சனி, 29 அக்டோபர், 2011

மலைகளை உடைத்து எறியும் அறியாமை ?

            வேரல் வேலி வேர் கோட் பலவின்
            சாரல் நாட செவ்வியை ஆகுமதி
            யார் அஃது அறிந்திசினோரே சாரல்
            சிறு கோட்டுப்பெரும் பழம் தூக்கியாங்கு, இவள்
            உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே -குறுந்தொகை
வேர்ப் பலாக்களுக்கு மூங்கில் வேலியிட்ட மலை நாட்டின் தலைவனே ! சிறிய கிளையில் தொங்கும் பெரிய பலாப்பழம் போல அவள் காதல் பெரிது  ஆனால் உயிர் மிகச் சிறியது . இதை அறிந்தவர் யார்.                                                    மேற்கண்ட பாடலும் விளக்கமும் தலைவியின் காதலை தலைவனுக்கு, தோழி உணர்த்துவதாக அமைந்த பாடலாகும். இப் பாடலில்  குறிஞ்சி நிலத்தின் அழகு எவ்வளவு ( மலையும் மலை சார்ந்த பகுதியும் ) அழகாக, இயல்பாக குறிப்பிடப்பட்டுள்ளது பாருங்கள். இவை நாம் வேகமாக இழந்து வரும் காட்சிகள். இப் பாடலில் ‘வேரல் வேலி’ என்ற சொல் என்னை  கொஞ்சம் சிந்திக்கச் செய்கிறது. வேரல் என்றால் மூங்கில் என்பது பொருள். எனவே வேரல் வேலி என்பது மூங்கிலால் செய்யப்பட்ட வேலி   என்பது பொருள். எனவே நமது முந்தயச் சமூகம் வீட்டிற்கோ அல்லது தோட்டத்திற்கோ வேலி அமைக்காமல் இல்லை. வேலி அமைத்து  பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள்ளேயே வாழ்ந்திருக்கிறார்கள்.ஆனால் நமது முந்தையச் சமூகம் அமைத்திருந்த வேலி எந்த வகையிலும் இயற்கையை மாசுபடுத்தாது, இயற்கையை அழிக்காது .                                              நவீன உலகம் நாகரிகம், நவீனம் என்ற பெயரில் இயற்கையை வேகமாக அழித்து வருகிறது. இவ் அழிப்பில் தோட்டங்களுக்கு அல்லது வீட்டிற்கு வேலி அமைப்பதும்  முக்கிய இடம் பெறுகிறது. நவீன உலகம் சுற்றுச்சுவர் அமைக்க பெரும்பாலும் சிமிட்டி செங்கலையே பயன்படுத்துகிறது. இச் செங்கல் எவ்வாறு செயப்படுகிறது? பெரும் மலைகளை உடைத்து கருங்கற்களாக்கி; பின்னர், அதனை கிறசற் எனப்படும் அரவை இயந்திரத்தில் அக்கருங்கற்களைப் போட்டு உடைத்துப் பொடியாக்கி சிப்ஸ் என்கிற நிலைக்கு அம்மலைகளை உருமாற்றி; மணலும் சிமிட்டியும் கலந்து சிமிட்டி செங்கல் செய்யப்படுகிறது. இச்செங்கல் கொண்டே நவீன உலகம் சுற்றுச்சுவர் அமைக்கிறது; வேலி அமைகிறது.இச் செங்கற்கள் கொண்டிருக்கும் மூலப் பொருட்கள்  என்ன ? கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை உருவாக்கிய மலை, இயற்கையின்  விளைவான ஆறுகளைச் சுரண்டி எடுக்கப்படும் மணல், இயற்கையைச் சுரண்டி உருவாகப் படும் காறைசிமிட்டி. மேற்கண்ட மூலப் பொருள்களில் ஒரு சிறு துண்டை நம்மால் உருவாக்க முடியுமா ? என்றால், அதற்குப் பதில்கூற முடியாது.  நவீன நகர்கள் விளைநிலங்களை அழித்து உருவாக்கப் படுகிறது; ஒழியட்டும்.ஒரு கிரவுண்டு அரை கிரவுண்டு என்று பாடம் பிரிக்கப்பட்டு நூறு, நூற்றைம்பது  வீட்டு மனைகள் உருவாக்கப் படுகின்றன . நூறு, நூற்றம்பது வீடுகளும் புதிதாக கட்டப்படுகின்றன அனைவரும் தனித்தனியாகச் சுற்றுச் சுவர் கட்டுவதுதான் இங்கே இயற்கைக்கு எதிரான பெரும் வன்முறை. அனைவரும் தனித்தனியாக சுற்றுச் சுவர் கட்டவேண்டும் என்று பரப்பியவன் எவன்,  அனைவரும் சேர்ந்து ஒரே ஒரு  சுற்றுச் சுவர்  கட்டினால் என்ன? நாம் செய்வது தவறு என்பது தெரியாமல் தவறைச்  சரியாகச்  செய்து வருகிறோம்; இயற்கையை அழித்து வருகிறோம்.                                            பனையோலை வேலி, பனை கருக்கு மட்டை வேலி, புதர் வேலி, தென்னையோலை வேலி, காட்டாமணக்கு வேலி, கள்ளிச் செடி வேலி, மண் வேலி,அதிகம் வறட்சியைத் தாங்கும் அரளிப்பூச் செடி கொண்டும் வேலி அமைக்கலாமே.  எனவே  பாரம்பரிய முறைகளை நகரங்களில் பரப்புவோம்; இயற்கையையை எதிர் வரும் தலைமுறைக்குத் தருவோம்.                                                                                        
           

வெள்ளி, 28 அக்டோபர், 2011

ஆசான்


    
‘ஆசான்’ என்ற சொல் வழக்கு தமிழ் இலக்கிய மரபிலும் நாட்டார் மரபிலும்   (நாட்டுப்புற வியல்)  வழக்கில் உள்ளது. தற்போது மக்களின் பேச்சு வழக்கிலும் நவீனத் தமிழ் இலக்கியத்திலும் இச்சொல்லைப் பரவலாக காண முடியும் . ஆசான் என்னும் சொல் வெறும் கலைச்சொல் மட்டுமன்று; அது ஒரு கருத்தாக்கமாகவும் அமைந்துள்ளது. எனவே இச் சொல்லின் பொருண்மையை முழுமையாக விளங்கிக் கொள்வது அவசியம்.  ‘ஆசான்’ என்போனை நன்னூலார்(தமிழ் இலக்கண நூல்) ஆசிரியன் என்ற பொருளிலேயே குறிப்பிடுகிறார் .இதனை மாணாக்கனது வரலாறு கூறும் நூற்பாவில் விளக்கி , யார் நூற்களைக் கற்கத் தகுதி உள்ளோர் எனக் கூற “தன் மகன் ஆசான் மகன், என் மகன் பொருள்நனி கொடுப்போன், வழிபடுவோன உரைகோ னாளற்கு உரைப்பது நூலே” (நன் – 37) என்கிறார்.                                                                           ஆசான் மகன் என்பது ஆசிரியன் எனக் குறிக்கப் படுகிறது .மேலும், நன்னூலார் ஆசிரியன் பாடஞ்சொல்லும் வரலாற்றில் மாணவன் எவ்வாறு பாடம் கற்க வேண்டும் என்பதையும் , ஆசான் கற்பித்த நூலை மாணவன் பயிலும் முறையைப் பற்றியும் கூறியுள்ளார்.  அதனை,  “ஆசாற் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்” – (நன் – 04) என்கிறார்.  ஆசானின் புலமையைப் பற்றிக் கூறும்போது நன்னூலார்,  ஆசான் கற்பித்த பொருளை மாணவன்  தாம் மனதில் பதித்துக் கொண்டாலும்,ஆசிரியனது புலமைத் திறத்தில் கால் பங்கை விட அதிகம் பெற முடியாது என்கிறார். “ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு பற்றலன் ஆகும்” ( நன் – 44 ) என்கிறார் . இவ்வாறு ஆசான்களின் சிறப்பை  நன்னூலார் விளக்கியுள்ளார். நன்னூலாரின் கருத்தின் அடிப்படையில் ‘ஆசான்’ என்பவன் கல்விகற்றுத் தரும் ஆசிரியன் என்பது தெளிவு.                                                      ‘ஆசான்’ என்ற சொல்லிற்கு அருகன், உவாத்தி, குரு, தலைவன், மூத்தோன், போன்ற வேறு பெயர்களும் உண்டு.பொதுவாக ‘ஆசான்’ என்பதற்கு கற்பிக்கும் தகுதியுடைய அறிஞன் என்று பொதுவாகப் பொருள் கொள்ளலாம்.                                                      ‘ஆசான்’ என்ற சொல் நாட்டாரியலில் வர்மக்கலை,நாட்டுப்புற மருத்துவம், அடிமுறைக் கலை, சிலம்பக் கலை, களரி, வாள்வீச்சு போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவனைக் குறிப்பதாகும் . ‘ஆசான்’ என்ற சொல் போர்க் கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களைக் குறிப்பதுவுமுண்டு. முற்காலத்தில் இவர்கள் திண்ணைப் பள்ளிக் கூடம் வைத்துக் கல்வி சொல்லித் தந்தார்கள். நாட்டாரியலில் மேற்குறித்த கலைகளில் நன்கு பயிற்சியும் அனுபவமும் பெற்ற ஒருவனே ஆசனாகத் திகளமுடியும். வர்மக்கலையை மருத்துவ ஆசானே கற்றுக் கொடுப்பார். வர்மக்கலை என்பது தமிழ் மருத்துவத்தோடு நெருங்கிய தொடர்புடையது நாட்டாரியலில் ஆசான் பயிற்சி கொடுக்குமிடம் ‘இலங்கம்’என்ற பெயரால் அழைக்கப் படும் . இது ஆசானின் இல்லத்தின் முன்பகுதியிலோ அல்லது சற்றுத் தொலைவிலோ அமைந்திருக்கும். ஆசான்கள் பரம்பரை பரம்பரையாக மேற்கண்ட கலைகளைக் கற்றுத் தருவதும் உண்டு . கன்னியாக் குமரி மாவட்டதில் ஆசான் பரம்பரையினர் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்.                               

புதன், 26 அக்டோபர், 2011

சோமிதரனும் அவர்தம் ஆவணப்படங்களும்

 
தமிழ் என்ற அடையாளத்தைக்   கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதன் மூலம் அதனை அழிக்க முயல்கிறது இந்தியா . இலங்கை  நேரடியாகவே தமிழின   அழிப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. மலேசியா, காதல் இல்லாமல் மனைவியோடு குடும்பம் நடத்துவது போல தமிழ் மொழியையும் மக்களையும் பண்பாட்டையும் நடத்துகிறது . சிங்கப்பூர், தமிழ் மொழியையும் மக்களையும் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளது. இலங்கை பிரச்சனை தொடர்பாக கருத்து கூறிய சிங்கப்பூர் நாட்டைச் செதுக்கிய சிற்பி லீ க்வான் யூ,   “தமிழர்கள் அடிபணிந்து கிடப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை மனஉறுதி நிரம்பவே கொண்ட ஓர் இனத்தின் மக்கள் அவர்கள்” என்கிறார் . இவ்வாறு உலகம், தமிழ் அடையாளம் தொடர்பான கொள்கைகளோடு இயங்க, தமிழர்கள் தமது கடந்தகால  வரலாற்றை எவ்வாறு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் ? என்ற கேள்வியைக் கேட்டால் தமிழர்களிடம் பதிலில்லை . வரலாற்றுப் புரிதலும் இல்லை . “விதியே , விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ” என்று பாரதி நோவது போல நோவதைத் தவிர வேறு வழியும் இல்லை போலும் . இந்த நிலையில் தமிழன அழிப்பு வரலாற்றில் யாழ்ப்பான நூலக எரிப்பு நிகிழ்வு முக்கியமான ஓன்று . ஒரு இனத்தின் மொழியை அழித்துவிட்டால் அந்த இனம் தானாக அழிந்துவிடும். என்ற கோட்பாட்டை மனதில்கொண்டே தமிழர் ஆவணக் கருவூலமான யாழ்ப்பாண நூலகம்  சிங்கள அரச பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது .                                      ஆவணப் படங்கள் வரலாற்று நிகழ்வுகள் குறித்த புரிதலை இளம் தலைமுறையினர்க்கு ஏற்படுத்துகிறது . வரலாறு முழுமையாக ஒரு இனத்தால் புரிந்து கொள்ளப்ப்படுமானால் அவ்வினம் தனியுரிமை பெற்ற இனமாகும் . அந்த வகையில் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வை திரு சோமிதரன், எரியும் நிகழ்வுகள் Burning Memories என்று ஆவணப் படமாக்கியுள்ளார். சோமிதரன் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்தவர் .சென்னையில் உயர்கல்வி பயிலும் இவர் இலங்கை இறுதி யுத்தம் பற்றிய முல்லைத்தீவு சாகா என்ற ஆவணப் படத்தையும் இயக்கியுள்ளார்   கேரள மாநிலத் தலைநகர் திருவானந்தபுரத்தில் நடைபெற்ற 4வது சர்வதேசத் ஆவணத் திரைப்பட விழாவில்  சோமிதரன் இயக்கிய முல்லைத்தீவு சாகா திரைப்படத்திற்க்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.கேரள முதலமைச்சர் உம்மான் சாண்டி இந்த விருதினை வழங்கினார்.பிரபல இயக்குனர் பிரியதர்சன் மற்றும் கேரள அமைச்சர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
              
 ஐந்து  நாட்கள் நடைபெற்ற திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.இந்தியாவில் ஆவணப்படதிற்கென வருடாவருடம் வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானது இந்த விருது. முல்லைத்தீவு சாகா திரைப்படம் ஈழத்தில் நடைபெற்ற இறுதியுத்தம் குறித்து 2010 ஆம் ஆண்டில் எடுக்கப் பட்டது. முல்லைத்தீவு மண்ணில் போருக்கு முன்னர் இறுதியாக நடைபெற்ற கண்ணகி கூத்துக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் இந்தப் படம் போர் விதிமுறைகளை மீறி  மக்கள் கொல்லப் பட்டதையும் சிதைந்து போன மக்களின் வாழ்வையும் காட்சிப் படுத்தியிருகிறது. ஈழத் தமிழர் வரலாறு பற்றிய வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி   போன்ற தமிழர் வரலாற்றின் தவிர்க்க முடியாத ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் .