கன்னியாகுமரியில் உள்ள
தனியார் பள்ளியில் பணிபுரிந்து வரும் இசை ஆசிரியையிடம் இசை மூவர் யார் ? என்று ஒரு
கேள்வியைக் கேட்டேன் . உடனடியாக அவர் தியாகையர் , சியாமசாஸ்திரிகள் , முத்துசாமி
தீட்சிதர் என்று பதில் கூறினார் . அடுத்ததாக தமிழிசை மூவர் யார் ? என்று கேட்டேன்
கொஞ்சம் சிந்தித்தார் ; என்னைப் பார்த்து சிரித்தார் ;தெரியல அப்பிடி மூணுபேர் இருக்காங்களா?
என்று என்னைக் கேட்டார். தமிழ்நாட்டில் இயங்கும் பள்ளியில் பணிபுரியும் தமிழ்நாட்டைச்
சார்ந்த இசை ஆசிரியருக்கே தமிழிசை மூவரைத்
தெரியவில்லை என்றால் தமிழிசையின் நிலை என்ன ? சாதாரணத் தமிழ் மக்களைப்பற்றி கூறத்
தேவையில்லை . மாணவர்கள் நிலை என்ன ? இவரிடம் இசையைக் கற்கும் மாணவர்கள் தாம்
வாழும் நிலத்தின் , தமது தாய்மொழியின் இசை
குறித்து தற்குறிகளாக மாறிவிட மாட்டார்களா ? இவ் ஆசிரியருக்குத் தெரிந்ததெல்லாம் கர்நாடக
இசை மட்டுமே. இவ் கர்நாடக இசையும் ஏதோ வடமொழி அறிஞர்கள் கண்டறிந்து உருவாக்கியது
என்பதுதான் இவரது புரிதல் .
தமிழ்நாட்டில்
தமிழனாகப் பிறந்துவிட்டால் அடிமை மோகம் உருவாகிவிடும் . தனக்கு என்று எதுவும் கிடையாது
என்று நினைப்பவன் அவன். இதனால் தமிழனை
கிட்டத்தட்ட பலநூறு ஆண்டுகள் வேற்று மொழி
அரசுகள் அடிமையாக்கி ஆண்டன . கர்நாடக
அரசர்கள் , தெலுங்கு அரசர்கள் , மராத்திய அரசர்கள் , இசுலாமிய அரசர்கள் , ஆங்கில
அரசு , பிரெஞ்சு அரசு என்று தொடர்ந்து பல நூறு ஆண்டுகள் தமிழன் அடிமை வாழ்வு
வாழ்ந்து விட்டான் . இந்தியக் குடியாட்சி உருவான பின்பு தமிழன் திரைப்படத்திற்கு
அடிமையானான் திரைப்படக் கதாநாயகன் இவனுக்குப் பெரும் தலைவனாகத் தெரிந்தான் ஆட்சியை
அவனிடம் தந்தான் இதன் விளைவு தமிழக ஊடகங்கள் ,வீடு ,பள்ளிக்கூடம் ,கோவில் ,கலந்துரையாடல்கள்
என அனைத்து நிலைகளிலும் தமிழைத் தவிர மற்ற எல்லா மொழிகளும் வாழ்கின்றன . அவனது
தத்துவம் களவாடப்பட்டது குறித்து எதுவும் தெரியாது . நமது ,மொழி ,பண்பாடு ,கலை
,மரபுகள் அனைத்தும் ஒடுக்கப் பட்டது குறித்து எதுவும் தெரியாது . இந்நிலையில்
தமிழன் வளர்த்த தமிழிசை களவாடப் பட்டது குறித்தும் அவனுக்கு எதுவும் தெரியாது .
ஓர் இனத்தை வெற்றிகொள்ள நினைக்கும் எதிரிகள் முதலில் மொழியையும் மரபான அடையாளங்களையும் அதன்
இலக்கியங்களையும் அழிக்கும் செயலில் ஈடுபடுவர் . யாழ்ப்பாணம் நூலகம்
கொளுத்தப்பட்டது இந்தவகையைச் சாரும் . தமிழகத்தில் பல்லவர்கள் ஆட்சியின் போது தமிழோடு வடமொழி பெருமளவில் கலக்கப் பட்டது ;
மணிப்பிரவாள நடை உருவானது . கல்வெட்டுகள் மணிப்பிறவாள நடையில் எழுதப்பட்டது. நம் தமிழிசையின்
வழிவந்த இசைக் கலைச்சொற்கள் புறந்தள்ளப்பட்டு வடமொழிச் சொற்கள் புகுத்தப்பட்டது .
ஒரு கலைத்துறை நிலைத்து வளம்பெற கலைச் சொற்கள் அடிப்படையானவை . நம் தமிழிசை மரபில்
இந்த அடிப்படை நொறுக்கப்பட்டன. . இரண்டாம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் தமிழிசையின்
ஏழு சுரங்களும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற
கலைச்சொற்களால் சுட்டப்பட்டிருக்கிறது . ஆனால் பிற்காலத்தில் இவை ஷாட்சம், ரிசபம்,
காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், என்று வடமொழியாக்கப்பட்டது .
பண்ணப்படும் இசை வடிவத்திற்குப் “பண்” என்று நம் முன்னோர் பெயரிட்டு அழைத்தனர்
பிற்காலத்தில் இச்சொல் புறம்தள்ளப்பட்டு ராகம் என்ற வடசொல் புகுத்தப்பட்டது மேலும்
இயக்கம், மண்டிலம் போன்ற சொற்கள் இருக்க ஸ்தாயி
என்ற வடசொல் புகுத்தப்பட்டது சுரங்கள் ஒலிப்பில் உயர்ந்து செல்வது ஏறி
வருவது ஏறுநிரல் குறைந்து வருவது இறங்கி வருவது இறங்கு நிரல் இன்று இவை ஆரோகணம், அவரோகணம் என்ற வடசொல்லால் குறிக்கப்படுகிறது.
. தமிழன் கண்ட பண்கள் கூட வடமொழியானது .செம்பாலை அரிகாம்போதி யானது. படுமலைப் பாலை
நட பைரவி யானது. கோடிப் பாலை கரகரப் பிரிய ஆனது. விளரிப்பாலை அனுமத் தோடி யானது. இவையெல்லாம் போகட்டும்,
நமது இசையை தமிழிசை , இசை , இன்னிசை என்று
நமது நூல்கள் குறிப்பிடுகின்றன ஆனால் சங்கீதம் என்ற வடசொல் புகுத்தப்பட்டது .நம்
இசை அரங்குகளுக்கு இன்னிசை அரங்கு என்ற சொல் இருக்க அதனை சங்கீத கச்சேரி
ஆக்கிவிட்டார்கள் இன்று தமிழக அரசு இசைக் கல்லூரி களிலும்கூட வடசொற்களே கோலோச்சுகிறது
. இது தமிழின் தமிழினத்தின் வீழ்ச்சியாகும் . இவ் வீழ்ச்சியில் இருந்து விடுபட
தமிழகப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இசை வகுப்புகள் தொடங்கப்பட
வேண்டும். இவ் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் தமிழிசை அறிஞர்களைக் கொண்டு
உருவாக்கப் படவேண்டும்; நமது மரபான தமிழிசை பரப்பப்பட வேண்டும்
நன்றி : ப .சோழ நாடன் , நா
. மம்மது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக