்  உலகத்தமிழ் மாணவர்கள் தமிழறிவில் வறியவர்களாக மாறி வருகிறார்கள் . ஆனால் தமிழ் மரபுக் கூறுகள் பெருமளவில் தமிழ் ஆர்வலர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் பதிவு செய்யப்பட்டுவிட்டன . அவைகள் அனைத்தும் பல்கலைக்கழகங்களில் தூங்கிவிட்டன ; இளம் தலைமுறைக்குச் சொல்லப்படாமலேயே உள்ளன
                    நோபல் பரிசுபெற்ற  உயிரியலாளர் கான்ராட் லாரன்சு “இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக் கொடுக்க ஒரேவழி அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே அதைச் சொல்லித் தருவதுதான்” என இயற்கையைப் பராமரிக்க வழிமுறை கூறுகிறார். இக்கூற்றை நான் தமிழ் மொழிக்கும் பொருத்திப் பார்கிறேன் . தமிழின் பெருமைகளை பள்ளிக் குழந்தைகளிடம் கூறினால் , அவர்களுக்குக் கற்பித்தால் எதிர்காலத்தில் தமிழ் மொழி வளம்பெறும் என்ற நோக்கில்
                       ஆங்கிலவழிப் பள்ளிகளில் தமிழசிரியர்களாக பணிபுரிந்துவரும் இணையர்களான நாங்கள் இத்தளத்தை உருவாக்கி உள்ளோம் இத்தளம் உலகத் தமிழ்மாணவர்களுக்கு தன்னால் இயன்ற அளவில் தமிழறிவையும் தமிழார்வத்தையும் ஊட்ட முயற்சிக்கிறது . எதிர் காலத்தில் ஒரு இணையத் தமிழ்ப் பள்ளியையும், தமிழ் மரபுகளைப் பாதுகாக்கும் ஒரு அருங்காட்சியகத்தையும் உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளோம் . எனவே உலகத் தமிழர்களின் ஆதரவுடன் உதவியையும் கோருகிறோம் . தமிழ் அறிஞர்கள் தங்களது பதிவுகளை நாங்கள் இத்தளத்தில் வெளியிட அனுமதி யையும் ஆதரவையும்  தந்து உதவுமாறு வேண்டுகிறோம் . எதிர்காலத்தில் தமிழார்வம் கொண்டதொரு தலைமுறையை உருவாக்குவோம்
                        தமிழ் வாழ்க !
                      தமிழைப் போற்றும்,
               தேசிகன் .
             வல்சா .