சனி, 3 ஆகஸ்ட், 2013

எள்ளுருண்டை



 
அம்மா !
அடிப்பது புரிந்தது .
ஆனால், காரணம் புரியவில்லை.
இரண்டு கன்னத்திலும்  கிள்ளின அம்மாவின் கைகள்!
அம்மாவின் செயலால்
அழமட்டும் முடிந்தது,
அந்த முதலாம் வகுப்புக் குழந்தையால் .
மீண்டும் சீருடையை சோதனையிட்டது அம்மாவின் கண்கள்.
“எத்தன தடவ சொல்றது
சட்டைப் பையில தின்பண்டம் எதுவும் போடக் கூடாதுன்னு”
அம்மாவின் அதட்டலால்
அடிகளின் காரணம் புரிந்தது குழந்தைக்கு.
அடிகளினூடே,அழுகையினூடே,வலிகளினூடே
குழந்தை பேசியது
பள்ளிக் கூடத்தில இன்னைக்கு எள்ளுருண்ட தந்தாங்க
ம் ......... ம் ..........ம் ...........
உங்களுக்கு ரொம்ப பிடிக்குமுண்னு
சட்டைப்பையில போட்டு கொண்டுவந்தே.....ன்
ம்ஊ............   ம்ஊ............   ம்ஊ..............
ஆ ..............ஆ .....................ஆ ...............
துணிகளைத் துவைக்கையியல் உண்டாகும்
உடல்வலியை விடவும்
மனம் அதிகமாக வலித்தது ,கனத்தது.
குழந்தையின் அழுகையில் தோய்ந்து வந்த செய்தியால்.