ஞாயிறு, 23 அக்டோபர், 2011

உளுந்தங்கஞ்சியும் உளுந்தஞ்சோறும்

சுவையான, மணமான உளுந்தங்கஞ்சி, உளுந்தஞ்சோறு  இவை இரண்டும் எங்கள் கன்னியாக் குமரி   மாவட்டத்தில் மிகவும் பிரபலம். இவை என்னைக் கவர்ந்த உணவுகளாகும் . மேற்கண்ட உணவு வகைகள் இரண்டையும் தயாரிப்பதும் சுவைப்பதும் கலையானது மட்டுமல்ல  சுவையானதுமாகும்  . நமது மரபார்ந்த உணவுவகைகள், நமது  மண்ணும் நமது பருவச்சுழலும் நமது மொழியும்  இணைந்து உருவாக்கியவை கண்டிப்பாக நமது உடலுக்கு நன்மை பயப்பவை .
நாம் வெப்பமண்டல வாசிகள். எனவே, நமது உடலுக்கு   நீர்ச்சத்து அதிகம் தேவை ; இதனால் நம் முன்னோர்களால் பருவச் சூழலுக்கு ஏற்ப  உருவாக்கப் பட்டதுதான் இந்தக்  கஞ்சி . கஞ்சி ஒரு எளிய உணவு; பொதுவாக பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர்வரை  எங்கள் ஊரில் சோற்றைக்கூட  கஞ்சி என்று குறிப்பிடும் பழக்கம் இருந்தது . கஞ்சியில் பல வகைகள் உண்டு. அதில் பழைய கஞ்சியும்  ஒரு வகை. பழைய கஞ்சி என்பது முந்தைய நாள் மீதமிருக்கும் வடித்த  சோற்றை சோறு வடித்த கஞ்சித் தண்ணியும் தண்ணீரும் கலந்து வைத்துவிடுவார்கள் மறுநாள் காலை அது பழைய கஞ்சியாகிவிடும் . இக் கஞ்சியோடு இதனைப் பருகும் போது மோர் அல்லது தயிர் கலந்து தேவைக்கேற்ப உப்பும் சேர்த்து உண்பர் . தொட்டுக் கொள்ள துவையல் அல்லது ஊறுகாயைப் பயன்படுத்துவர் .
உளுந்தங்கஞ்சி செய்வது மிகவும் எளிது. ஒரு கிண்ணம் புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனோடு பாதிக்கும் சற்று குறைவாக முழுஉளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும் . இவற்றோடு இரண்டு தேக்கரண்டி வெந்தயமும் சேர்த்து சோறு சமைப்பதற்கு நாம்   பயன்படுத்தும் தண்ணீரைவிட சற்று அதிகமாக தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட வேண்டும் . சற்று வெந்தவுடன் கொஞ்சம் பூண்டு சேர்த்துக் கொள்ளவேண்டும் பின்னர் இளம்தேங்காய்த் துருவல் சேர்த்து வேகவிட வேண்டும் தேவைக்கேற்ப உப்பும் சேர்த்து அனைத்தும் நன்கு வெந்தவுடன் இறக்கி சற்று சூடு ஆறியவுடன்  சாப்பிட, சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு நமக்குக் கிடைத்துவிடும். இதனைப் பருகும் போது , தொட்டுக் கொள்ள துவையல் அல்லது ஊறுகாயைப் பயன்படுத்துவர் .. மரபார்ந்த உணவான இது தற்போதைய தலைமுறைக்குத்  தேவையானது மட்டுமல்ல பயனுடை யதும்கூட .

செய்முறையில் உளுந்தஞ்சோறுக்கும் உளுந்தங் கஞ்சிக்கும் பெரிய வேறுபாடு இல்லை . தண்ணீரை அளவாக வைத்து சோற க்கும் பதத்தில் எடுத்தால் உளுந்தஞ்சோறு ஆயத்தம். உளுந்தஞ் சோறுக்கு தொடு கறியாக நாட்டுக் கோழிக் குழம்பு கண்டிப்பாக அவசியம். உளுந்தஞ் சோறும் கோழிக் குழம்பும் உலகின் சுவையான உணவு வகைகளில் ஒன்றாகவே நான் கருதுகிறேன். மேற்கண்ட உணவு வகைகளை சுவைப்பதோடு தமிழ்மக்களுக்கும் பரப்புங்கள். இதன் ஆற்றலை துறைசர்ந்தவர்கள் ஆய்ந்து உலகுக்குச் சொல்லுங்கள் .
நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வயலில் வேலைசெய்த விவசாயிகளோடு  உளுந்தங்கஞ்சி குடித்த எனது அனுபவம் மறக்க முடியாதது . உணவு வேளையில் நான் சென்றதால் எனக்கும் கஞ்சி பரிமாறப்பட்டது . கஞ்சி பரிமாறப்பட்ட தட்டும் அள்ளிப் பருகத்  தரப்பட்ட தேக்கரண்டியும் இன்றும் மறக்க முடியாதது . மண் தரையில் சிறியஅளவில் குழி பறிக்கப் பட்டது அதில் ஒரு வழையிலை அந்தக்  குழியில் பொருந்துமாறு வைக்கப்பட்டு அதில் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்த அமைப்பு நல்ல குழிந்த ஒரு தட்டில் கஞ்சி ஊற்றப்பட்டிருந்தது போன்று இருந்தது . அள்ளிப் பருக தேக்கரண்டி, பலா இலை ஒன்றை வளைத்து உருவாக்கப் பட்டிருந்தது . உணவோடு கலந்திருக்கும் இயற்கையையும் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும் .
மேற்கண்ட உணவு வகைகளுக்கும் சங்ககால உணவு வகைகளுக்கும்  தொடர்பு இருப்பதை சங்க இலக்கிய வரிகள் நமக்குக் காட்டுகின்றான உளுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை என்பது மேற்கண்ட உளுந்தங் கஞ்சியையோ அல்லது உளுந்தஞ் சோற்றையோ குறிப்பதாகவே இருக்கும். எனவே இவ் உணவுவகைகளை நமது மரபு உணவுகள் என்று கொள்ளலாம்.
                                                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக