கண்களை
மூடிக் கொண்டு அந்த இசைக் கச்சேரியைக் கேட்டால், ஏதோ ஒரு பெரிய இன்னிசைக்
கச்சேரி நிகழ்ச்சியில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. கண்கள்
திறந்தால் மேடையில் ஓர் இளம் பெண்,
உடன் இருபுறமும் இரு
இளைஞர்கள். அவர்கள் கையில் சாதாரண வட்ட இசைக் கருவி, அவ்வளவே.
தவில், பம்பை, பறை, உடுக்கு, தபேலா, மிருதங்கம் என அத்தனைத் தோல் இசைக் கருவிகளின்
ஒலியையும் கொண்டு வந்துவிடுகிறார்கள். எப்படி இது சாத்தியம்?
அந்த
இசைக் கருவிக்கு "மகுடம்'
என்று பெயர்
சூட்டியிருக்கிறார்கள். பறையைப் போன்று காட்சிதரும் இது வேறொன்றும் இல்லை, தவிலில் இரு புறமும் இருக்கும் "உச்ச'த்தையும், "மந்த'த்தையும் கழற்றி எடுத்து
தனியே வைத்து, கைகளால் பலவகைக் கருவிகளின் ஒலிகளை
உண்டாக்குகிறார்கள் கலைஞர்கள்.
தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சங்கர் கணேஷ், சக்தி கணேஷ் இளைஞர்கள்தான்
அந்த இருவரும். ஏறத்தாழ இவர்களின் தெருவே கணியன்கூத்துக்குப் பெயர்போன தெருவாகும்.
23 வயதே நிரம்பிய சங்கர் கணேஷ் எட்டாம் வகுப்பும் 25 வயதான சக்தி கணேஷ்,
பி.காமும்
படித்திருக்கின்றனர். தங்களின் இசை குரு ராமமூர்த்தியின் மூலம் இந்தத் தொழிலை
சுத்தமாகக் கற்றிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் இவர்கள் இருவரும். கடந்த ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்
இவர்களின் இசையைக் கேட்ட அகிலா,
இதையே பக்க வாத்தியமாக
வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரை
தமிழ்நாட்டில் விழுப்புரம், உடுமலைப்பேட்டை, திருச்சி ஆகிய மூன்று
இடங்களில் மட்டும்தான் இவர்கள் சேர்ந்து கச்சேரி நடத்தியிருக்கிறார்கள். இசை
அளிப்பவர்களைப் போலவே இந்தக் குழுவின் ஒரே பாடகி, அமைப்பாளரான அகிலாவும்
வித்தியாசமாவர்.
நாட்டுப்புறப்
பாடல்களைப் பாடும் பெண் பாடகர்கள் இப்போது அதிகரித்து வரும் நிலையில், நாட்டுப்புறப் பாடல்களுடன் பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும், ஏன் இன்னும் ஒரு படி தாண்டி, இன்குலாப், தணிகைச்செல்வன் ஆகியோரின் பாடல்களையும் அற்புதமான சாரீரத்தில்
வழங்குகிறார் அகிலா.
சமூகப்
பிரச்னைகளை முன்னிலைப்படுத்தும் இவர்களின் பாடல்களுக்கு முற்றிலும் வித்தியாசமான
இசையுடன், இடையிடையே இசை மாற்றத்துடன் அரங்கம் அதிரும்
இசைக்கச்சேரி களைகட்டுகிறது.
அவருடன்
பேசியதிலிருந்து...
"சிதம்பரத்தைச் சேர்ந்த பெற்றோர் பழனி- ஜோதிமணி, வணிகக் குடும்பம். சிறுவயதிலிருந்தே இசை மீது ஏற்பட்ட ஆர்வத்தின்
காரணமாக சென்னையில் இசையில் எம்ஏ,
ஆய்வியல் நிறைஞர் (எம்பில்)
ஆகியவற்றை முடித்தேன். பல்வேறு குழுக்களில் பாடகராக, நடனக் கலைஞராகப் பணியாற்றி
வருகிறேன்.
கணியன்கூத்துக் கலைஞர்களைப்
பார்த்த பிறகு, அவர்களைக் கொண்டு இசை
நிகழ்ச்சிகளை நடத்த முடியுமா? என்று
அங்கு சென்று பார்த்துப் பேசினேன். இதுவரை மூன்று நிகழ்ச்சிகளை
நடத்தியிருக்கிறேன். தனிக் குழுவாக அமைக்க முடியுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. இயல்பாக அது அமைய வேண்டும் என விரும்புகிறேன்''நன்றி : தினமணிக் கதிர் 13-05-2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக