வெள்ளி, 1 ஜூன், 2012

தமிழன் கண்ட வாழ்க்கை மற்றும் மெய்யியல்



            மனிதன் தனது இயல்பான வாழ்வில் தன்னால் எதிர் கொள்ள முடியாத பெரும் சிக்கல்கள் வரும்போது கடவுளைத் தேடத் துவங்குகிறான் . இவ்வாறு கடவுளைத் தேடிச்செல்லும் மனிதனை மதங்களும் மதம் சார்ந்த அரசியலும் தனதாக்கி பெரும் அரசியல் சக்திகளாகமாறி சமூகத்தையும் மக்களையும் தனது அடிமைகளாக உருமாற்றிவிடுகிறது. சமீபகாலமாக தனிமனிதர்கள் சாமியார் வேடமணிந்து கோடிகளைக் குவித்து கொட்டமடிப்பதுவும் இதன் தொடர்ச்சியான நிகழ்வு.
            தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை தமிழன் மதங்களுக்கு அடிமையாகி இழந்தவை அளவிடமுடியாதது. சமீபத்தில் நான் பார்த்த ஒரு திருமண அழைப்பிதழ் இப்பத்தியை எழுதத்தூண்டியது . அவ் அழைப்பிதழில் மணஇடம் என்ற பகுதியில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் என்று குறிக்கப் பட்டிருந்தது . சாதாரணத்  தமிழனிடமிருந்து “முருகன்” என்ற தமிழ்க் கடவுளை பிரித்தமை மதஅரசியலின் வெற்றியாகும்; தமிழன் வீழ்ந்தஇடம் இதுவாகும்.     
            பண்டைத் தமிழரின் அக,புற இலக்கியங்கள் அவர்களின் அன்றைய வாழ்வின் விளக்கமாக அமைந்துள்ளன. புறம் சார்ந்த நூல்கள் நேரிடையாகவும் அகம் சார்ந்த நூல்கள் இலக்கியப் படைப்பின் வாயிலாகவும் அன்றைய வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றன . இந்த வாழ்வை நாம் ஆழ்ந்து பார்த்துக்கொண்டே வருவோமானால் ஒரு சீரான மெய்யியல் புலத்தின் அடிப்படையில் தமது வாழ்வை தமிழன்  நடத்திவந்திருப்பதைக் காணமுடியும் .சங்க இலக்கியம் என அழைக்கப்படும் எட்டுத்தொகை , பத்துப்பாட்டு ஆகிய நூல்களைப் பார்க்கப் போனால் அவை கடவுள் சார்புடையனவாக இல்லை. ஆனால் கடவுள் உணர்வு அவர்களிடம் இருந்திருக்கின்றது. ஐந்திணை நிலங்களுக்கும் அவர்கள் ஐந்து தெய்வங்களைக் கொண்டிருந்தனர் சிவன் திருமால் போன்ற கடவுளர் பற்றிய தொன்மக் கதைகளையும் மேற்கூறிய நூல்களில் ஆங்காங்கே காண்கிறோம் திணைநில மக்களால் தெய்வ வழிபாடு ஒரு சடங்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் தமிழர் கடவுளை முழுதும் நம்பியோ , சார்ந்தோ கடவுளிடம் தங்களை முழுதுமாக ஒப்படைத்துக் கொண்டோ வாழ்வை நடத்தியதில்லை. அறிவாலும் அன்பாலும் மாந்தன் அடையத்தக்க மேம்பாட்டினைக் கடவுளின் உதவியின்றி அடைய முடியும் என்ற கோட்பாடே அந்நாள் தமிழரின் வாழ்கையை ஊடுருவியிருந்திருக்கிறது.
“ஓரில் நெய்தல் கறங்க , ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புனர்ந்தோர் பூவணி அணியப் , பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்;
இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரோ!”
என்பது புறநாநூற்றின் பக்குடுக்கை நன்கணியார் பாடல். இது ஒரு வீட்டில் சாவுப்பறை முழங்குகிறது மற்றொரு வீட்டில் திருமணத்திற்கான முழவின் இன்னிசை ததும்பி நிறைய மணம் முடித்த காதலனைக் கூடிய இளம்பெண் பூக்கள்சூடி மகிழ்ந்திருக்கிறாள் . ஆனால் அதேநேரத்தில் கணவனை இழந்த பெண்ணோ , துன்பம் மிகுதியால் கண்ணீருடன் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள் . இப்படி இருவேறுபட்ட நிலையில் இவ்வுலகத்தை ஒருவன் படைத்திருப்பானாயின் அவனைப் போன்ற பண்பற்றவன் வேறொருவன் இருக்க முடியுமா ? அதனால் துன்பமே இவ்வுலகத்தின் இயற்கையாகும் . ஆயினும் துன்பங்கள் கண்டு துவண்டுவிடாது அதனூடே இன்பத்தைக் காண முயல்வார்களாக !. நம் வாழ்வைச் சரிசெய்து கொள்வது நம் கையிலேயே இருக்கிறது . வாழ்வின் முரண்பாடுகளைத் தெளிவாக புரிந்து கொண்டவன் துன்பத்தின் நடுவிலும் இன்பம் காண்பான்  என்கிறது.

 கணியன் பூங்குன்றநாரும் தமது பாடலில்  தீதும் நன்றும் பிறர்தரவார ; அது வாழ்வின் இயல்பு என்பதை உணர்ந்தால்  வாழ்வில் துன்பம் இல்லை என்பதை வலியுறுத்திக் கூறுகிறார் . திருவள்ளுவரும்
“இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்”  
இன்பத்தை விரும்பாதவன், துன்பத்தை இயல்பானது  என்று கருதுபவன், துன்பத்தைக் கண்டு வருந்தமாட்டான். என்று, துன்பம் என்பது வாழ்வில் இயல்பானது என்று கூறுகிறார் . மேற்கண்ட தமிழன் கண்டு கூறிய மெய்யியல் கருத்துக்கள் முழுவதும் தமிழனைத்  தனித்த ஆளுமை பெற்ற இனமாக வாழச்செய்தது . இக் கருத்துக்களை விடுத்து தமிழன் வைதீகக் கோட்பாடுகளை நாடிச் செல்லத் தொடங்கியபோது அவன் தான் ஏதுமற்றவன் என்ற உணர்வோடு அடிமை உணர்வுடையனவாக வாழ்ந்து வருகிறான் . தற்போதய நமது  தேவை தமிழ்ப் பனுவல்கள் கொண்டிருக்கும்  வாழ்வியல் கோட்பாடுகளை மீட்டு, நாம் இழந்த ஆளுமையை மீண்டும்  பெறுவதாகும்.
நன்றி:ம.இலே.தங்கப்பா,க.நெடுஞ்செழியன்                                                         
            

ஞாயிறு, 13 மே, 2012

"மகுடம்" இசையுடன் அகிலா!


கண்களை மூடிக் கொண்டு அந்த இசைக் கச்சேரியைக் கேட்டால், ஏதோ ஒரு பெரிய இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. கண்கள் திறந்தால் மேடையில் ஓர் இளம் பெண், உடன் இருபுறமும் இரு இளைஞர்கள். அவர்கள் கையில் சாதாரண வட்ட இசைக் கருவி, அவ்வளவே.
தவில், பம்பை, பறை, உடுக்கு, தபேலா, மிருதங்கம் என அத்தனைத் தோல் இசைக் கருவிகளின் ஒலியையும் கொண்டு வந்துவிடுகிறார்கள். எப்படி இது சாத்தியம்?
அந்த இசைக் கருவிக்கு "மகுடம்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். பறையைப் போன்று காட்சிதரும் இது வேறொன்றும் இல்லை, தவிலில் இரு புறமும் இருக்கும் "உச்ச'த்தையும், "மந்த'த்தையும் கழற்றி எடுத்து தனியே வைத்து, கைகளால் பலவகைக் கருவிகளின் ஒலிகளை உண்டாக்குகிறார்கள் கலைஞர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சங்கர் கணேஷ், சக்தி கணேஷ் இளைஞர்கள்தான் அந்த இருவரும். ஏறத்தாழ இவர்களின் தெருவே கணியன்கூத்துக்குப் பெயர்போன தெருவாகும்.
23 வயதே நிரம்பிய சங்கர் கணேஷ் எட்டாம் வகுப்பும் 25 வயதான சக்தி கணேஷ், பி.காமும் படித்திருக்கின்றனர். தங்களின் இசை குரு ராமமூர்த்தியின் மூலம் இந்தத் தொழிலை சுத்தமாகக் கற்றிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் இவர்கள் இருவரும். கடந்த ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இவர்களின் இசையைக் கேட்ட அகிலா, இதையே பக்க வாத்தியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரை தமிழ்நாட்டில் விழுப்புரம், உடுமலைப்பேட்டை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும்தான் இவர்கள் சேர்ந்து கச்சேரி நடத்தியிருக்கிறார்கள். இசை அளிப்பவர்களைப் போலவே இந்தக் குழுவின் ஒரே பாடகி, அமைப்பாளரான அகிலாவும் வித்தியாசமாவர்.
நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் பெண் பாடகர்கள் இப்போது அதிகரித்து வரும் நிலையில், நாட்டுப்புறப் பாடல்களுடன் பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும், ஏன் இன்னும் ஒரு படி தாண்டி, இன்குலாப், தணிகைச்செல்வன் ஆகியோரின் பாடல்களையும் அற்புதமான சாரீரத்தில் வழங்குகிறார் அகிலா.
சமூகப் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தும் இவர்களின் பாடல்களுக்கு முற்றிலும் வித்தியாசமான இசையுடன், இடையிடையே இசை மாற்றத்துடன் அரங்கம் அதிரும் இசைக்கச்சேரி களைகட்டுகிறது.
அவருடன் பேசியதிலிருந்து...
"சிதம்பரத்தைச் சேர்ந்த பெற்றோர் பழனி- ஜோதிமணி, வணிகக் குடும்பம். சிறுவயதிலிருந்தே இசை மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக சென்னையில் இசையில் எம்ஏ, ஆய்வியல் நிறைஞர் (எம்பில்) ஆகியவற்றை முடித்தேன். பல்வேறு குழுக்களில் பாடகராக, நடனக் கலைஞராகப் பணியாற்றி வருகிறேன்.
கணியன்கூத்துக் கலைஞர்களைப் பார்த்த பிறகு, அவர்களைக் கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியுமா? என்று அங்கு சென்று பார்த்துப் பேசினேன். இதுவரை மூன்று நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். தனிக் குழுவாக அமைக்க முடியுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. இயல்பாக அது அமைய வேண்டும் என விரும்புகிறேன்''
 நன்றி : தினமணிக் கதிர் 13-05-2012

கர்நாடக இசை என்பதே தமிழிசைதான்



கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வரும் இசை ஆசிரியையிடம் இசை மூவர் யார் ? என்று ஒரு கேள்வியைக் கேட்டேன் . உடனடியாக அவர் தியாகையர் , சியாமசாஸ்திரிகள் , முத்துசாமி தீட்சிதர் என்று பதில் கூறினார் . அடுத்ததாக தமிழிசை மூவர் யார் ? என்று கேட்டேன் கொஞ்சம் சிந்தித்தார் ; என்னைப் பார்த்து சிரித்தார் ;தெரியல அப்பிடி மூணுபேர் இருக்காங்களா? என்று என்னைக் கேட்டார். தமிழ்நாட்டில் இயங்கும் பள்ளியில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சார்ந்த இசை ஆசிரியருக்கே தமிழிசை மூவரைத் தெரியவில்லை என்றால் தமிழிசையின் நிலை என்ன ? சாதாரணத் தமிழ் மக்களைப்பற்றி கூறத் தேவையில்லை . மாணவர்கள் நிலை என்ன ? இவரிடம் இசையைக் கற்கும் மாணவர்கள் தாம் வாழும் நிலத்தின் , தமது தாய்மொழியின்  இசை குறித்து தற்குறிகளாக மாறிவிட மாட்டார்களா ? இவ் ஆசிரியருக்குத் தெரிந்ததெல்லாம் கர்நாடக இசை மட்டுமே. இவ் கர்நாடக இசையும் ஏதோ வடமொழி அறிஞர்கள் கண்டறிந்து உருவாக்கியது என்பதுதான் இவரது புரிதல் .

தமிழ்நாட்டில் தமிழனாகப் பிறந்துவிட்டால் அடிமை மோகம் உருவாகிவிடும் . தனக்கு என்று எதுவும் கிடையாது என்று நினைப்பவன் அவன். இதனால் தமிழனை கிட்டத்தட்ட பலநூறு ஆண்டுகள் வேற்று மொழி அரசுகள் அடிமையாக்கி  ஆண்டன . கர்நாடக அரசர்கள் , தெலுங்கு அரசர்கள் , மராத்திய அரசர்கள் , இசுலாமிய அரசர்கள் , ஆங்கில அரசு , பிரெஞ்சு அரசு என்று தொடர்ந்து பல நூறு ஆண்டுகள் தமிழன் அடிமை வாழ்வு வாழ்ந்து விட்டான் . இந்தியக் குடியாட்சி உருவான பின்பு தமிழன் திரைப்படத்திற்கு அடிமையானான் திரைப்படக் கதாநாயகன் இவனுக்குப் பெரும் தலைவனாகத் தெரிந்தான் ஆட்சியை அவனிடம் தந்தான் இதன் விளைவு தமிழக  ஊடகங்கள் ,வீடு ,பள்ளிக்கூடம் ,கோவில் ,கலந்துரையாடல்கள் என அனைத்து நிலைகளிலும் தமிழைத் தவிர மற்ற எல்லா மொழிகளும் வாழ்கின்றன . அவனது தத்துவம் களவாடப்பட்டது குறித்து எதுவும் தெரியாது . நமது ,மொழி ,பண்பாடு ,கலை ,மரபுகள் அனைத்தும் ஒடுக்கப் பட்டது குறித்து எதுவும் தெரியாது . இந்நிலையில் தமிழன் வளர்த்த தமிழிசை களவாடப் பட்டது குறித்தும்  அவனுக்கு எதுவும் தெரியாது .

ஓர் இனத்தை வெற்றிகொள்ள நினைக்கும் எதிரிகள் முதலில் மொழியையும் மரபான அடையாளங்களையும் அதன் இலக்கியங்களையும் அழிக்கும் செயலில் ஈடுபடுவர் . யாழ்ப்பாணம் நூலகம் கொளுத்தப்பட்டது இந்தவகையைச் சாரும் . தமிழகத்தில் பல்லவர்கள் ஆட்சியின் போது தமிழோடு வடமொழி பெருமளவில் கலக்கப் பட்டது ; மணிப்பிரவாள நடை உருவானது . கல்வெட்டுகள் மணிப்பிறவாள நடையில் எழுதப்பட்டது. நம் தமிழிசையின் வழிவந்த இசைக் கலைச்சொற்கள் புறந்தள்ளப்பட்டு வடமொழிச் சொற்கள் புகுத்தப்பட்டது . ஒரு கலைத்துறை நிலைத்து வளம்பெற கலைச் சொற்கள் அடிப்படையானவை . நம் தமிழிசை மரபில் இந்த அடிப்படை நொறுக்கப்பட்டன. . இரண்டாம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் தமிழிசையின் ஏழு சுரங்களும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற கலைச்சொற்களால் சுட்டப்பட்டிருக்கிறது . ஆனால் பிற்காலத்தில் இவை ஷாட்சம், ரிசபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், என்று வடமொழியாக்கப்பட்டது . பண்ணப்படும் இசை வடிவத்திற்குப் “பண்” என்று நம் முன்னோர் பெயரிட்டு அழைத்தனர் பிற்காலத்தில் இச்சொல் புறம்தள்ளப்பட்டு ராகம் என்ற வடசொல் புகுத்தப்பட்டது மேலும் இயக்கம், மண்டிலம் போன்ற சொற்கள் இருக்க ஸ்தாயி  என்ற வடசொல் புகுத்தப்பட்டது சுரங்கள் ஒலிப்பில் உயர்ந்து செல்வது ஏறி வருவது ஏறுநிரல் குறைந்து வருவது இறங்கி வருவது இறங்கு நிரல் இன்று இவை ஆரோகணம், அவரோகணம் என்ற வடசொல்லால் குறிக்கப்படுகிறது. . தமிழன் கண்ட பண்கள் கூட வடமொழியானது .செம்பாலை அரிகாம்போதி யானது. படுமலைப் பாலை நட பைரவி யானது. கோடிப் பாலை கரகரப் பிரிய ஆனது. விளரிப்பாலை அனுமத் தோடி யானது. இவையெல்லாம் போகட்டும்,

நமது இசையை தமிழிசை , இசை , இன்னிசை என்று நமது நூல்கள் குறிப்பிடுகின்றன ஆனால் சங்கீதம் என்ற வடசொல் புகுத்தப்பட்டது .நம் இசை அரங்குகளுக்கு இன்னிசை அரங்கு என்ற சொல் இருக்க அதனை சங்கீத கச்சேரி ஆக்கிவிட்டார்கள் இன்று தமிழக அரசு இசைக் கல்லூரி களிலும்கூட வடசொற்களே கோலோச்சுகிறது . இது தமிழின் தமிழினத்தின் வீழ்ச்சியாகும் . இவ் வீழ்ச்சியில் இருந்து விடுபட தமிழகப் பள்ளி மற்றும்  கல்லூரிகளில் இசை வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். இவ் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் தமிழிசை அறிஞர்களைக் கொண்டு உருவாக்கப் படவேண்டும்; நமது மரபான தமிழிசை பரப்பப்பட வேண்டும்
நன்றி : ப .சோழ நாடன் , நா . மம்மது 

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

மகுடாட்டம் அல்லது கணியாட்டம்



கணியான்  ஆட்டம் அல்லது கணியான் கூத்து எனப்படுவது கணியான் என்ற பழங்குடி சாதியினரால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக்கலையாகும் . “மகுடம்” என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை “மகுடாட்டம்” என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் இக்கலை பல  நூற்றாண்டுகளுக்குக்கு முற்பட்ட ஆதிக்கலை என்பது ஆய்வாளர்கள் கருத்து. இந்தக் கலையாடல் ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. இடைவெளியே இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும் இது தெய்வத்தின் எதிர்ப்புறத்தில் மட்டுமே ஆடப்படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி கன்னியாக்குமரி  தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறக் கோவில் கொடைவிழாக்களில் இக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகிறது.
கணியான் கூத்தில் இசை மிகவும் முக்கிய இடம் பெறுகிறது. மகுடம், ஜால்ரா போன்றவை முக்கியமான இசைக்கருவிகளாகும். “மகுடம்” டேப் அல்லது தப்பட்டை என்னும் வாத்தியத்தை ஒத்ததாகும். வேம்பு, பூவரசு மரங்களால் செய்யப்பட்ட வட்டப்பகுதியில் பூம்பசுவின் தோலைக் கட்டி செய்யப்படுகிறது இந்த இசைக்கருவி. உச்சம், மந்தம் என நுண்ணிய வேறுபாடு மிக்க இரண்டு மகுடங்களை இசைக்கலைஞர்கள் பயன்படுத்துவர். மிகுந்த ஓசையைத் தர உச்சம். இளகிய ஓசையைத் தர மந்தம். சாமியாடியின் உக்கிரத்தை அதிகரிக்க உச்சம் இசைக்கப்படும். சோகத்தை உணர்த்த மந்தம் இசைக்கப்படும். முதலில் மகுடம் இசைக்கப்படுகிறது. உடன்பாடுபவர் ஜால்ராவில் தாளம் போடுவர். அண்ணாவி (ஆசிரியர்) பாடும் போது இடது காதை இடது கையால் பொத்தி வலது கையை வீசிப் பாடுவார். இசை கலந்த உரையாக இது அமைந்திருக்கும். பாடல்கள் ஆங்காங்கே விரவி வரும். மரபிசை , கிராமிய இசை போன்ற இசைக்கூறுகளும், கல்யாணி, ஆனந்த பைரவி, முகாரி, பூபாளம், தோடி, நாட்டை, அடாணா, பைரவி போன்ற இராகங்களும் இடம் பெறும். இந்த இசைக்கருவிகளை அடிக்கடி நெருப்பில் வாட்டி உரமேற்ற வேண்டும்.
கணியான் கூத்தின் போது சிறு தெய்வக்கதையே பாடி ஆடப்படுகிறது. சுடலை மாடனுக்கும் கணியானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. கணியான் கூத்து நடக்கும் கோயிலின் தெய்வம் பற்றிய கதையை முதலில் பாடிப் பின் மக்கள் விரும்பும் கதையைப் பாடும் வழக்கம் உள்ளது. நீலி அம்மன் கதை, சுடலைமாடன் கதை, பன்றி மாடன் கதை, வண்ணாரமாடன் கதை, கருப்பசாமி கதை, இசக்கியம்மன் கதை, முத்தாரம்மன் கதை, சந்தன மாரி கதை, முத்துப்பட்டன் கதை போன்றன குறிப்பிடத்தக்க கதைகளாகும். இது தவிர ராமாயணம், மகாபாரதக் கதைகளை வாய்மொழி வழக்கில் பாடியும் ஆடுவதுண்டு.

சிறுதெய்வ வழிபாட்டில், சிறு தெய்வங்களின் கதைகளை முதன்மைப்படுத்துவதே கணியான் கூத்தின் நோக்கமாக உள்ளது. கணியான் கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டும் பேயாட்டம்’, ‘அம்மன் கூத்துபோன்ற நிகழ்வுகள் நாடகக் கூறுகள் அதிகம் கொண்டனவாகும். எனவே விழாவின்போது சடங்குகளைக் கதை நிகழ்ச்சியாகச் செய்து காட்டுவதும் கணியான் கூத்தின் நோக்கமெனக் கொள்ளலாம்.

இரவு ஒன்பது மணியளவில் கணியான் கூத்து நிகழ்வு தொடக்கம் பெற்று நடக்கிறது. சுடலைமாடன் கோவிலில் வெள்ளி இரவிலும் அம்மன் கோவிலில் செவ்வாய் இரவிலும் கூத்து நடக்கிறது. நடு இரவு நேரத்தில் சாமியாடிகணியானைக் கூப்பிடுகிறார். வழிபாட்டுக்குரிய தெய்வம் பூசாரியின் மீது வந்து இறங்கும் என்பது சமய நம்பிக்கை. அப்போது அவர் தன்னை மறந்த நிலையில் ஆடுவார். அவரைச் சாமியாடிஎன்று குறிப்பிடுவார்கள். அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் பேச்சு தெய்வத்தின் கட்டளையாகக் கருதப்படும். இரத்தப் பலிக்கான வேண்டுகோள் விடும் சாமியாடி தன் ஆட்டத்தை நிறுத்துவதற்கும் கணியான் குழுவினர் ஆடுவதற்குமான சூழல் உருவாக்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய கலையாகக் கணியான் கூத்து விளங்குவதால் அதன் கால அளவு குறித்த கவலை ஏற்படுவதில்லை
கணியான் கூத்தில் மொத்தம் ஏழு கலைஞர்கள் இடம் பெறுவர். இரண்டு பேர் பெண்வேடமிட்டு ஆடுவார்கள். கதை கூறிப் பாடும் ஆசிரியர் அண்ணாவிஎனப்படுவார். இவரே குழுவுக்குத் தலைவராகவும் இருப்பார். ஒரு துணைப்பாடகர், ஜால்ரா இசைப்பவர், மகுடம் எனும் வாத்தியம் இசைப்போர் இருவர் என அமைவர். மகுடம் இசைப்பவர்களில் ஒருவர் அண்ணாவியின் பாட்டை பின்பற்றி பின்பாட்டு பாடுவார். மற்றொருவர் ஜால்ரா இசைப்பவர். இது தவிர அம்மன் ஆட்டம் ஆடுபவர், பேயாட்டம் ஆடுபவர், திரளை போடுபவர் என துணையாட்டக்குழுக்களும் உண்டு. இது தேவைக்கும், இடத்துக்கும் தகுந்தவாறு வேறுபடும். கணியான் கூத்து நடைபெறும் போது முதன்மைக் கலைஞர் மேடையின் நடுவில் நிற்பார். இவர் திறம்பட்ட கலைஞராக விளங்குவார். இவரை மையப்படுத்தியே கணியான் கூத்தின் தரம் நிர்ணயிக்கப்படுவதுண்டு. கூத்தின் போது ஆசிரியர் மேல் துண்டை வேட்டிக்கு மேல் இடுப்பி்ல் கட்டிக் கொள்வார். மகுடக்காரர்கள் அவருக்கு இருபக்கங்களிலும் நின்று கொள்வார்கள். இவர்கள் மகுடத்தை இடுப்பில் கயிற்றினால் கட்டிக் கொண்டு தோற்றமளிப்பார்கள். அண்ணாவிமுதலில்பாட அப்போது பெண்வேடமிட்ட ஆண்கள் ஆட, மகுட இசை, பக்கவாத்திய மேளக்காரர்களின் குரல்கள், ஜால்ரா இசை போன்ற பின்னணிகளுடன் கூத்து நடத்தப்படும். பாடல்களை அண்ணாவி விளக்கும் போது பின்னணி இசை குறைவாகவே இருக்கும். இந்தச் சமயத்தில் பெண் வேடதாரிகள் ஆடுவது இல்லை. அண்ணாவியின் வலது புறத்தில் ஒருவரும் இடதுபுறத்தில் ஒருவருமாக நின்று இவர்கள் தங்களது கால் சலங்கைகள் ஒலிக்குமாறு தரையில் கால்களைத் தட்டிக் கொண்டே இருப்பார்கள். பொதுவாக, பெண் வேடதாரிகளின் நடனத்தில் பாத வேலைப்பாடு அதிகம் காணப்படுகிறது. வேகமான பாத அசைவுகளில் தேர்ந்து விளங்குகிற கலைஞர்களாக இவர்கள் இருப்பார்கள். அண்ணாவி பாடும்போதும், கதையினைக் கூறும்போதும் மகுடக்காரர்கள் இசைத்துக் கொண்டே இருப்பார்கள். நாட்டார் கலைகளுக்கே உரிய மண்ணின் பாவனைகள், நகைச்சுவை, பாலியல் குறியீடுகள் அனைத்துமே இக்கலையில் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன.
“மகுடம்” என்ற சொல்லுக்குப்  பொருள் தேடிப் பார்த்த போது “கிரீடம்” அல்லது “முடி” என்றே அகராதிகள் பொருள் சொல்கின்றன . மகுடம் என்ற இசைக் கருவி பற்றி அகராதிகளில் பொருள் இல்லை ; பெரும்பகுதி தமிழ்மக்களுக்கும் மகுடம் என்ற இசைக்கருவி பற்றி தெரியாது . கணியான் கூத்தில் பக்கவாத்தியக் கருவியான  இந்த மகுடம் ஒரு நாட்டுப்புற இசைக் கருவியாக மட்டுமே இக்கலையைத்  தெரிந்த ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர் .இதையும் தாண்டிய ஒரு அடையாளம் மகுடம் என்ற இசைக்கருவிக்கு இல்லை . ஆனால் , இந்த மகுடம் ஒரு செவ்வியல்கூறு நிறைந்த இசைக் கருவியாகும் . இது கடத்துக்கு இணையான , மிருதங்கதுக்கு இணையான, தபுலாவுக்கு இணையான, தவிலுக்கு இணையான ஒரு இசைக் கருவியாகும் . இன்னபிற தோலிசைக் கருவிகளில் வாசிக்கப்படும் அனைத்துப் பாடங்களையும்  இந்த இசைக்கருவியில் வாசிக்க முடியும் .வாசித்து வருகின்றனர் . மகுடக் கலைஞர்கள் தேர்ந்த இசைக் கலைஞர்கள்தான் . இவர்கள் தங்களது குருவான அண்ணாவியிடம்  இசை கற்கின்றனர் . பரம்பரை பரம்பரையாக இக் கலையை நிகழ்த்தியும் வருகிறார்கள் .
மகுடம், கணியான் கூத்துக்கு மட்டுமல்ல மரபிசைப் பாடல்களுக்கும் பக்க வாத்தியமாக வாசிக்க முடியும். ஆனால், இக் கலைஞர்களுக்கு எந்தஒரு பாடகரும் வாய்ப்பு வழங்கவில்லை .இது நம் தமிழ் மண்ணுக்கே உரிய அவலங்களில் ஓன்று . நாம் நமது மரபுகளுக்கு எப்போதுமே தரம் தாழ்ந்த தரம் தருவதே இதற்குக் காரணமாகும். இக் கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்ததும் ஒரு காரணமாகும் . நாம் சாதியை என்று விட்டொழிக்கப்போகிறோம் ?   நாம் மக்களை மக்களாக என்று மதிக்கப் போகிறோம் ?
நல்வாய்ப்பாக இக் கலையை சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பார்த்த இசை ஆய்வாளர்,நாட்டியக் கலைஞர்  செல்வி . அகிலா இவ்விசைக் கருவியின் இசைச் செறிவினை உணர்ந்து,இவர்கள் செறிந்து வாழும் திருவைகுண்டம் சென்று இக் கலைஞர்களைச்  சந்தித்ததோடு , இக் கலையை நிகழ்த்தும் களத்திற்குச் சென்று ஆராய்ந்து மகுடத்தின் இசை நுணுக்கத்தை உணர்ந்து கொண்டார் . எனவே   மரபிசைக்குப்  பக்கவாத்தியக் கருவியாக மகுடதைப் பயன்படுத்தியும்  வருகிறார் . இக் கலைஞர்களை உலக மக்களுக்கு அறிமுகம் செய்து ,இக்கலைக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி, இதர இசைக் கலைஞர்களைப் போலவே இக் கலைஞர்களை வாழ வைப்பதே இவரது நோக்கமாகும் ; நாமும் மகுடத்தைப் பரப்புவோம். புகைப்படங்கள் : செல்வி .அகிலா அவர்கள் மகுடக் கலைஞர் களோடு நிகழ்த்திய இசைநிகழ்வின்போது எடுக்கப்பட்டது                           

சனி, 21 ஏப்ரல், 2012

ஆளுமைகளை அறிவோம் : திரு .சு . தியடோர் பாஸ்கரன்



தமிழ் மக்கள் இயற்கையைப்  போற்றி வாழ்ந்தவர்கள் . எனவேதான் தாம் வாழ்ந்த நிலப்பரப்பை குறிஞ்சி, முல்லை, மருதம்,  நெய்தல், பாலை என்று ஐந்து வகையாகப் பிரித்து முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று வகைப்படுத்தி வாழ்ந்தனர் . ஈராயிரத்து ஐநூறு ஆண்டுகால தமிழர் வாழ்வியலில் இயற்கை பிரிக்க முடியாமல் தமிழர்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது .
“ மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
 காடும் உடையது அரண் ” .
“ வரப்புயர நீருயரும்
 நீருயர நெல்லுயரும்
 நெல்லுயர குடி உயரும்
 குடி உயர கோன் உயருவான் ” .
“ இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
 வல்லரணும் நாட்டிற்க்கு உறுப்பு ” .

போன்ற பல்வேறு வரிகள் தமிழர்களின் இயற்கை ஆர்வத்திற்கு சான்றாகத் திகழ்கின்றன . ஆனால் , சமீபத்திய அறிவியல் முன்னேற்றம் , நகர்மயமாதல் , மக்களின் இயற்கை குறித்த புரிதல் இன்மை , பூச்சிக் கொல்லிகள் , உலகம் வெப்பமயமாதல் , மேலைப் பண்பாட்டு மோகம் போன்ற பல்வேறு காரணங்களால் பண்டைத் தமிழ் மக்களால் பேணப்பட்டு வளப்படுத்தப்பட்டு வந்த இயற்கை மிகவேகமாக தனது இருப்பை இழந்து வருகிறது . இவ் இழப்பிலிருந்து நம்மண்ணை விடுவிக்க பல்வேறு ஆளுமைகள் களப்பணியாற்றி வருகின்றனர் அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் திரு . தியடோர் பாஸ்கரன் ஆவார் .

பாஸ்கரன் ஒரு சூழலியல்  மற்றும் காட்டுயிர் ஆர்வலர் ஆவார் . இவர் முன்னர் மதிப்புறு  காட்டுயிர் பாதுகாவலராக இருந்துள்ளார். தற்போது உலகக் காட்டுயிர் நிதியத்தின் இந்தியக் கிளையின் (WWF - India) அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தி டான்ஸ் ஆஃப் தி சாரஸ் (The Dance of the Sarus, சாரசின் நடனம்)என்னும் பெயரில் 1998இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பாஸ்கரன் புகழ்பெற்ற விலங்கியலாளரான உல்லாஸ் காரந்தின் தி வே ஆஃப் தி டைகர் (The way of the Tiger) என்ற நூலை கானுறை வேங்கை” (2006) என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மிகச்சிறந்த திரைப்பட வரலாற்று அறிஞரும் ஆவார்
சூழலியல் பற்றி பாஸ்கரனின் சில கூற்றுகள்:
தமிழர்களைப் போல இயற்கையைப் போற்றியவர்களும் இல்லை...தமிழர்களைப் போல இயற்கையை மறந்தவர்களும் இல்லை
முன்னோர்கள் வளர்த்த தாவரங்களின் பெயர்களைக்கூட மறந்துவிட்டோம். அரணைக்கும் ஓணானுக்கும் வித்தியாசம் தெரியாமல் வளர்கிறார்கள் நம் பிள்ளைகள். பாட்டுப் பாடி தும்பிப் பிடிக்கத் தெரியாமல் வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் நம் குழந்தைகள்."
எழுதியுள்ள நூல்கள்
  • தி மெசேஜ் பியரர்ஸ் - The Message Bearers: The nationalist politics and the entertainment media in South India, 1880-1945, Chennai: Cre-A (1981).
  • தி ஐ ஆஃப் தி செர்பெண்ட் - The Eye of the Serpent: An introduction to Tamil cinema, Chennai: East West Books (1996)
  • தி டான்ஸ் ஆஃப் தி சாரஸ் - The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist, Oxford University Press (1999)
  • ஹிஸ்டரி துரூ தி லென்ஸ் - History through the Lens - Perspectives on South Indian Cinema, Hyderabad: Orient Blackswan (2009)
  • சிவாஜி கணேசன் - Sivaji Ganesan: Profile of an Icon, Wisdom Tree, Delhi (2009)
  • (தொகுப்பு) தி ஸ்பிரிட் ஆஃப் தி பிளாக் பக் - (ed.) The Spirit of the Black Buck, Penguin (2010)
தமிழ்
  • மழைக்காலமும்      குயிலோசையும்,காலச்சுவடு(2003)
(தொகுப்பாசிரியர்)
  • எம் தமிழர் செய்த படம், உயிர்மை (2004)
  • சித்திரம் பேசுதடி, காலச்சுவடு (2004) (தொகுப்பாசிரியர்)
  • தமிழ் சினிமாவின் முகங்கள், கண்மணி வெளியீடு (2004)
  • இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, உயிர்மை (2006)
  • தாமரை பூத்த தடாகம் உயிர்மை (2005)
  • கானுறை வேங்கை, காலச்சுவடு (2006) (மொழிபெயர்ப்பு)
  • வானில் பறக்கும் புள்ளெலாம், உயிர்மை (2011)               


எனது  மாணவர்கள் திரு . தியடோர் பாஸ்கரனை அவரது புத்தகங்களை வாசிப்பதன் மூலமும் அவரது கட்டுரைகளை வாசிப்பதன் மூலமும் தேர்வு வினாத்தாள்களில் அவரது பத்திகளை வாசிப்பது மூலமும்  அறிந்து வைத்திருந்தார்கள் சில மாணவர்கள் அவரது புத்தகங்களை வாங்கியும் வைத்திருந்தார்கள் மாணவர்களிடம் அவரது “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” மற்றும் “கானுறை வேங்கை” ஆகிய புத்தகங்கள்   பெரும் தாக்கத்தைப் பெற்றிருந்தன . எனது வகுப்பில் அவரது பெயர் அடிக்கடி ஒலிக்கும் . திரு . தியடோர் பாஸ்கரன் அவர்களை எனது பள்ளிக்கு அழைத்து மாணவர்களோடு கலந்துரையாடச் செய்ய வேண்டும் என்பது எனது  நெடுநாளைய விருப்பம். எங்களது அழைப்பை ஏற்று எமது பள்ளியில் அரியதொரு சொற்பொழிவை ஆற்றினார். நீங்களும் அதனைக் கேட்கலாம்  . நன்றி : விக்கிபீடியா