செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

கொண்டாட்டங்கள்



                        
பட்டாசு துன்புறுத்தும் இரவுகள் !
நரகாசுரனின் இறப்பைக்
கொண்டாட முடியவில்லை .
தேனீக்கள், பறவைகள், பூச்சிகள்
மீண்டும் ஒரு கண்ணனை எதிர்நோக்கியுள்ளன
பட்டாசு நரகாசுரன்
மீண்டும் ஒரு கண்ணனால் கொல்லப்படுவான ?
தன்னை அடையாளம் கண்டு சொன்ன
விண்மீன்களை ஏசு வானில் தேடினார்
அவரது கண்களுக்கு அவை புலப்படவில்லை
கிறிஸ்துமஸ் அலங்கார விளக்குகள் , மின்சார நட்சத்திரங்கள்
அவரது கண்களையே ஒளி இழக்கச் செய்தன .
மின்சாரம் !
அணுமின் நிலையங்களாலும்  அனல்மின் நிலையங்களாலும்
காயம்பட்ட உயிர்களில் ஏசுவும் கலந்திருந்ததால்
மின்சார விளக்குகளினூடே
அவரால், அவரது பிறப்பைக் கொண்டாட முடியவில்லை .
ஒளி , ஒலி ,  இரைச்சல் ,  ஆடம்பரம்
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, தசரா
தனது கையில் உள்ள ஏட்டில்
மின்சார  உற்பத்திக் கழிவு பற்றித் தேடினாள் சரசுவதி
அக்கால ஏட்டில் எக்குறிப்பும் இல்லை ;
நவீனகால ஏட்டில் அக்குறிப்புகள் மறைக்கப் பட்டிருந்தன
அதனால் !
சரஸ்வதி, மின்சாரக் கழிவு குறிப்பைத் தேடிக்கொண்டிருப்பதால்  
அவளுக்கான விழாவை அவளால்
கொண்டாட முடியவில்லை.
மக்களின் ஆடம்பரத்தை வலியுடன் நோக்கினாள்.
மின்சாரக் கழிவுகளால் காயம்பட்ட உயிர்களுக்கு  மருந்திட
கடவுளர்கள் அலைந்து கொண்டிருந்தனர் ?
மருந்தும் புலப்படவில்லை ,  
காயங்களும் ஆறவில்லை .   



தமிழ்கூறு நல்லுலகு
வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
சோழநாடு சோறுடைத்து
சேரநாடு வேழமுடைத்து
தொண்டைநாடு சான்றோருடைத்து
பாண்டியநாடு நல்ல முத்துடைத்து
மீத்தேன் உடைத்து
பச்சைப் பாலைவனம் உடைத்து
கல்பாக்கம் உடைத்து
நெய்வேலி உடைத்து
கூடங்குளம் உடைத்து
தமிழன் நாவில் ஆங்கிலம் உடைத்து
கூலி வேலையோடு
ஐரோப்பாவில்  அமேரிக்காவில்  ஆஸ்துரேலியாவில்
தமிழன் வாழ நிலம் உடைத்து
வடவேங்கடந் தென்குமரி
ஆயிடை
நோயுற்ற உடலுடைய
வெம்பாலைவன உலகு .