வியாழன், 11 ஜூலை, 2013



                    வலி
இயேசுவின் பெயர் தாங்கிய பள்ளி
இலக்குமியின் பெயர் தாங்கிய ஆசிரியை
இராமனின் பெயர் தாங்கிய நான்
மூன்று கடவுளர் ;
ஐந்தாம் வகுப்பில் நான் !
ஏக்கத்தோடுப்  பார்த்தேன்
இக் கடவுளர்களை ?
அருகிலிருக்கும் நண்பனைப் பார்த்தேன் !
அவனும் என்னைப் பார்த்தான் !
சிரித்துக் கொண்டோம் .
அவன் சொன்னான்
“எங்க வீட்டுல இண்ணைக்குப்  பொங்கல்”.
நானும் சொன்னேன் !
எங்க வீட்டுல ................................ ? பேசத் துவங்கியதும்
முறைத்து பார்த்தாள்  இலக்குமியின் பெயர் தாங்கிய ஆசிரியை
கேட்டாள், “ஆர் யு ஸ்பீக்கிங் இன் தமிழ்”
சுனாமியின் வேகத்தில் விரைந்தாள்  ஆசிரியை
எங்களை நோக்கி ! 
எங்கள் கைவிரல்களுக்குள்
பென்சில்கள்  செருகப்பட்டன
எங்கள் கைகள் நசுக்கப்பட்டன
வலியும் அழுகையும்  
எங்களைச் சூழ்ந்தது .   
ஆசிரியையின் பெரியகைகள்
எங்கள் பிஞ்சுக்  கைகளைஐயோ !
முடிந்த மட்டும் அழுதோம் !
ஆசிரியையின் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை.
முடிந்த மட்டும் அழுதோம்!
ஐயோ ! அம்மா ?
“மம்மி” என்றச்  சொல் மறைந்தது எங்கள் உள்ளங்களைவிட்டு.
கண்களில் நிறைந்திருந்த கண்ணீரோடு
ஆசிரியையைப் பார்த்தேன்
கோபத்தால் சிவந்திருந்தது அவள் முகம்.
கண்ணீரால் நிறைந்திருந்தது எங்கள் முகம்.
“சிற்டவுன் டாங்கீஸ்” ?
ஆசிரியையின் கத்தல் எங்கள் வலியையும்  விஞ்சியது. 
கழுதையானோம் நாங்கள் .
கண்ணீர்த்  தோய்ந்த விழிகளினூடே
கண்ணீரால் நனைந்திருந்த  என் நண்பன் மங்கலாகத் தெரிந்தான்.
அதே கண்களால் பலகணி(சன்னல்)   வழியே எட்டிப் பார்த்தேன்
மூன்று கடவுளர்களும்  என் கண்களில் பட்டனர் ?
இயேசு, இராமன், இலக்குமி !
அவர்கள் ஏதோ  பேசிக்கொண்டிருந்தனர்
அவர்கள் தாய்மொழியில்.
கலங்கிய கண்களோடு நாங்கள்.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

அடிக்கடி தொலைந்த தண்ணீர்ப் புட்டி



அம்மா அதட்டிச் சொன்னாள்,
இன்றைக்கும் தண்ணி பாட்டிலைத் தொலைச்சே….!
அடி தொலச்சிடுவேன்.
நாளைக்கு தண்ணி கொண்டு போகாமத்தான்
பள்ளிக்கூடம் போவா.
நீ இண்ணைக்கும்
தொலைஞ்சே...., அடி தொலச்சிடுவேன்!
உனக்கு கண்ணு, மூக்கு, காது, ஒண்ணும் இல்ல.
அதான் நீ அடிக்கடி தொலைஞ்சி போறா ! 
மகளும் மிரட்டினாள்,
புதிதாக வாங்கிய பாட்டிலைப் பார்த்து!
தனது குட்டி விரலை நீட்டி.
                                                                       தமிழாசிரியன்

வெள்ளி, 27 ஜூலை, 2012

உணவு மருந்தாகட்டும்



           “அன்னப்பால் இல்லாத ஏழைகட்கு
            நல்ல ஆவின் பால் எங்கே கிடைக்கும் அம்மா ?
            நல்ல ஆவின் பால் எங்கே கிடைக்கும் அம்மா ? ”    
நான் சிறுவனாக இருந்தபோது  எனது அம்மா பாடும் பாடல் ஒன்றில் வரும்  வரிகள் இவை. “அன்னப்பால்” இது சோறு வடித்த தண்ணீர். இது  அன்னப்பால் என்ற பெயரைப் பெற்று மக்களோடு புழங்கிய  ஒரு நீர் உணவு  .நம்மில் பெரும்பான்மையினர்  கஞ்சித்தண்ணி என்று இதனை பலமுறை குடித்திருப் போம். மட்டுமல்ல,  பழைய கஞ்சியும் மோரும் கலந்த உணவு பல வேளைகளில் உடலை குளிர்வித்த ஒரு முக்கியமான உணவு .வெப்பமண்டல வாசிகளான நமக்கு இது ஒன்றும் புதுமையில்லை. குக்கர் வந்த பிறகு இதனை நாம் இழந்துவிட்டோம் . குக்கர் வேலை செய்யாத ஒருநாள் சோறு வடித்த  கஞ்சித்தண்ணியை ஒரு கப்பில் எடுத்து சிறிது உப்பும் போட்டு சிறிது நல்லமிளகுத் தூளும் கலந்து ,  கலக்கி ரைஸ் ஜூஸ் என்று பெயரும் வைத்து  எனது குழந்தைகளுக்குத் தந்தேன் . நல்ல சப்புக்  கொட்டிக்  குடித்ததோடு நல்லாருக்கு நல்லாருக்கு என்று குடித்தனர்.
நீர் மோர்
பானகம்
            திருப்பூர் மாவட்டத்தில் அனல் பறக்கும் வெயில் காலத்தில் அடிக்கடி வரும் நீர் வேட்கையில் எனக்குத்  தாகம்  தணிக்கும் குடிநீர் “பானகம்” ஆகும். இது பானாகம், பானைய்க்கம் என்று வேறு பெயர்களையும் பெறுகிறது . இதனை நாம் வெகு எளிதாக உருவாக்கவும் முடியும் . ஒரு எலுமிச்சம் பழம் சாறு பிழிந்து எடுத்துக்கொண்டு,   தேவையான அளவு  தண்ணீர்,சாறு  இரண்டையும் கலக்க வேண்டும். இதனோடு சிறிது உப்பு , கரும்புவெல்லம்,சிறிது புளிக்கரைசல், சிறிது இஞ்சிஆகியன கலந்து நன்கு கலக்கினால் பானகம் தயார். குளிர்வித்து பருகினால் நாள் முழுதும் வெயிலில் அலைந்தாலும் பருகிய நொடியில் களைப்பு ஓடிவிடும். வீட்டில் இதனைச் செய்தால் குழந்தைகள் ஆர்வமுடன் பார்ப்பதோடு பானகம் செய்து முடித்தவுடன் அதனைக் குடிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். நமது மண்ணின் மற்றுமொரு கொடை நீர்மோர் ஆகும் . கட்டித் தயிரை மூன்று மடங்கு தண்ணீர் விட்டு நன்கு கடைந்து வெண்ணை நீக்கி உப்பும் சிறிது மிளகும் கறிவேப்பிலையும்  கலந்து குளிர்வித்து பருக, உடல்  கொஞ்சம் குளிர்வதை நாம்மால்  உணர முடியும் .
            நான் சிறுவனாக இருந்தபோது என்னைக் கவர்ந்த மற்றுமொரு உணவு, கைச்சுத்து  முறுக்கும் கருப்பட்டிக் காப்பியும் ஆகும். பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடனே எங்களை இது வரவேற்கும் . முறுக்கைக்  கருப்பட்டிக் காப்பியில் பொடித்துப் போட்டு ஊறவைத்து முறுக்குடன் காப்பியையும் குடிப்போம் . இன்று  கைச்சுத்து முறுக்கும் இல்லை, கருப்பட்டியும் இல்லை, கருப்பட்டிக் காப்பியும் இல்லை   . இந்த முறுக்கை  பக்குவமாக செய்தால் மூன்று மாதங்கள் வரை கெடாமல் முறுமுறுப்பு மாறாமல் இருக்குமாம் .இவற்றை எல்லாம் விடுத்து நாம் தற்போது பீஸாக் கார்னர் பின்பும் , கொக்க கோலா பின்பும், பெப்சி பின்பும் ஓடிக்கொண்டிருக்கின்றோம் . அமெரிக்க அதிபரின் மனைவி தமது மாளிகையில் இற்கை வேளாண் தோட்டம் அமைத்திருக்கிறாராம் . அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பங்கினர் உடல் பருமன் நோயினால் அவதியுறுகின்றனராம். ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகளில் இயற்கை உணவை சமைத்து உண்பது குறித்து சொல்லித் தருகிறார்களாம் . நமது குழந்தைகள் பிஸ்கட்பின்பும்  , கேக் பின்பும் போகலாம ? கொஞ்சம் சிந்திப்போம் . நாம் இழந்த நமது மரபு உணவுகளை முடிந்த அளவு மீட்போம் ; பரப்புவோம் .