வெள்ளி, 28 அக்டோபர், 2011

ஆசான்


    
‘ஆசான்’ என்ற சொல் வழக்கு தமிழ் இலக்கிய மரபிலும் நாட்டார் மரபிலும்   (நாட்டுப்புற வியல்)  வழக்கில் உள்ளது. தற்போது மக்களின் பேச்சு வழக்கிலும் நவீனத் தமிழ் இலக்கியத்திலும் இச்சொல்லைப் பரவலாக காண முடியும் . ஆசான் என்னும் சொல் வெறும் கலைச்சொல் மட்டுமன்று; அது ஒரு கருத்தாக்கமாகவும் அமைந்துள்ளது. எனவே இச் சொல்லின் பொருண்மையை முழுமையாக விளங்கிக் கொள்வது அவசியம்.  ‘ஆசான்’ என்போனை நன்னூலார்(தமிழ் இலக்கண நூல்) ஆசிரியன் என்ற பொருளிலேயே குறிப்பிடுகிறார் .இதனை மாணாக்கனது வரலாறு கூறும் நூற்பாவில் விளக்கி , யார் நூற்களைக் கற்கத் தகுதி உள்ளோர் எனக் கூற “தன் மகன் ஆசான் மகன், என் மகன் பொருள்நனி கொடுப்போன், வழிபடுவோன உரைகோ னாளற்கு உரைப்பது நூலே” (நன் – 37) என்கிறார்.                                                                           ஆசான் மகன் என்பது ஆசிரியன் எனக் குறிக்கப் படுகிறது .மேலும், நன்னூலார் ஆசிரியன் பாடஞ்சொல்லும் வரலாற்றில் மாணவன் எவ்வாறு பாடம் கற்க வேண்டும் என்பதையும் , ஆசான் கற்பித்த நூலை மாணவன் பயிலும் முறையைப் பற்றியும் கூறியுள்ளார்.  அதனை,  “ஆசாற் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்” – (நன் – 04) என்கிறார்.  ஆசானின் புலமையைப் பற்றிக் கூறும்போது நன்னூலார்,  ஆசான் கற்பித்த பொருளை மாணவன்  தாம் மனதில் பதித்துக் கொண்டாலும்,ஆசிரியனது புலமைத் திறத்தில் கால் பங்கை விட அதிகம் பெற முடியாது என்கிறார். “ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு பற்றலன் ஆகும்” ( நன் – 44 ) என்கிறார் . இவ்வாறு ஆசான்களின் சிறப்பை  நன்னூலார் விளக்கியுள்ளார். நன்னூலாரின் கருத்தின் அடிப்படையில் ‘ஆசான்’ என்பவன் கல்விகற்றுத் தரும் ஆசிரியன் என்பது தெளிவு.                                                      ‘ஆசான்’ என்ற சொல்லிற்கு அருகன், உவாத்தி, குரு, தலைவன், மூத்தோன், போன்ற வேறு பெயர்களும் உண்டு.பொதுவாக ‘ஆசான்’ என்பதற்கு கற்பிக்கும் தகுதியுடைய அறிஞன் என்று பொதுவாகப் பொருள் கொள்ளலாம்.                                                      ‘ஆசான்’ என்ற சொல் நாட்டாரியலில் வர்மக்கலை,நாட்டுப்புற மருத்துவம், அடிமுறைக் கலை, சிலம்பக் கலை, களரி, வாள்வீச்சு போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவனைக் குறிப்பதாகும் . ‘ஆசான்’ என்ற சொல் போர்க் கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களைக் குறிப்பதுவுமுண்டு. முற்காலத்தில் இவர்கள் திண்ணைப் பள்ளிக் கூடம் வைத்துக் கல்வி சொல்லித் தந்தார்கள். நாட்டாரியலில் மேற்குறித்த கலைகளில் நன்கு பயிற்சியும் அனுபவமும் பெற்ற ஒருவனே ஆசனாகத் திகளமுடியும். வர்மக்கலையை மருத்துவ ஆசானே கற்றுக் கொடுப்பார். வர்மக்கலை என்பது தமிழ் மருத்துவத்தோடு நெருங்கிய தொடர்புடையது நாட்டாரியலில் ஆசான் பயிற்சி கொடுக்குமிடம் ‘இலங்கம்’என்ற பெயரால் அழைக்கப் படும் . இது ஆசானின் இல்லத்தின் முன்பகுதியிலோ அல்லது சற்றுத் தொலைவிலோ அமைந்திருக்கும். ஆசான்கள் பரம்பரை பரம்பரையாக மேற்கண்ட கலைகளைக் கற்றுத் தருவதும் உண்டு . கன்னியாக் குமரி மாவட்டதில் ஆசான் பரம்பரையினர் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்.                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக