வியாழன், 29 டிசம்பர், 2011

தமிழ்நிலம் தந்த தமிழிசை

உலக இனங்களில் தமிழினம்  மட்டும்தான் தனக்குத்தானே தரம் தாழ்ந்ததொரு   தரத்தை வழங்கிக் கொள்ளும்  இனமாகும் . தமிழினம்  தன்னிடம் உள்ள கலைச்செல்வங்களை முழுமையாகப்  புரிந்துகொள்ளவும் இல்லை ; உலகிற்கு பரப்பவும் இல்லை . செம்மொழியான தமிழ்   கொண்டிருக்கும் அனைத்துக் கலைகளும் போற்றிப்  பாதுகாக்கப்பட வேண்டியது மட்டுமல்ல உலகிற்குப் பரப்பப்பட வேண்டியதும் ஆகும்
 செம்மொழியான தமிழ்   கொண்டிருக்கும் அனைத்துக் கலைகளும் போற்றிப்  பாதுகாக்கப்பட வேண்டியது மட்டுமல்ல உலகிற்குப் பரப்பப்பட வேண்டியதும் ஆகும் .


தமிழினம்  கொண்டிருக்கும் பல்வேறு கலைகளில் இசைக்கலை குறிப்பிடத் தகுந்தது ஆகும் . நமது மரபிசைக்கும் அம்மரபிசையை உருவாக்கிய நாட்டுப்புற இசைக்கும்  2500 – ஆண்டுகளுக்கும் அதிக வயது உண்டு . இந்திய இசையான இந்துஸ்தானிக்கும் தென்இந்திய இசையான கர்நாடக இசைக்கும் தாய் தமிழசையாகும் . ஆனால் உலக அரங்கில் இந்துஸ்தானியும் , கர்நாடக இசையும் பெற்றிருக்கும் வெகுசன அறிமுகத்தை தமிழிசை பெறவில்லை . காரணம், நாம் நமது மரபிசையை மறந்ததும் , முழுமையான தரம்தந்து பரப்பாததும் ஆகும் . நம்மிடம் வெகுசனமக்கள் ரசிக்கும் இசைக்கூறுகள் இல்லையா ? இசைக்கருவிகள் இல்லையா ? பாடல்கள் இல்லையா ? என்றால் அனைத்தும் உண்டு . ஆனால் , நாம் நமது இசைரசனையை திரைப்படப் பாடல்களாகச் சுருக்கிக் கொண்டோம் . திரைப்படத் துறைக்குள் பயணிக்கும் இசை அறிஞர்கள் திரைப்படம் தாண்டியதொரு   இசையைக் குறித்து சிந்திக்கவும் இல்லை, செயல்படவும் இல்லை. இதனால், உலகம் ஒரு பெரும் கலைவடிவை இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளாமலே இயங்கி வருகிறது.  ஏன் தமிழனமே நமது இசை வடிவை முழுமையாக உணர்ந்து கொள்ள வில்லை . நமது இசையைப்  புரிந்து கொள்ள, உணர்ந்து உலகிற்குச் சொல்ல  ஒருசில இணைப்புகளை இங்கே தருகிறேன்.  இதன் தரத்தை மதிப்பிடுங்கள். நமது இசையும் இசைக் கருவிக்களும் தரமானது என்றால் உலகிற்குச் சொல்லுங்கள் .

செவ்வாய், 27 டிசம்பர், 2011

தமிழ்நாடு


தமிழ் நாளிதழ்  ஞாயிறன்று  வெளியிடும் வார இதழ் ஒன்றில் வாசகர் ஒருவர் “ ஆந்திரம் , கேரளம் என்று இல்லாமல் நமது மாநிலத்திற்கு மட்டும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதே இது என்ன தனி நாடா ?” என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார் அதற்கு அவ்வார இதழில் முகத்தை பொம்மைபோல் வைத்துக் கொண்டு பதில் கூறிவரும் இதழாசிரியர் “இது திராவிட கழகத்தார் செய்த வேலை. அண்ணாத்துரை இவ்வாறு பெயர் சூட்டினார் என்பர். தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னர் இம்மாநிலம் மெட்ராஸ் ஸ்டேட் என்று ஆங்கிலத்திலும் மதறாஸ் ராஜதானி என்று  இந்தியிலும் அழைக்கப்பட்டு வந்தது” . என்று, பொருந்தாத ஒரு பெயரை தமிழ் மண்ணுக்கு வைத்துவிட்டது போன்று   பதில் சொல்லியிருந்தார் அந்தத்  தமிழ்வளர்க்கும் இதழாளர் . இவருக்குத் தமிழ்நாடு என்ற சொல்லின் வரலாறு தெரியாது என்று நினைக்க வேண்டாம். தெரிந்தே தமிழ் அடையாளங்களை இளம் தலைமுறைகளிடமிருந்து அழிக்கும் முயற்சியிது .     
 தமிழ்நாடு என்ற இப்பெயர்ச்சொல் மிகநீண்ட வரலாறு கொண்டது .  தமிழ் நிலப்பரப்பில் இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களாலும் புலவர்களாலும் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வந்ததொரு உயிரோட்டம் கொண்டதொருசொல், இச்சொல். .
                  “வடவேங்கடம் தென்குமரி
                  ஆஇடைத்
                 தமிழ் கூறும் நல் உலகத்து”
     தமிழ்மொழி வழங்கும் நிலப்பரப்பை தமிழ்கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பிய பாயிரச் செய்யுளில் பனம்பாரனார் குறிப்பிடுகின்றார் .
சங்ககாலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் சேரன் சேரநாட்டை ஆண்டான் , பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டான் , சோழன் சோழநாட்டை ஆண்டான் .அதன்பின்னர் பல்வேறு ஆட்சி மாற்றங்கள் இறுதியாக குடியாட்சி என்று தமிழகம் அரசியல் மாற்றங்களைப்  பெற்றுத் திகழ்கிறது. இப்பெரும் வரலாற்று மாற்றங்களுக்கு இடையே வரலாறாக அமைந்த சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகள்தாம் தமிழ்மொழி வழங்கும் இப்பெருநிலப்பரப்பை முதல்முதலாக  ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடுகிறார்.தமிழ்நிலம் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் காரணமாகவே இளங்கோவடிகள் தமிழ்நாடு என்று குறிப்பிடுகிறார் .
            “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
            இதுநீ கருதினை யாயின்” 
என்பது இளங்கோவின் தொடர் . மூவேந்தரைப் பற்றிக் கூறும்போது ‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்’ என்று கூறி மகிழ்கிறார் . மதுரையை , ‘தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை’ என்று குறிப்பிடுகிறார் . சேரன்  செங்குட்டுவன் இமைய மலையில் தமிழரின் வீரச் சின்னத்தைப் பொறிக்க வேண்டும் என்று கூறும்போது
            “வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்
            தென்தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி
            மண்தலை ஏற்ற வரைக”
என்கிறார் . சிலப்பதிகாராம் பல்வேறு செய்திகளைப் பதிவு செய்துள்ளது எனினும் அவற்றுள் தலையாயது தமிழரின் ஒன்றுபட்ட தமிழ்நாடே .
      என்று  முளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’ என்று புகழ்ந்த  கம்பன்  , தென் தமிழ் நாட்டகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்றீரேல்’ என்று தமிழ் முனிவனின் இருப்பிடத்தைச் சுட்டுமிடத்து தென்தமிழ்நாட்டுப் பொதிகை மலைத் திருமுனிவன் என்று குறிப்பிடுகிறான் .11 - ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர் இளம்பூரணர், செப்பும் வினாவும் வழுவாது வருவதற்கு “நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்”. என்ற தொடரைப் பயன் படுத்துகிறார் . இளம்பூரணரது வரிகள் தமிழ் மொழி வழங்கும் நிலப்பரப்பை தமிழ் நாடு என்று வழங்கியமை வெளிப்படை .            
     பாரதியாரோ தன் கவிதைமூச்சு முழுதும் தமிழ் மொழி வழங்கும் நிலப்பரப்பைத்  தமிழ்நாடு என்று புகழ்கிறான்.                             
          செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
          தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
          -------------------------------------------------------------------------------
       வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
       வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
       காதல் புரியும் அரம்பையர் போலிளங்
       கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு   
என்று செந்தமிழ் நாடு என்ற கவிதையில் தமிழ்நாட்டைப் புகழ்ந்து பாடுகிறான்                      
             வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
               வாழிய வாழிய வே !
               வானமளந்த தனைத்தும் அளந்திடும்
               வண்மொழி வாழிய வே!
               ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
               இசைகொண்டு வாழிய வே!
               எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
               என்றென்றும் வாழிய வே!
               சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
              துலங்குக வையகமே !
              தொல்லை வினைதரு தொல்லை யகன்று
              சுடர்க தமிழ்நாடே!           
             --------------------------------------------------------------------------------
என்ற  தமிழ்மொழி வாழ்த்து கவிதையிலும் பாரதி தமிழ்மொழி வழங்கும் நிலப்பரப்பை தமிழ்நாடு என்று புகழ்கிறான் .
தமிழ்நாட்டைத் தமிழ்நாடு என்று பெயரிட்டுப்  புகழ்ந்து பாடிய இளங்கோவும் கம்பனும் பாரதியும் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்களா என்பதை மேற்கண்ட  இதழாளர் தெளிவு படுத்த வேண்டும் .                                                    
இந்தியாவின் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டபோது தமிழ்மொழி மட்டும் பேசும் சென்னை மாநிலம் உருவானது. இக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக்கப் படவேண்டும் என்றும் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின . குறிப்பாக சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1953 ஆம் ஆண்டு திச 20 ஆம் நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சிமொழி மாநாட்டை சென்னையில் நடத்தியது . தொடர்ந்து இவ்வமைப்பின் சார்பில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் தமிழ் ஆட்சிமொழி மாநாடு நடத்தப்பட்டது . 1954 ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற மாநாட்டில் சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் , இம் மாநிலத்தில் தமிழே ஆட்சிமொழியாக வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறான பல்வேறு இயக்கங்கள் இதே கோரிக்கைக்காக போராடின .இதனால் தமிழக சட்டமன்றத்தில் 27 – 12 – 1956 அன்று தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப் பட்டது இச்சட்டம் நிறைவேற்றப் பட்டபோது தி.மு.க வோ தி.க வோ  சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்க வில்லை; நல்லவேளை இது திராவிடக் கழகத்தாரின் வேலை இல்லை.  
தமிழ் அங்கீகாரதிற்கான தொடர் போராட்டம் தொடர் தியாகம் 1967 தேர்தலில் வெளிபட்டது திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது 1967 ஏப்ரல் 14 அறிஞர் அண்ணாவின் அமைச்சரவை தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான   தமிழ்நாடு கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்றது .தமிழ்நாடு என்றச் சொல் மிக நீண்ட வரலாற்றின் விளைவு ;பெரும் தியாகதின் பயன் , எனவே மேற்கண்ட இதழாசிரியர் தனது கருத்தை மாற்றிக் கொள்வாராக .                                                                               

வியாழன், 10 நவம்பர், 2011

ஐயா என்னும் சொல்லின் அமைப்பியல்


நான் பணிபுரியும் பள்ளியில் அனைவருமே என்னிடம் தூய தமிழில் பேச முயல்வர் ; ஒழுங்காகப் பேச வரவில்லை என்றாலும் முயன்று பேசுவர். சமீபத்தில் மராட்டியத்திலிருந்து  எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவி ஒருநாள் Everybody is calling you “Ayya.” May I also call you “Ayya” Sir ? I gladly granted her wish. Immediately she practised the word and called me “Ayya” Then she asked whether  her pronunciation was correct ? Atonce  I appreciated her. Now  she is continuing it. இந்தி ஆசிரியை என்னை ஐயா என்று அழைத்தாலும், ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். ஐயா என்று உங்களை அழைப்பது ஏதோ பிச்சைக் காரர்கள் “ஐயா என்று அழைத்துப் பிச்சை கேட்பது போல் உள்ளது என்றார். நான் அவர்களுக்கு ஐயா என்னும் சொல் குறித்து சிறிய வகுப்பே நடதிவிட்டேன்.
உண்மையில் ஐயா எனும் சொல்லின் பொருள்தான் என்ன ?, இச்சொல் இழிவுப் பொருளைத் தருவதா ? மதிப்புக்குரியவர்களை நாம், ஐயா என்று அழைப்பது சரியா ? கவிஞர் காசியானந்தன் கூறுவது போல “கண்டவனை எல்லாம்  சார்” என்று நாம் அழைத்துப் பழகிவிட்டதால் மேற்கண்டதுபோல வினாக்கள் எழுவது இயல்பு. குமரி மாவட்டத்தில் தந்தையை ‘ஐயா’  என்று அழைக்கும் பழக்கம் மிகச்சமீபகாலம் வரையில் இருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் தாத்தாவை ஐயா என்று அழைக்கும் வழக்கம் உண்டு.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை ‘ஐயா’ என்று அழைப்பதை நான் கேட்டிருக்கிறேன்.
இலங்கையிலும் தந்தையை ஐயா என்று அழைக்கும் பழக்கம் உண்டு. இதனை அ . முத்துலிங்கத்தின் கீழ்க் கண்ட வரிகள் உறுதிப் படுத்துகின்றது “அம்மா பெரியவர்களுக்கு கோப்பி தயாரிக்கும்போது சிறிது ---------- கலந்து கொடுப்பார். தடிமன் காய்ச்சலை அது உடனேய சாய்த்து விழுத்திவிடும் என்று ஐயா அடிக்கடி சொல்லுவார். மருந்து என்பதால் அதற்கு வீட்டிலே தடையில்லை. சரியாக ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் ஐயாவுக்குத் தடிமன் காய்ச்சல் வந்துவிடும். அம்மா, முட்டைக் கோப்பி தயாரிக்கும் சத்தம் எங்களை எழுப்பும். ஐயா, ஆறு கால்கள் வைத்த மரக்கதிரையில் உட்கார்ந்து, கோப்பியை நார் இறைச்சியைச் சாப்பிடுவதுபோலச் சப்புக்கொட்டி சுவைத்துக் குடிப்பார்.” இவ் வரிகளில் ஐயா என்னும் சொல் தந்தையைக் குறிக்கக் காணலாம். மேலும் இங்கே அம்மாவின் தந்தையை அம்மையா என்றும் அப்பாவின் தந்தையை அப்பையா என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு. சிங்கள மொழியில் ஐயா எனும் சொல் சகோதரனைக் குறிக்கிறது. மேலும், சிங்களர்கள்  வயதில் மூத்தோரை ஐயா என்று அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
“ஐ” என்னும் வேர்ச் சொல்லிலிருந்து தான் ஐயா என்னும் சொல் உருவாகிறது. “ஐ” என்றால் தலைவன் என்று பொருள்.இச் சொல்லிலிருந்து ஐயை, ஐயனார், ஐயன் போன்ற தமிழ்ச் சொற்கள் உருவாகின்றன. குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தன்  காதலனை தலைவி என் ஐ என்று குறிப்பிடுகிறாள்.  சிலப்பதிகாரத்தில் பெருமைமிகு துறவியான கௌந்தியடிகளை இளங்கோ, கௌந்தி ஐயை என்று குறிப்பிடுகிறார். குன்றக் குரவையாடும் மகளிர் கொற்றவையை (காளி ) ஐயை என விளித்துப் பரவுகின்றனர். திருவள்ளுவரை நாம் ‘ஐயன் திருவள்ளுவன்’ என்று விளித்துப் பெருமை கொள்கிறோம். கொங்கு மண்டல மக்கள் தந்தையை “ ஐயன் ” என்று அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர் .   எனவே “ஐயா” என்பது தலைவனையோ  அல்லது தந்தையையோ   அல்லது மேன்மை பொருந்திய ஒருவனையோ  அல்லது மூத்தோரையோ   குறிக்கும் சொல்லாகவே  தமிழ் மொழியில்  தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறது . எனவே நாம் அனைவரும் தயக்கம் இல்லாமல் அனைவரையும் ‘ஐயா’ என்று அழைப்போம்                  
              

செவ்வாய், 1 நவம்பர், 2011

திருவனந்தபுரத்தில் ஒரு புத்தரி கண்டம்; கூடலூரில் பூ புத்தரி விழா

  ஒரு நாள்  செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது கூடலூர் பனியர் இன  மக்கள் கொண்டாடும் ‘பூ புத்தரி’ விழா. என்கிற செய்தியையும்; திருவனந்த புரம் ‘புத்தரி கண்டம்’ மைதானத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். என்கிற செய்தியையும் பாடித்தேன். இச்செய்திகளில் உள்ள ‘புத்தரி’ என்கிற சொல் என்னைச் சற்று சிந்திக்கவும் எழுதவும் தூண்டியது.
கூடலூர் பனியரின பழங்குடி மக்கள் இந்த ‘பூ புத்தரி’ என்ற   அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். அறுவடைத் திருவிழா என்பதால் இது வேளாண்மையோடு தொடர்புடையது என்பது வெளிப்படை. நெல் வயல்  அறுவடைக்கு ஆயத்தமானவுடன்; அறுவடை தொடங்கும்முன், ஐப்பசி மாதத்தில் இவ் விழாவைக் கொண்டாடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட நெல் வயலில் அவர்களின் பாரம்பரிய இசை முழங்க குலதெய்வத்தை வழிபட்டு கொஞ்சம் நெற்கதிரை அறுவடை செய்கின்றனர். அறுத்த நெற்கதிர்களை ஒருவர் சுமந்துவர அவர்களது பாரம்பரிய நடனத்தோடும் இசைக் கருவிகளின் முழக்கத்தோடும் ஊர் மன்றத்திற்கு கொண்டுவந்து பூசைகள் செய்து அதனை  நான்கு பாகங்களாக பிரித்து அவ்வூரிலுள்ள கோயில்களுக்குக் கொண்டுபோய் மாலைவரை பூசைகள்  செய்கின்றனர்.  பின்னர்  நெற்கதிர்கள் விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப் படுகிறது. அவ்வாறு வழங்கப் பட்ட நெற் கதிர்களை பனியரின மக்கள் தங்கள் வீடுகளுக்குக் கொண்டுசென்று வழிபட்டு தங்கள் தங்கள் வீடுகளில் அக் கதிர்களை பத்திரப் படுத்தி வைத்துக் கொள்கின்றனர். பழமையும் இயற்கையும் சிதையாத இவ்விழா புகழ்ச்சிக்குரியது                                                    
அது என்ன திருவனந்தபுரத்தில் ஒரு புத்தரி கண்டம் ? புத்தரி என்றால் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல் ; கண்டம் என்பது வயல். இவ் வயலிலிருந்து திருவனந்தபுரம் பத்மநாப சுவாமிக்கும் தென் திருவிதாங்கூர் மனர்களின் அரண்மனையாகிய கௌடியார் அரண்மனைக்கும் தேவையான நெல்லைப்  பயிரிட்டு பயன்படுத்தி இருகின்றனர்.இடைக் காலத்தில் இந்த வயல் நகர்மயமாதலால் மைதானமாக்கப் பட்டது தற்போது ஒரு சிறு பகுதியை மீண்டும் வயலாக மாற்றியிருக்கிறார்கள். அனந்தபுர திருத்தலத்திலும்  ‘இல்லம் நிறை’ என்ற ‘பூ புத்தரி’ விழா தற்போது வரை கொண்டாடப் பட்டு வருகிறது இவ் விழாவிற்கான நெற்கதிர் இந்த புத்தரிக் கண்டத்திலிருந்தே எடுத்துவரப் படுகிறது. சபரி மலையிலும் நிறை புத்தரிசி என்று இவ் விழா கொண்டாடப் படுகிறது. இங்கே பிரசாதமாக நெற்கதிர் தரப் படுகிறது. இந்த நெற்கதிரை மக்கள் தங்கள் வீடுகளில் கட்டி வைத்துக் கொள்கின்றனர். இதனால் செல்வம் கொழிக்கும் என்கிற நம்பிக்கை.
இதைப் போன்றதொரு விழா குருவாயூரிலும்   கொண்டாடப் படுகிறது. கன்னியாக் குமரி மாவட்த்திலும் ‘வீடு நிறைத்தல்’ என்கிற இவ்விழா மக்களால் கொண்டாடப் பட்டுத்  தற்போது, வழக்கிறந்துள்ளது. இன்நிகழ்வில் மக்கள் தங்கள் வயலிலிருந்து கைப்பிடி அளவு நெற் கதிரை அறுத்துவந்து தங்கள் வீடுகளில் கட்டி வைப்பர் இதனைத்  தொடர்ந்து அறுவடைக்குப் பின்னர் ஒரு நன்னாளில்  புதரிசிச்சாப்பாடு என்னும் புதிய அரிசியைக் கொண்டு சமைத்து உண்ணும் நிகிழ்வும் சிறப்பு வாய்ந்தது. புத்தரிசிச்  சாப்பாடு அன்று வகை வகையான உணவு வகைகள் இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அன்று மற்றுமோர் சிறப்பு, அன்று பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம். அன்று முழுதும் சாப்பாடும் கொண்டாட்டமும்தான்.   
தமிழ் தேசியத் திருவிழாவான பொங்கலில் புத்தரிசி கொண்டு பொங்குதல் என்பது சிறப்புவாய்ந்தது.ஆனால் கால மாற்றம் காரணமாக புத்தரிசி என்பது கடையிலிருந்து வாங்கும்   ஏதோ ஒரு    அரிசியாகிவிட்டது    என்ன அவசரம்? ஏன் அவ்வளவு அவசரம்? சென்று சென்று பார்க்கிறாயே, பால் பொங்கிற்றா என்று! அன்னை அறிவார்களே, எத்துணை நேரம் தழலிடை இருந்தால் பொங்கிப் பதமாகும், புத்தரிசி என்பதனை! உனக்கேன் அந்தத் தொல்லை; ஓராயிரம் தடவை சென்று கேட்கிறாயே - ஓஹோ! உன்னை உற்றாரும் நண்பர்களும் கேட்கிறார்களா - பால் பொங்கிற்றா என்று! "ஆம்' எனப் பதிலும் கூறவேண்டுமா”  என்ற அறிஞர் அண்ணாவின் பொங்கல் குறித்த வரிகள் புத்தரிசி என்பதனை குறிப்பிடக் காணலாம்
  தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் மிக முக்கியமான உணவுப் பொருள் நெல். தமிழகத்தின் தேசியத் திருவிழாவான பொங்கல் திருவிழாவும் புத்தரிசியை மையமிட்டதே. உழவுத் தொழிலே மக்கள் அனைவரையும் தாங்கும் தொழில் எனவேதான்  வள்ளுவர் “உழுவார் உலகத்தாராகிய தேர்க்கு  அச்சாணி” என்கிறார். நவீன உலகத்தில் உழுபவனும் அவனது நிலமும் மதிப்புறு பொருளாக இல்லை. இந்நிலையில் மரபான விழாக்கள்சில  உழுபவனையும் அவனது நிலத்தையும்   கொஞ்சம் தாங்குகிறது. மேற்கண்ட விழா தொல்பழங்கால   தமிழர் விழாவாக இருந்திருத்தல் வேண்டும். பூ புத்தரி, இல்லம் நிறை, புத்தரி, நிறை புத்தரிசி. போன்ற இவ்விழா குறித்த அனைத்துச் சொற்களும் தூயதமிழ்ச் சொற்களாக இருப்பது மேற்குறித்த கருத்திற்கு வலு சேர்க்கின்றன. புடவியை மாசு படுத்தி; உடலையும் மாசு படுத்தும் வணிக மயமாக்கப்பட்ட தீபாவளி வாழ்க.

சனி, 29 அக்டோபர், 2011

மலைகளை உடைத்து எறியும் அறியாமை ?

            வேரல் வேலி வேர் கோட் பலவின்
            சாரல் நாட செவ்வியை ஆகுமதி
            யார் அஃது அறிந்திசினோரே சாரல்
            சிறு கோட்டுப்பெரும் பழம் தூக்கியாங்கு, இவள்
            உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே -குறுந்தொகை
வேர்ப் பலாக்களுக்கு மூங்கில் வேலியிட்ட மலை நாட்டின் தலைவனே ! சிறிய கிளையில் தொங்கும் பெரிய பலாப்பழம் போல அவள் காதல் பெரிது  ஆனால் உயிர் மிகச் சிறியது . இதை அறிந்தவர் யார்.                                                    மேற்கண்ட பாடலும் விளக்கமும் தலைவியின் காதலை தலைவனுக்கு, தோழி உணர்த்துவதாக அமைந்த பாடலாகும். இப் பாடலில்  குறிஞ்சி நிலத்தின் அழகு எவ்வளவு ( மலையும் மலை சார்ந்த பகுதியும் ) அழகாக, இயல்பாக குறிப்பிடப்பட்டுள்ளது பாருங்கள். இவை நாம் வேகமாக இழந்து வரும் காட்சிகள். இப் பாடலில் ‘வேரல் வேலி’ என்ற சொல் என்னை  கொஞ்சம் சிந்திக்கச் செய்கிறது. வேரல் என்றால் மூங்கில் என்பது பொருள். எனவே வேரல் வேலி என்பது மூங்கிலால் செய்யப்பட்ட வேலி   என்பது பொருள். எனவே நமது முந்தயச் சமூகம் வீட்டிற்கோ அல்லது தோட்டத்திற்கோ வேலி அமைக்காமல் இல்லை. வேலி அமைத்து  பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள்ளேயே வாழ்ந்திருக்கிறார்கள்.ஆனால் நமது முந்தையச் சமூகம் அமைத்திருந்த வேலி எந்த வகையிலும் இயற்கையை மாசுபடுத்தாது, இயற்கையை அழிக்காது .                                              நவீன உலகம் நாகரிகம், நவீனம் என்ற பெயரில் இயற்கையை வேகமாக அழித்து வருகிறது. இவ் அழிப்பில் தோட்டங்களுக்கு அல்லது வீட்டிற்கு வேலி அமைப்பதும்  முக்கிய இடம் பெறுகிறது. நவீன உலகம் சுற்றுச்சுவர் அமைக்க பெரும்பாலும் சிமிட்டி செங்கலையே பயன்படுத்துகிறது. இச் செங்கல் எவ்வாறு செயப்படுகிறது? பெரும் மலைகளை உடைத்து கருங்கற்களாக்கி; பின்னர், அதனை கிறசற் எனப்படும் அரவை இயந்திரத்தில் அக்கருங்கற்களைப் போட்டு உடைத்துப் பொடியாக்கி சிப்ஸ் என்கிற நிலைக்கு அம்மலைகளை உருமாற்றி; மணலும் சிமிட்டியும் கலந்து சிமிட்டி செங்கல் செய்யப்படுகிறது. இச்செங்கல் கொண்டே நவீன உலகம் சுற்றுச்சுவர் அமைக்கிறது; வேலி அமைகிறது.இச் செங்கற்கள் கொண்டிருக்கும் மூலப் பொருட்கள்  என்ன ? கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை உருவாக்கிய மலை, இயற்கையின்  விளைவான ஆறுகளைச் சுரண்டி எடுக்கப்படும் மணல், இயற்கையைச் சுரண்டி உருவாகப் படும் காறைசிமிட்டி. மேற்கண்ட மூலப் பொருள்களில் ஒரு சிறு துண்டை நம்மால் உருவாக்க முடியுமா ? என்றால், அதற்குப் பதில்கூற முடியாது.  நவீன நகர்கள் விளைநிலங்களை அழித்து உருவாக்கப் படுகிறது; ஒழியட்டும்.ஒரு கிரவுண்டு அரை கிரவுண்டு என்று பாடம் பிரிக்கப்பட்டு நூறு, நூற்றைம்பது  வீட்டு மனைகள் உருவாக்கப் படுகின்றன . நூறு, நூற்றம்பது வீடுகளும் புதிதாக கட்டப்படுகின்றன அனைவரும் தனித்தனியாகச் சுற்றுச் சுவர் கட்டுவதுதான் இங்கே இயற்கைக்கு எதிரான பெரும் வன்முறை. அனைவரும் தனித்தனியாக சுற்றுச் சுவர் கட்டவேண்டும் என்று பரப்பியவன் எவன்,  அனைவரும் சேர்ந்து ஒரே ஒரு  சுற்றுச் சுவர்  கட்டினால் என்ன? நாம் செய்வது தவறு என்பது தெரியாமல் தவறைச்  சரியாகச்  செய்து வருகிறோம்; இயற்கையை அழித்து வருகிறோம்.                                            பனையோலை வேலி, பனை கருக்கு மட்டை வேலி, புதர் வேலி, தென்னையோலை வேலி, காட்டாமணக்கு வேலி, கள்ளிச் செடி வேலி, மண் வேலி,அதிகம் வறட்சியைத் தாங்கும் அரளிப்பூச் செடி கொண்டும் வேலி அமைக்கலாமே.  எனவே  பாரம்பரிய முறைகளை நகரங்களில் பரப்புவோம்; இயற்கையையை எதிர் வரும் தலைமுறைக்குத் தருவோம்.